Thottal Thodarum

Jan 2, 2018

கொத்து பரோட்டா 2.0-51

கொத்து பரோட்டா 2.0-51
Arjun Reddy
ஆந்திராவை மட்டுமல்ல. தமிழ் நாடு, கர்நாடகா, வெளிநாடு என எல்லா இடங்களிலும் ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கும் படம். இப்படத்தோடு வெளியான விவேகத்தின் வசூலை விட, அதிக வசூலை வெளிநாடுகளில் ஏற்படுத்திய படம். சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் விவேகத்தின் ஆக்கிரமிப்பால் வெறும் நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அரங்குகள் கிடைத்திருக்க, திங்களிலிருந்து சுமார் 20பதுக்கும் மேற்பட்ட காட்சிகள் உயர்ந்த படம். இந்த அக்மார்க்  தெலுங்கு படம்..

கதையென்று பார்த்தால் நம்ம பழைய தேவதாஸின் லேட்டஸ்ட் வர்ஷன் தான் ஆனால் அதை ப்ரெசெண்ட் பண்ணியிருக்க ரானெஸ் தான் படத்தை அப்படி கொண்டாட வைக்கிறது. மெடிக்கல் காலேஜில் எல்லாவற்றிலும் டாப்பர் ஹீரோ. ஆனால் ஆங்கர் மேனேஜ்மெண்ட்டில் ஜீரோ. ஒரு கோப  தருணத்தில் காலேஜை விட்டு வெளியே போகிறேன் என்று முடிவெடுத்த போது, புதியவளான நாயகி ப்ரீதியை பார்க்கிறான். பார்த்த கணத்தில் அவள் மேல் காதல் கொள்கிறான். அவளின் மேல் அதீத காதல் கொள்கிறான். அவனின் காதலில் அவள் மூழ்கி திளைக்கிறாள். திக்கு முக்காடுகிறாள். காதலின் ஆக்கிரமிப்பை மூச்சு முட்ட அவள் அனுபவிக்கிறாள். அவளின் டாக்டர் கனவும், ஹீரோவின் மாஸ்டர் கோர்ஸும் முடியும் வரை காத்திருக்கிறார்கள். ஒன் பைன் டே ப்ரிதியின் அப்பாவிடம் பெண் கேட்கும் நிர்பந்ததில் போய் நிற்க, நீ என்ன ஜாதி, நானென்ன ஜாதி என அவமானப்படுத்திப் பேச, இருவரும் பிரிய வேண்டிய நிலை. ஆறு மணி நேரத்திற்குள் நீ முடிவெடு, இல்லாவிட்டால் உன் அப்பாவின் விருப்பம் போல நல்ல துளு பையனை பார்த்து கல்யாணம் செய்து கொள் என்று கோபமாய் சொல்லிவிட்டு போய், முட்ட முட்ட குடித்துவிட்டு, ஹை டோசேஜாய் மார்பினை ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட கோமாவில் வீழ்கிறான். பின்பு என்ன ஆனது என்பது கதை..

மெடிக்கல் காலேஜ் வாழ்க்கை, டாக்டர்களின் பின்னணி, அவர்களின் மிதமிஞ்சிய போதை பழக்கம், என முகம் சுளிக்க வைக்கும் விஷயம் காட்சிகளாய் நிறைய இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் காட்டியதை விட மோசமான பழக்க வழக்கங்களை கொண்ட டாக்டர்களை அவர்கள் ஆஸ்டலில் கண்டிருக்கிற படியால் என்னால் ஈஸியாய் ரிலேட் செய்து  பார்க்க முடிந்தது என்பதை மறுக்க முடியாது.

கோபக்காரன், நல்லவன், அதீத அன்புக்கு சொந்தமானவன், காதலிக்காக எதை வேண்டுமானலும் செய்ய துணிபவன், பிடித்த பெண்ணிடம் ஆவேசமாய் கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி காதலை வெளிப்படுத்துபவன் என எனக்கு சேது விக்ரம் நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்த அர்ஜுன் ரெட்டியின் கேரக்டரை மிக அழகாய் முதல் காட்சியில் அவனுடய பாட்டியை விட்டு, அவன் எப்படிப்பட்டவன் என்று விளக்கமிடத்திலிருந்து ஆகட்டும், அவனின் செய்கைகள் ஆகட்டும், திகட்ட, திகட்ட காதலையும், முத்தங்களையும், செக்ஸையும் கொஞ்சம் கூட வக்கிரமில்லாமல் வெளிப்படுத்தும் காட்சிகளாகட்டும், காதலின் வலியை, வலிக்க, வலிக்க, நம்மூள் நிறுத்தி நிதானமாய் மூன்று மணி நேரம் கதை சொல்லி செலுத்திய நுட்பமாகட்டும் அட்டகாச ஃபீல்.

படம் நெடுக மிக இயல்பான கான்வர்ஷேஷன். குறிப்பாய் அர்ஜுன் ரெட்டியின் நண்பன் கேரக்டரும், அவனுடய பாட்டி கேரக்டரும் பேசும்  வசனம்  “அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனுடய வலி. சந்தோஷத்தை ஷேர் பண்ணலாம் வலியை ஷேர் பண்ணச் சொன்னா எப்படி பண்ண முடியும். லெட் ஹிம் சஃபர் ஹிஸ் பெயின்” என்று சொலுமிடம்  அட்டகாசம். இடைவேளை வரும்  காட்சியில் விஜய் மற்றும் ப்ரீதியின் நடிப்பு அட்டகாசம். அந்தக் காதலும், கோபமும், மறுத்தலிப்பும் அவமானமும் விஜய்யின் கோபத்தை ஏற்ற, அவனை முற்றிலும் புரிந்த ப்ரீத்தி அவனை கட்டி அணைத்து, அழுது, திமிரும், அவனை கண்ட்ரோலுக்கு கொண்டு வர,  தன் காதலையும், தற்போதைய நிலையையும் சொல்லும் காட்சி.. நடிப்பும், ப்ரெசெண்டேஷனும், இண்டர்வெல் ப்ளாக் காட்சியும் ஆசம்.. ஆசம்.

படம் நெடுக பின்னணியிசையும், அழகாய் ப்ரேம் வைத்திருக்கிறோம் என்று மெனக்கெடாமல் வைக்கப்பட்ட ஷாட்களும், காட்சிகள் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்க, பாடல்கள் எல்லாம் க்ளாஸிக்கல் பாடல்களாய் ஒலிப்பது இன்னும் க்யூட். உழைப்பு, உழைப்பு எப்பேர்பட்ட உழைப்பு. பெல்லி சூப்புலு படத்தில் சாக்லெட் பாயாக தெரிந்த விஜய் தேவரக்கொண்டாவின் ஆங்கிரி யங் மேனிலிருந்து, மொடாக்குடியன், ஸ்திரிலோலன், உருகி உருகி காதலிப்பவன் என இத்தனை ட்ரான்ஸ்பர்மேஷன்கள் வெளிக்கொணர அவர் செய்திருப்பதுதான் கடும் உழைப்பு. திரை நெடுக இவரை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. முத்தக்காட்சிகள். மிக இயல்பான செக்ஸ், தடாலடியான வசனங்கள் என ஒட்டாமல் அதிர்ச்சி ஏற்படுத்துவதற்காக வக்கிரங்களை மட்டுமே வெளிப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் இன்றைய இளைஞர்களின் மனநிலையில் அட்டகாசமான, போல்டான, மேக்கிங்கில்,  காதல் கதையை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Lipstick Under My Burka
பல விதமான தடைகளைத் தாண்டி வெளியாகியிருக்கும் படம். டைட்டிலே ப்ரச்சனைக்குரிய காரணங்களை சொல்லும். இதன் ட்ரைலர் வேறு இன்னும் கிளப்பிவிட, பெரும் போராட்டத்திற்கு பிறகே வெளியானது. நான்கு சாதாரண பின்னணி கொண்ட மிடில்க்ளாஸ் பெண்கள். பெண்களுக்கான சமூக  அடக்குமுறைகளுக்கிடையே அவர்களின் , காதல், காமம், ஆசாபாசங்கள், விருப்பங்கள்,அடைய நினைக்கும் உயரங்கள், உரிமைகளை  அடைய,  எத்தனை பொய், துரோகம், திருட்டு எல்லா செய்து அடைய வேண்டியிருக்கிறது என்பதை மிக இயல்பாய் சாட்டையால் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.

ஷெரின் முஸ்லிம் பெண். டிபிக்கல் மேல் ஷாவனிஸ்ட் சவுதி அரேபியாவில் பணி புரிந்துவிட்டு, செக்ஸுக்கு மட்டுமே மனைவி என்ற எண்ணத்தை மீறி எதையும் கொள்ளா கணவன்,  இரண்டு குழந்தைகளுடன் புழுக்கத்துடன் வாழ்கிறவள். அவளின் ஒரே சுதந்திர காற்று  மதியங்களில் கணவனுக்கு தெரியாமல்  அவள் செய்யும் சேல்ஸ் வேலை. அதன் மூலம் வரும் சுதந்திர வருமானம்.

லீலாவுக்கு இந்த கீக்கிடமான போபாலிலிருந்து டெல்லிக்கு போய் சொந்தமாய் தொழில் செய்து முன்னேற வேண்டுமென்ற ஆசையுடையவள். அவளின் குறிக்கோளூக்கு இருக்கும் ஒரே ஆதரவு போடோகிராபர் காதலன். அவனும் எப்போது வேண்டுமானாலும் கழட்டிக் கொள்ள விழைகிறவன். அவனை தன்னுடன் வைத்துக் கொள்வதற்காக செக்ஸை முன்னிலைப்படுத்தி கண்ட்ரோல் செய்து கொண்டிருப்பவள்.

