Thottal Thodarum

Nov 12, 2018

இருட்டு அறையில் “சென்சார்” குத்து

இருட்டு அறையில் “சென்சார்” குத்து
ஆம் சென்ஸார் குத்துதான். அது ஏ படம். வயது வந்தவர்களுக்கான படம். அதில் ஆபாசமான காட்சிகள் அனுமதிக்கப்பட்டவைதானே? இதில் என்ன பிரச்சனை? என்று கேட்டீர்களானால், நிச்சயம் எல்லா படங்களையும் ஒரே தராசில் வைத்து அவர்கள் பார்ப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்திற்கு அனுமதி அளித்ததே தவறு என வாதிட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு மத்தியில் ஏன் எங்கள் படங்களுக்கு இவ்வளவு ஸ்ட்ரிக்டு என கேள்வி வைக்கும் இந்த கட்டுரை அபத்ததின் உச்சமாய் கூடத் தெரியும். ஆனால் நிஜத்தை பேசியே ஆகவேண்டும்.
வசவு வார்த்தைகள், குழந்தைகள் மீதான வன்புணர்வு, டபுள் மீனிங் வார்த்தைகள் பெண்களின் க்ளீவேஜ், மற்றும் பின்புற பாகங்கள் ஆட்டுவதை காட்டுவது, உடலுறவை வெளிப்படையாய் காட்டுவது, முத்தக்காட்சி என பல லெவல்களில் சென்சார் தன் வேலையை செய்ய அரசு சட்டம் வகுத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் எல்லா படங்களுக்கும் ஒரே விதமாய் யாரும் பார்ப்பதில்லை.

உதாரணமாய் எங்களுடய “6 அத்தியாயம்” படத்திற்கு சென்சாரில் “ஏ” சர்டிபிகேட் கொடுத்தார்கள். எங்களின் படத்தில் உள்ள காட்சிகளின் தரம் பற்றி எங்களுக்கே தெரிந்திருந்தாலும், அக்காட்சிகளுக்காக யு/ஏ கொடுத்தால் தப்பில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் கிடைத்ததோ “ஏ” அதுமட்டுமில்லாமல் 12 காட்சிகள் கட் செய்ய வேண்டுமென்றார்கள். அதை விட மிக முக்கியம் இயக்குனருக்கான மரியாதையை கொடுக்காமல் பேசியது. நானே சேரை எடுத்து போட்டு பேசினேன். உங்கள் கதையில் மிருக உறவு பற்றி காட்சி வைத்திருக்கிறீர்கள், குழந்தை மீதான வன்புணர்வு சம்பந்தப்பட்ட காட்சி வைத்திருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் காட்சியிலிருந்து தூக்க வேண்டும். என்றார்கள். மிருக உறவு காட்சியை அனிமேஷனில் செய்து, அதை வெளிப்படுத்தாத வகையில் நாங்களே மறைத்து சென்சார் செய்துதான் படத்தில் காட்டியிருப்போம். அது போல குழந்தை மீதான வன்புணர்வு காட்சிகளில் ஒரு ஷாட்டில் கூட அக்குழந்தைமீது அந்த ஆணின் கை படுபடியாகவோம், அல்லது வக்கிரமாய் அணுகும் காட்சிகளோ கிடையாது. மிகவும் நாசூக்காக அதை வெளிப்படுத்தியிருப்பார் அக்கதையில் இயக்குனர். இப்படியிருக்க, அக்காட்சிகளை கட் செய்து விட்டால் கதையில் என்ன சம்பவம் நடந்தது என்றே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புரியாது. அதே போல படம் முடிந்து வரும் அனிமேஷன் காட்சியில் பேய் ஒன்று சுடுகாட்டில் ஆடுகிறது. அதன் கால்களில் கொலுசை மாட்ட விழையும் ஒரு மனிதன் அதை தூக்கிப் போட,அந்த கொலுசு, அங்கிருக்கும் பல மத, சமாதிகளைத் தாண்டி, போய் அந்த பேயில் இல்லாத காலில் மாட்டிக் கொள்ளும். அதில் இந்து சமாதி, கிறிஸ்துவர் சமாதி எல்லாவற்றையும் தாண்டிப் போய் விழும். அது மத நல்லிணக்கத்தை கெடுத்துவிடுமாம். அதே போல பாடல் முடியும் போது சும்மா ரிதமுக்காக “சண்டா மாத்தே” என்று ஒரு அர்த்தமில்லாத வார்த்தை இருக்கும். அதைப் பற்றி தமிழ் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு விவாதித்தார்கள். கேட்டால் அவர்கள் நேர்மையானவர்களாம். பின்னால் யாராவது சென்சாரை குறை சொல்லக்கூடாது என்பதற்காக உழைக்கிறோம் என்றார்.

எனக்கு சிரிப்பாய் வந்தது. குழந்தை வன்புணர்ச்சியை மையமாய் வைத்து சிறிது காலத்துக்கு முன்னால் தான் ஒரு முழு படம் வெளியாகியிருந்தது. அதில் ரத்தப் போக்கெல்லாம் கூட காட்டப்பட்டிருக்கும். அதற்கு யூ/ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறீர்கள். என கேட்டால் அது வேறு டீம் என்பார்கள். அவர்களிடம் நான் கேட்டதே. இதையெல்லாம் கட் செய்தால் யூ சர்டிபிகேட் கொடுப்பீர்களா? என்றுதான். இல்லை. ஏக்கே இதையெல்லாம் கட் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு கூட எதிர்பாராமல் கிளம்பிவிட்டார்கள். இதையெல்லாம் கட் செய்தால் யூ/ஏ கொடுங்கள். ஏ கொடுக்கும் பட்சத்தில் எந்த கட்டுக்கும் எனக்கு உடன்பாடு கிடையாது என்று சொல்லிவிட்டு மீண்டும் ட்ரிபூனலுக்கு சென்று எந்த கட்டும் இல்லாமல் ஏ வாங்கினோம். அதில் அவர்கள் சொன்ன விளக்கங்கள் செம்ம காமெடி. தனிக்கதையே எழுதலாம்.

இது போன்ற அபத்தங்கள் என் படத்துக்கு மட்டுமல்ல, பல படங்களுக்கு நடந்தேறியிருக்கிறது. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு அனுபவம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். மேலே சொன்ன அத்துனை விஷயங்களையும் கட்டே செய்யாமல் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் டபுள் மீனீங்க் என்றில்லாமல் அத்தனையும் ஸ்ட்ரையிட் மீனிங், பெண்களின் க்ளீவேஜ் காட்டினாலே அத்துனை நேர்மையாய் இருக்கும் சென்சார் ஆட்கள் அதிலும் ஒரு பெண் சென்சார் ஆபீசராயிருக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட முழு மார்பையும் காட்ட விழையும் காட்சிகள், குறி பற்றிய விளக்கங்கள். காமத்தைப் பற்றிய பேச்சுக்கள். இரண்டு ஆண்கள் கிறிஸ்துவ பாதிரியார் போலவும், கன்னிகாஸ்தரி போலவும் வேடம் போட்டுக் கொண்டு செக்ஸுக்காக அலைந்து, டபுள் மீனீங்கில் பேசுவதையும், எந்தவிதமான சவுண்ட் மீயூட்டும் இல்லாமல் அப்படியே காட்டப்பட்டிருக்கிறது. ஏ படம் தானே? வயது வந்தவர்களுக்கான படம் அவர்களுக்கு இது தவறில்லை என்று வாதிடுகிறவர்களுக்கு மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் இல்லாத எங்கள் படத்தி?ற்கு அவர்கள் சொன்ன காரணங்களை பற்றி யோசியுங்கள். சின்ன படங்களுக்கு ஒரு ரூல், கிம்பளம் கொடுத்து கவனிக்கப்படும் படங்களுக்கு ஒரு ரூல் என்பது தான் உண்மை.

இந்த ப்ரச்சனையை இங்கே எழுதுவதற்கான காரணம் நிறைய செக்ஸ் படங்கள் வர வேண்டும் என்பதற்காக அல்ல, பேச வேண்டிய பல வயது வந்தவர்களுக்கான விஷயங்கள் நிறைய உள்ளது. அதை காட்ட வேண்டுமானால் அதற்கு இம்மாதிரியான ஓரவஞ்சகம் இருக்கக்கூடாது. சென்சார்.. கட்டிங்க்  கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அனைவருக்கும் பொதுவானதாயிருந்தால் தான் சினிமாவுக்கு நல்லது.


Post a Comment

2 comments:

King Viswa said...

அங்கிள்,

தயவு செஞ்சு இந்த Fontஐ மாத்துங்க.

suresh said...

நான் உங்கள் பிளாக் ரசிகன் எல்லா பதிவுகளையும் தவறாமல் படிப்பவன். உங்களிடம் சில சொல்ல விரும்புகிறேன். நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்க உங்களுக்கு படம் எடுக்க இந்த சப்ஜெக்ட் தான கிடைத்தது? அந்த படத்துக்கு கட் இல்லை என்பது எப்படி இருக்கிறது என்றல் "நீ ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறாய் என்று கேட்டல் அவனை பார் எதையோ(#@#&) கழுவாமல் சாப்பிடுகிறான் " என்று எதிர் கேள்வி கேட்கிறீர்கள்? ஏன் உங்களுக்கு நல்ல படங்கள் தாக்கத்தை கொடுக்கவில்லையா? உங்களுக்கு கல்லா கட்ட இ அ மு குத்துதான் ரோல் மாடல் போல.