Thottal Thodarum

Jan 5, 2018

சாப்பாட்டுக்கடை - நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்


பட்டுக்கோட்டை காரர்களுக்கு இந்த பெயரை கேட்டாலே நாவில் நீர் ஊரும். கே.ஆர்.பியிடம் சொன்ன மாத்திரத்தில் அவர்களிடம் சாப்பாடு அட்டகாசமாய் இருக்குமென்றார். நண்பர் ஸ்ருதி டிவி கபிலன் தன் பிறந்த நாள் விருந்துக்கு  அழைத்திருந்தார். நீங்களே ஒரு இடத்தை தேர்தெடுங்கள் என்றதும் நான் சொன்ன பெயர் மேற்ச் சொன்ன இடம் தான். 12 .30 மணிக்கே போய்விட்டதினால் அப்போதுதான் பூஜை போட்டுக் கொண்டிருந்தனர். ரெண்டு பேர் சாப்பிட காத்திருந்தனர். ஓனர் செல்வத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார் அங்கிருந்த சினிமா தயாரிப்பாளர் என்னைப் பார்த்ததும். 
டெய்லி பேப்பரை கீழே போட்டு அதன் மேல் தலை வாழை இலை போட்டார்கள். பாட்டிலில் வாட்டர்.  இலை கழுவி விரித்த மாத்திரத்தில் இரண்டு பொரியல்கள், ஒரு தொக்கு. அந்த தொக்கின் பெயரைச் சொன்னால் சில பேர் மூக்கில் விரல் வைத்தபடி சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். பல பேர் ஆழமாய் மூச்சிழுத்து சேம் சப்பு கொட்டு சாப்பிடுவார்கள். கருவாட்டு தொக்கு வைத்தார்கள். ஆகா ஆரம்பமே அசத்தலாயிருக்கிறதே.. 

ஒரு சிக்கன் சாப்பாடு, ஒரு மட்டன் சாப்பாடு, ஒரு எரா சாப்பாடு, ஒரு மீன் சாப்பாடு என்று ஆர்டர் செய்தோம். கூடவே ஒரு நாட்டுக்கோழி ப்ரை, மட்டன் சுக்கா, கோலா உருண்டை, வஞ்சிரம் மீன் ப்ரை, கரண்டி ஆம்லெட் என லிஸ்ட் நீண்டது

சாதம் பரிமாறப்பட்ட உடன் சிக்கன் கிரேவி என திக்காய் ஒரு திரவத்தை ஸ்பூனில் பரிமாறினார்கள். இன்னும் கொஞ்சம் கேட்க, இத சாப்புடுங்க.. வேணும்னா இன்னும் தர்றோம் என்றார்கள். ஸ்பூனில் ஊற்றியதை சாதத்தில் கலக்க, கிரேவியின் டென்சிட்டி பரந்து விரிந்து நிறைய சாதத்தை அடைந்தது. வாயில் வைத்த மாத்திரத்தில் அட.. அட.. அட என்று சொல்லி முடிப்பதற்குள், காடை கிரேவி, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, நண்டு கிரேவி, எரா கிரேவி, மீன் குழம்பு. என வரிசைக் கட்டி வர, ஒவ்வொன்றும் ஒவ்வொரு டேஸ்ட். முக்கியமாய் நண்டும், சிக்கன் குழம்பும் ஆசம் என்றால் ஆசம். மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, என்பதையெல்லாம் பெயரில் மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு ஒவ்வொரு குழம்பிலும் ஒவ்வொரு துண்டுகளோடு பரிமாறப்படுவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.  சிக்கன் குழம்பு அவ்வளவு அருமையான மசாலாவோடு, நன்கு வெந்த சிக்கன் துண்டுகளோடும், மட்டன் குழம்பில் மட்டன் துண்டுகள், என எல்லா கிரேவிக்களும், ஸ்பூனில் தான் தருகிறார்கள். எரா ப்ரை சூப்பர். நாட்டுக் கோழியின் மசாலாவும், சிக்கன்மசாலாவும் சேம் டேஸ்டாய் இருந்தது. வஞ்சிரம் மீன் ப்ரை ஆசம். முக்கியமாய் ஒரு விஷயம் சாப்பாடு பரிமாறும் போதே சின்ன வெங்காயத் துண்டுகளை வைக்கிறார்கள். பல விதமான குழம்புகளை நாம் சாப்பிடும் போது டேஸ்ட் வித்யாசம் தெரிய ஒவ்வொரு குழம்புக்கு இடையேயும் ஒரு கடி இந்த வெங்காயத்தை கடித்துக் கொண்டுவிட்டு, அடுத்த கிரேவிக்கு போனால் இன்னும் சிறப்பு. சின்ன வெங்காயம் உடலுக்கும் நல்லது. கோலா  உருண்டையில் லவங்கப்பட்டை தூக்கலாய் இருந்தால் கோலாவின் டேஸ்டை கொஞ்சம் குறைத்தது.  

பைனல் டச்சாய், அருமையான ரசம். உடன் மோர். வேண்டுமென்றால் தயிர் தருகிறார்கள் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. சாப்பிட்டு முடித்துவிட்டு, வெளியே வந்தால் இலவச வேர்கடலை பர்பி.   டேஸ்டுக்காக அவர்களின் பிரியாணியை ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தேன். சீரக சம்பாவின் மணம் அருமையாய் இருந்தது. அளவான மசாலாவோடு. ஒரு நாள் வெறும் பிரியாணியை மட்டும் மற்றொரு சீட்டிங் நாளில் கட்ட வேண்டும். 

டிபிக்கல் வீட்டு சாப்பாடு போல வகை தொகை இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் என்னுடய தற்போதைய ரெக்கமெண்டேஷன் நீயூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்.

செஃப் சுதாகரையும் சந்தித்துவிட்டுத்தான் வந்தேன் மேற்ச்சொன்ன குறைகளையும் சொன்னேன். ஏற்கனவே பல பிரபலங்களின் வருகையால் இடப்பற்றாகுறையாய் இருப்பதாய் சொன்னார்கள்.  தி.நகரில் பிக்பஜாருக்கு பின்புறம் உள்ள ஜல்லிக்கட்டு உணவகத்துக்கு பின்னால் இந்த உணவகம் உள்ளது. என்சாய். நன்றி ஸ்ருதி டிவி கபிலன் வாழ்க பல்லாண்டு.

முக்கிய அறிவிப்பு. இந்த உணவகம் மதியம் லஞ்சுக்கு மட்டுமே செயல்படுகிறது. ராத்திரியில் போய் ஏமாற வேண்டாம். 

Post a Comment

1 comment:

Unknown said...

ஜல்லிக்கட்டு உணவகம் சாப்பிட்டு இருக்கிறீர்களா ? ஜல்லிக்கட்டு உணவகம் நல்லா இருக்குமா ?