Thottal Thodarum

Apr 2, 2024

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

ஒரு காலத்தில் ட்ராவல் செய்யப் போகிறோம் என்றாலே வீட்டிலிருந்து தூக்குசட்டியில் உணவு எடுத்துப் போன காலம் உண்டு. கடந்த இருபது வருடங்களில் ஹைவே உணவங்கள் மிக பிரபலமாக, பல உணவகங்கல் நல்ல தரத்துடன் இருக்க, பயணங்களில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லாமல் போனது. பயணங்களில் வெஜ் உணவுதான் சேஃப் என்ற ஒரு எண்ணத்தை ஒரு சில உணவங்கள் மாற்ற ஆரம்பித்தது. அப்படியான ஒரு உணவகம் தான் இந்த டி.கே மாப்பிள்ளை மெஸ். இனி நாம் நல்ல நல்ல நான் -வெஜ் உணவுக்காக 99-100 கி.மிட்டர் எல்லாம் பயணப்பட தேவையில்லை. சென்னையிலிருந்து திருச்சி ரோட்டில் சரியாய் 77வது கி.மீட்டரில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. 

நல்ல இண்டீரியருடன் ஏசி உணவகம். உள்ளே நுழைந்ததும் அவர்கள் போட்டிருந்த அறிவுப்பு போர்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தியது.அஜினோமோட்டோ என்கிற சேர்க்கையே அவர்களின் உணவுகளில் கிடையாது என்றிருந்தார்கள். அதே போல பார்ப்பிக்யூ உணவுகளை சமைப்பதற்கு சல்பர் சார்க்கோல் உபயோகிக்காமல் சமைக்கிறோம். எல்லா உணவுகளை அவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தான் சமைக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். சாப்பிட வருகிறவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் பார்த்ததும் யாராச்சும் டாக்டர் இந்த ஹோட்டல் ஓனரா என்று கேட்ட போது ஆமாம் என்றார்கள். 

நண்பர்களுடன் சென்றிருந்தால் அவர்களின் மெனு கார்டை பார்த்து ஆளூக்கொரு அயிட்டம் ஆர்டர் செய்து ருசி பார்ப்போம் என்று ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம். மட்டன் சாப்ஸ் ஒரு நல்ல பெரிய பீஸோடு க்ரேவியால் மினுமினுத்தது. நல்ல சதைப்பிடிப்போடு அதிக காரம் இல்லாமல் அட்டகாசமாக இருந்தது. அடுத்ததாய் நாங்கள் சாப்பிட்டது நாட்டுக்கோழி சாப்ஸ் அதிக மசாலா இல்லாமல் நாட்டுக்கோழியின் டிபிக்கல் சுவையோடு, ஜூஸியாய் இருந்தது. மட்டன் சுக்கா நல்ல சின்னத் சின்ன துண்டுகளோடு நல்ல காரப் பிரட்டலோடு நன்கு வெந்த ஃபீஸ்களோடு அதன் கிரேவியை சாதத்தோடு சாப்பிட செம்ம டேஸ்டாய் இருந்தது. பள்ளிப்பாளையம் சிக்கன் டேஸ்ட்டும் அப்படியே தான். டிபிக்கலாய் கோவை ஸ்டைல் பள்ளிப்பாளையமாய் இல்லை. தேங்காய் இல்லாத பள்ளிப்பாளையம் போல இருந்தது. சிக்கன் 65 நல்ல க்ரிஸ்பியாய் இருந்தது.  

ஒரு சிக்கன், மட்டன் பிரியாணி, மற்றும் ஒரு சாப்பாடு ஆர்டர் செய்திருந்தோம். பிரியாணி பாஸ்மதிதான். எனக்கு எப்போதும் பிரியாணி என்றால் மட்டன் தான் என்பதால் மட்டன் பிரியாணி தான் எடுத்துக் கொண்டேன். ஓவர் மசாலா இல்லாத ப்ளெண்ட் பிரியாணி. நன்கு வெந்த ப்ஸுகளுடன். அடுத்த சாப்பாட்டுடன் சாப்பிட கொடுத்திருந்த மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி மற்றும் மீன் குழம்பு வரிசை கட்டி இருக்க, முதலில் மட்டன் கிரேவியை ஊற்றிக் கொண்டேன். நல்ல கெட்டியான குழம்பு. வழக்கமாக மட்டன் குழம்பு பெரும்பாலும் மட்டன் வாசனையே இல்லாமல் இருக்கும் இவர்களின் குழம்பில் நல்ல மட்டன் வாசம். பெப்பரும் காரமும் நன்றாக இருந்தது. அடுத்ததாய் சாப்பிட்ட சிக்கன் குழம்பு குட். எல்லாவற்றுக்கும் மேலாய் சாப்பிட்ட மீன் குழம்பு. அட அட அட செம்ம.. செம்ம மட்டுமல்ல டிவைன் லிஸ்டில் சேர்த்துவிடலாம். அளவான காரம். அளவான புளீப்பு. நல்ல மீன் துண்டோடு கொடுத்திருந்தார்கள். எல்லா அயிட்டங்களை எடுத்து வைத்துவிட்டு வெறும் மீன் குழம்பை மட்டுமே மூன்று ரவுண்ட் அடித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

கிரில் சிக்கன், தந்தூரி, போன்றவகைகளும் இருக்கிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்தது கிரில் சிக்கன். நல்ல ஜூஸியாய் திகட்டாத மசாலாவில்  இருந்தது. முக்கியமாய் இவர்களின் பிரியாணியோடு கொடுக்கும் ப்ரெட் அல்வாவின் டேஸ்ட் செம்ம

அஜினோமோட்டோ போன்ற வஸ்துக்கள் இல்லாத நல்ல தரமான செக்கு எண்ணெய்யில் சமைத்த இந்த உணவுகள் வயிற்றுக்கோ செரிமானத்துக்கோ எந்தவிதமான தொந்திரவும் செய்யவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா?. இவர்கள் காலை உணவை மிகவும் சிலாகித்து சொல்கிறார்கள். நிச்சயம் ஒரு முறை ட்ரை செய்ய வேண்டும். அதே போல இரவு உணவு. இனி நம் பசிக்கும் ருசிக்கும் 77 ஆவது கிலோமீட்டரிலேயே விருந்து தயாராக இருக்கிறது. டிவைன் மீன் குழம்பை மதிய சாப்பாட்டில் மிஸ் செய்யாதீர்கள். 

D.K. Mappillai Mess
460/1b1, Grand Southern Trunk Rd, 
next to Indian oil bunk, 
maduranthagam, 
Karunguzhi, 
Tamil Nadu 603303
9003111302
9444373193

Post a Comment

No comments: