Thottal Thodarum

Dec 7, 2019

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்

 ரொம்ப வருடங்களுக்கு முன் திருச்செந்தூரில் மணி அய்யர் கடையில் டிபன் சாப்பிட்டிருக்கிறேன். மணி அய்யர் ஓட்டலை நினைத்தவுடன் சட்டென நாக்கில் சாம்பார் நியாபகம் வந்துவிடும் எனக்கு. சென்னையில் பத்து நாட்களுக்கு முன் ஆரம்பித்திருக்கிறார்கள். அசோக்நகரில்.  ஆர்வமாய் போன வாரம் போன போது க்ளோஸ் ஆயிருச்சு என்றார்கள். நேற்றைக்கு நண்பருடன் போனேன். 10.30 மணிக்கு நல்ல கூட்டம். சாம்பாரின் வாசம் மூக்கை துளைத்தது.  நானும் நண்பரும் போய் உட்கார்ந்தோம். எதில ஸ்டார்ட் பண்ணலாம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் “பொங்கல் இருக்கா? “ என்றேன். “இல்லீங்க ஒன்பது மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்” என்றார்கள். ”சரி ஆளுக்கு ரெண்டு இட்லி கொடுங்க” என்று ஆர்டரை ஆரம்பித்தோம்.

இட்லி ரொம்பவும் மிருதுவாக இல்லாமல் இருந்தது கொஞ்சம் குறைதான். பட் சூடான சாம்பார். மூன்று சட்டினிகள், கூடவே பூண்டு போட்ட, மிளகாய்பொடி. அதற்கு தனியாய் பணம் எல்லாம் இல்லை. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு போட்டுக் கொள்ளலாம். சாம்பாரையும், பூண்டு மிளகாய் பொடியும் ஆசம்.

அடுத்ததாய் நல்ல மொறு மொறு ரவா தோசை. நிஜமாகவே ராவா தோசை என்று சொன்னால் மிகச் சிறிய வயதில் திருவல்லிக்கேணி முரளிகபே தான் நியாபகத்துக்கு வரும். அதன் பிறகு நல்ல முறுகலாய் சாப்பிட்ட நினைவு இல்லை. நேற்றைக்கு அது தீர்ந்தது.  அதற்கும் அதே சாம்பார், மூன்று சட்டினிகள் அத்துடன் மொளகாய்பொடி. ஆகாகா

பக்கத்து டேபிளின் மேல் ஒருவர் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்க, குருமாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. சந்தேகத்துக்கு ஆளுக்கு ஒரு பரோட்டா சாப்பிடுவோமா? என்றேன். நண்பரும் சளைக்காமல் ம்ம் என்றார். பரோட்டாவும் குருமாவும் வந்தது. “வாவ்..நிஜமாகவே டிவைன். நன்கு அரைத்துவிடப்பட்ட, முந்திரியெல்லாம் போட்ட குருமா. இதை எழுதும் வரை என் நாக்கில் அந்த சுவை இன்னமும் இருக்கிறது. வேற என்ன நடக்கும். இன்னொரு பரோட்டவையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு கிளம்பினோம்.

கிளம்பும் போது ஓனர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். திருச்செந்தூர் பெரியப்பாவின் நேரிடை கடை தானாம். பழனியில் ஒரு ப்ராஞ்ச ஆரம்பித்து சிறப்பாக நடை பெறுகிறது என்றார். மதிய லஞ்சுக்கு அவர்கள் வைத்திருக்கும் லிஸ்ட் பார்த்த போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. முக்கியமாய் வாரத்தில் ஒரு நாள் திருநெல்வேலி சொதி, அரைத்துவிட்ட சாம்பார். என பெரிய லிஸ்ட் ஒரு வாரம் போய் சாப்பிடணும். நிச்சயம் நல்ல வெஜ் பிரியர்களுக்கு நியாயமான விலையில் திருச்செந்தூர் மணி அய்யர் ஓட்டல். இரண்டு பேருக்கும் சேர்த்து பில் சுமார் 360 ரூபாய்.

Hotel Thiruchendur Mani Iyer
31/69, 7th Ave,
Sarvamangala Colony, 
Indira Colony,
 Ashok Nagar,
 Chennai,
 Tamil Nadu 600083

Post a Comment

1 comment:

Mohanprabu (மோகன் பிரபு ) said...

Semma sir😍😍. முதல்முறை உங்க ப்ளாக் படிக்கறேன்.