ரிஹானா கல்லூரி மாணவி. புர்கா தைத்து விற்கும் மிடில் க்ளாஸ் முஸ்லிம் குடும்பத்துப் பெண். புர்காவுக்குள் இருக்கும் அவளின் நிஜ விருப்பமோ ஒரு பாடகி ஆவது. ஜீன்ஸும், டாப்ஸுமாய் இக்கால இளைஞிகளின் கனவுகளோடு வளைய வருகிறவள். வீட்டிற்குள் ஒருத்தியாகவும், வெளியே வேறொருத்தியாகவும் தன் கனவுகளை அடைய விழைகிறவள்.
உஷா ஆண்டி. ஐம்பதுகளில் பக்தி புத்தகங்களுக்கிடையே சாப்ட் போர்ன் நாவல்களின் மூலம் தன் செக்ஸுவல் உணர்வுக்கு வடிகால் தேடிக் கொண்டிருப்பவள். அந்த ஜன்னலுக்கு வெளியே என்னை அழைத்துப் போக ராஜகுமாரன் வருவான் என்று கற்பனை செய்து கொண்டிருப்பவள். அவளின் உணர்வுகளின் வடிகாலுக்காக அவள் செய்யும் போன் செக்ஸ்

இப்படி நான்கு கேரக்டர்களிடையே மிக இயல்பாய் சமூகத்தில் பெண்கள் மேல் திணிக்கப்படும் சமூக நற்குண அழுத்தங்களிடமிருந்து அவர்கள் வெளியே வர நடந்தும் போராட்டங்களை சொல்லியிருக்கிறார்கள். ஷெரினாக வரும் கொங்கனா சென்னின் நடிப்பு ஆசம். வெளிநாட்டிலிருந்து வரும் கணவனின் அதீத செக்ஸ். காண்டம் யூஸ் பண்ணினால் அடுத்த குழந்தை பிறப்பையும், உன் உடல் நிலையையும் காத்துக் கொள்ளலாம் என்பதை அடிப்படைவாதியான கணவனிடம் சொல்ல முடியாத ப்ரச்சனை. எப்படியாவது தன் வேலையை பற்றி சொல்லி விட வேண்டுமென்று பரிசாய் கிடைத்த ஓவனில் கேக் செய்து புருஷனிடம் கொடுத்துவிட்டு, கேக் செய்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லி எப்படி என்று கேட்பான் அவனிடம் கேக் செய்வதற்கு ஓவன் வந்த கதையோடு சொல்லி வேலை செய்வதை விளக்கலாம் என்று ஆர்வத்துடன் இருக்க, தனியே இருக்கும் சந்தர்பத்தையும் பயன்படுத்தி கேட்க, அருகில் உட்கார, அவன் அவளை செக்ஸுக்கு அழைத்து அவளின் பேச்சை கேட்க மறுப்பதும், அக்காட்சி முடிந்ததும், தளும்பும் கண்ணீருடன் புருஷனுக்காக வைத்த கேக்க அவர் முழுங்கும் காட்சி .

உஷா ஆண்டியிடம் அவர் வயது ஒத்த ஒருவரை காட்டி, அவருடய மனைவி இறந்துவிட்டதாகவும், இவருக்கு ஏற்ற பெண் யாராவது இருந்தால் சொல்ல்லுங்கள் என்று உற்வுக்காரப் பெண் கூற, அவர் ஆமாம் ஆண்டி என்று அழைக்கும் போது காட்டும் முக பாவம். தன் கனவுக்காதலனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் இருக்க, உங்க பேர் என்ன என்று கேட்க, ஆண்டி என்று மட்டுமே பெரும்பாலும் அழைக்கப்பட்டு, அவளின் உண்மை பெயரை மறந்து சட்டென ஆண்டி என்று சொல்லுமிடம், அது மத்தவங்களுக்கு உங்கள் நிஜ பேர் என்றதும் யோசித்து வெட்கப்பட்டு உஷா எனும் இடமெல்லாம் ஆசம்.
போலி பெண்ணிய வாத திரைப்படங்களுக்கு மத்தியில் பெண்ணியம் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் அதிலிருந்து அவர்கள் வெளிவர போராடும் போராட்டம். மூச்சு முட்ட அமுக்கும் சமூகம். இவைகளிடமிருந்து வெளி வருவோம் என்ற துளி கீற்று நம்பிக்கையுடன் காட்டப்படும் கடைசிகாட்சி நம்பிக்கை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Post a Comment

No comments: