Thottal Thodarum

Sep 4, 2019

ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.


ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.
செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று இனி சினிமா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார். அனைத்து சேனல்களிலும் இதைப் பற்றித்தான் விவாத மேடையே.  திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை வரவேற்று அதை நடை முறை படுத்துவது இயலாத காரியம் என்று வழக்கம் போல அறிக்கை விட்டிருந்தால் கூட பரவாயில்லை. சென்னையில் ஓக்கே. மற்ற ஊர்களில் மக்களுக்கு கார்ட் ஏது? இண்டர்நெட் ஏது?, எப்படி சர்வீஸ் சார்ஜ் கொடுப்பார்கள்? அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா? என்று அமைச்சர் சொன்னதை புரிந்து கொண்டாலும் இது மக்கள் விரோத நடவடிக்கை என்பது போல அனைத்து சேனல்களும் துறை சார்ந்தவர்களும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையேத்தான் சென்ற மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 முதல் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்படும் என்று அறித்திருந்தார்.  அப்போதெல்லாம் விவாத மேடை வைக்காத சேனல்கள் அவசர அவசரமாய் கடம்பூர் ராஜு சொன்னதும் வைத்ததற்கான காரணம் அதை வைத்து டி.ஆர்.பி ஏற்றிக் கொள்ள மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கும் இது என்ன என்பதை விளக்கி சொல்ல வேண்டும் என்கிற பொருப்போ? கட்டாயமோ இல்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒர் நிகழ்ச்சி.

சரி விஷயத்துக்கு வருவோம். இச்சட்டம் ஆணையானால் என்ன ஆகும்? மக்களுக்கு ஒன்றுமே ஆகாது. ஏனென்றால் மக்கள் வழக்கம் போல டிக்கெட் புக்கிங் தளம் மூலமாகவோ, நேரிடையாகவோ டிக்கெட் வாங்க எந்தவிதமான தடையும்  கிடையாது. அவர்கள் வழக்கம் போல டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். யாருக்கு இது சட்டமாகிறது என்றால் சினிமா திரையரங்கு உரிமையாளர்களுக்கு.  நாங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டோம் கணக்கு சரியாய் கொடுக்கிறோம் என்கிறார்கள். அவர்கள் டிக்கெட்டை பிரிண்டட் சீட்டுக்கு பதிலாய் கம்ப்யூட்டரில் பில்லிங் சாப்ட்வேர் போல் அவரவர் வசதிக்கு பிரிண்ட் செய்து தருகிறார்களே தவிர, வேறேதும் இல்லை. அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்கள் கட்டுவதுதான் டாக்ஸ்.

ஜி.எஸ்.டி. வந்துவிட்டதே அதெப்படி என்று கேட்பீர்களானால் இதை ஏன் சினிமா விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் வரவேற்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள் உங்களூக்கு புரியும். ஏனென்றால் இன்றளவில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மால்கள். அதுவும் கூட கார்பரேட் மால்களில் மட்டுமே சரியான கணக்கு வழக்கு பெற முடியும். மற்ற ஊர்களில் எல்லாம் அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்கள் கட்டுவதுதான் வரி.

உதாரணமாய் சென்னையை தவிர்த்து ஒர் ஏரியாவில் ஒரு கோடி ரூபாய் விநியோகஸ்தர் பங்கு என்று வைத்துக் கொள்வோம். அதற்கு லோக்கல் டாக்ஸ் 8 சதவிகிதம்.18 சதவிகிதம் ஜி.எஸ்.டி என்றால் மொத்தம் 26 லட்சம் வரியாய் கட்ட வேண்டும். இவர்கள் விநியோகஸ்தரிடம் காட்டும் கணக்கு ஒரு கோடி என்றாலும் பேப்பரில் நாற்பது லட்சத்துக்கு தான் காட்டுவார்கள். அதற்கு தான் வரி கட்டுவார்கள். இதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்த ஒரு கோடி கூட சும்மா கணக்குக்கு சொல்கிறேன். இதுவே அவர்கள் போனால் போகட்டும் என்று சொல்கிற கணக்குத்தான்.

இப்போது ஆன்லைன் மூலம் டிக்கெட்டிங் என்றாகிவிட்டால் என்ன நடக்கும்? 
விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டும் அரசாங்க சர்வர் மூலம் அதற்கான வரி முதல் கொண்டு தெரிந்து விடும். தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தேனியில் உள்ள ஒர் சின்ன தியேட்டரில் எத்தனை டிக்கெட் விற்றிருக்கிறது என்று தெரிந்துவிடும். அப்படி தெரிந்துவிட்டால் அதை கணக்கில் வரவு வைத்தாக வேண்டும். இதான் பிரச்சனை திரையரங்கு உரிமையாளர்களுக்கு. தங்களுக்கான பிரச்சனையை மக்களுக்கு பிரச்சனை என்று மீடியாவும் இதைப்புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்று நடத்துகிறது.  நேற்று புதிய தலைமுறை சேனலில் இதைப் பற்றி விவாத மேடையில் பேசிய போது எதைப் பற்றி பேசினோமோ அதை விட்டுவிட்டு பாப்கார்ன் விலை பற்றி பேசிக் கொண்டிருந்ததை கண்டித்து, மீண்டும் சப்ஜெக்டுக்கு கொண்டு வர வேண்டியதாகிப் போய் விட்டது.

ஸோ.. இத்துறை சார்ந்த விஷயம் இது. மக்களுக்கு எந்தவிதத்திலும் இது சினிமா பார்ப்பதை பாதிக்காது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Post a Comment

1 comment:

Aravindhan N said...

Dear cable sankar sir i think the blog platform is no more due to the influence of YouTube.