Thottal Thodarum

Mar 5, 2019

Subbura – Blood on Rome -web series

Subbura – Blood on Rome
அமெரிக்க படங்களுக்கும் மற்ற நாட்டு படங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும். குறிப்பாய் ஐரோப்பிய படங்களுக்கும் ஹாலிவுட்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஆக்‌ஷன் கதைகளைக்கூட கொஞ்சம் அழகுணர்வோடுதான் அவர்கள் எடுக்கிறார்கள். கொஞ்சம் எமோஷனுக்கு முக்யத்துவம் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் போல ப்ளாஸ்டிக் தனமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நம்மூர்  படங்களுக்கும் கொரிய படங்களுக்கும், உடை, உணவு போன்றவற்றில் வித்யாசம் இருந்தாலும், குடும்ப அமைப்புகளில், உறவுகளில் உள்ள பின்னல்கள் எல்லாம் கிட்டதட்ட தமிழ் படம் போலவே இருப்பதால் தான் மிக ஈஸியாக சுட்டுத்தள்ள முடிகிறது. படங்களைப் போலத்தான் வெப் சீரீஸ்களும். ஹாலிவுட் சீரீஸ்கள், கொரிய சீரிஸ்கள் என வரிசைக் கட்டி அணிவகுத்திருக்கும் நெட்பிளிக்ஸில் நிறைய ஐரோப்பிய சீரீஸ்களும் உண்டு. சமீபத்தில் பார்த்த சீரீஸ் சுப்பூரா எனும் இத்தாலிய சீரீஸ். வாடிகனுக்கு சொந்தமான நிலம் ஒன்று இருக்கிறது. அதை அடைய சமுராய் எனும் தாதா கும்பலும், அரசியல் பலமுள்ள ஒரு லாபியிஸ்ட் பெண்ணும், அந்த இடத்துக்கு பக்கத்திலேயே இன்னொரு இடம் வைத்திருக்கும் இன்னொரு தாதா குடும்பமும் ஆசைப் படுகிறது. சமுராய் பெரிய தாதா. இதன் நடுவில் ஜிப்ஸிக்களின் தாதா கும்பல். தேவையேயில்லாமல் ஹெராயின் விற்று பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஒர் போலீஸ்காரரின் மகன். நேர்மையான அரசியல்வாதி ஒருவனை வைத்து அரசியலில் காய் நகர்த்த அவனை மிரட்டும் சமுராய்.

ப்ரச்சனை நிலம் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் பின்னணியில்  வாடிகன். பாதிரிமார்களின் செக்ஸுவல் அபிலாஷைகள். கணவனுக்கு துரோகம் செய்து போலீஸ்காரர் மகனுடன் சல்லாபிக்கும் லாபியிஸ்ட்.. மெயின் தாதாவான சமுராய் எல்லா இடத்துக்கும் நேரடியாய் போய் ப்ரச்சனையை எதிர் கொள்ளும் விதமும், பயமுறுத்தும் விதமும் ஸ்லீக் குத்துக்கள். அதே நேரத்தில் இன்னொரு தாதா ஜாயிண்டின் தலைவனை ஒழித்துக்கட்ட சரக்கு விற்ற கல்லூரி மாணவனை வைத்தே கொல்வதும். அந்த பையன், ஜிப்ஸிகளின் இளவரசன், தாதாவின்பையன் மூவரிடையே உருவாகும் நட்பு. ஜிப்சியின் தன்பால் ஈர்ப்பு பிரச்சனை. என டீடெயிலாக தாதாக்கள் ஆனாலும் அழகாய் விரிவாய் சொல்லியிருக்கிறார்கள்.

நட்பினிடையே ஏற்படும் துரோகள் தெரியவரும் போது நடக்கும் உணர்ச்சி போராட்டங்கள். தாதாவின் மறைவுக்கு பிறகு அக்கா – தம்பிக்கிடையே ஏற்படும் துரோக பழிவாங்கல் காட்சிகள் என நிறைய ட்ராமாவோடு ஆர்பாட்டமில்லாத ஒர் தாதாக்கள் கதையை சொல்லியிருக்கிறார்கள்.

அதிரடி எபெஃக்டுகள் கிடையாது. ஆர்ப்பாட்டமான இசை கிடையாது. ரேஸியான பத்து செகண்ட் எடிட் கட் கிடையாது. அடுத்தடுத்த காட்சிகளுக்கு தாவும் போலியாய் பரபரக்கும் திரைக்கதை கிடையாது. ஆனால் ஒவ்வொரு எபிசோடும் நம்மை கட்டிப்போடும் அற்புதமான விஷுவல்கள். ரோமில் எங்கு கேமரா வைத்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. தேர்ந்த நடிகர்களின் நடிப்பு. குறிப்பாய் சமுராயாய் வரும் நடிகரின் கண்ட்ரோல்ட் நடிப்பும். ஜிப்ஸி இளைஞனாய் வருகிறவரின் நடிப்பும் அட்டகாசம்.

இவர்களின் சீரீஸ்களில் ஆக்‌ஷன் இருந்தாலும் அதை ஆர அமர மிக பொறுமையாய்த்தான் கையாளுகிறார்கள். கொலைகளைக் கூட தடாலடியாய் திடுமென சட்டுக் கொல்வதில்லை. சீனியர் தாதாவான சமுராய் இந்த டீலுக்காக இரவு பகல் பார்க்காமல் யாருக்கு எங்கே செக் வைத்தால் எங்கு வலிக்கும்? என யோசித்து ஒவ்வொரு மூவாய் செய்யும் இடமாகட்டும். இடையறாத இந்த முயற்சியில் துக்கமில்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டே தூங்கி விபத்துக்குள்ளாகும் காட்சியும், அந்த இடத்துக்காக சமுராயை மிரட்டும் அவனுக்கும் மேலான அதிகார கூட்டம் அவரது வயதான தாய் மட்டுமே வசிக்கும் வீட்டில் வந்து உட்கார்ந்து மிதமாய் மிரட்டிவிட்டு போன பிறகு, அவரின் வயதான அம்மாவிடம் “ஒண்ணுமில்ல சின்ன பிஸினெஸ் மீட்” என்று சொல்ல அம்மா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் “இதுதான் உன் தூக்கத்த கெடுக்குதுன்னா அது ஏன்?” என்று கேட்குமிடம் போல பல எமோஷனல் நிமிடங்கள் சீரீஸ் முழுக்க எழுதப்பட்டிருக்கிறது.

எங்கேயும் விக்கி, அழவில்லை. கண்களில் கண்ணீர் தளும்பி வழியவில்லை. பட் எல்லாமே அளவாய், நாசூக்காய் வெளிப்படுத்துகிறார்கள். விஷுவல்களில் தெரியும் இத்தாலிய பெண்களில் நிர்வாண உடல்களில் இயல்பாகவே ஒர் அழகுணர்வு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. எத்தனை சுதந்திரம் இருந்தாலும், அதை தேவைக்காக சரியாக கையாளுகிறார்கள். செக்ஸையோ, வன்முறையையோ திணிப்பதில்லை. ஆனால் இவர்களின் வாழ்க்கையில் செக்ஸும், போதையும், வன்முறையும் இழைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சுப்போரே ஒர் வித்யாசமான அனுபவம்.



Post a Comment

No comments: