Thottal Thodarum

Aug 4, 2019

பொன்னி

வெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது. 

பொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம்.

இன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில்  தங்க விலையுர்ந்து  கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க்.

கிபி  இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது? எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது? கோலார் தங்க வயல், அதன்  பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்கியமாய் செல்லம்மா எனும் மோகினி, கதிரவன், வைஷாலி என முக்கிய கேரக்டர்கள் கதையை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.  சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத எழுத்தும்  அதன் பின்னணிக்காக உழைப்பும் நாவல் பூராவும் தெரிகிறது.

ஜேம்ஸ் - செல்லம்மா காதல் ப்ளேஷ்பேகில் செல்லம்மாவின் அறிமுகம் அட போட வைக்கிறது. உளவாளியாய் பயணித்து காதலில் விழும் அவரின் கேரக்டர் வடிவமைப்பு அட்டகாசம். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு பிறகு ரொமாண்டிக் பாகமாய் மட்டுமே போனதால் என்னதான் செல்லம்மாவின் கனவை பொன்னி முடிக்க வருகிறாள் என்று இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவுக்கு இணையாய் பில்டப் கொடுத்தாலும்  எடுபடாமல் போய்விடுகிறது.  திரைப்படமாய் எடுக்கப் போனால் நிச்சயம் இந்த எபிசோடை இன்னும் பட்டை தீட்டி சுருக்க வேண்டும்.

தடாலடியாய் பொன்னியை பாரா டைவிங்கில் அறிமுகப்படுத்துவது. உலகின் மாபெரும்  வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கொள்ளை. டாப் ஆங்கிளில் ட்ரக்குள், ட்ரைவிங், பாலைவனம், கோலார் தங்க வயல், ரா, சிஐஏ, என தடாலடியாய் கேரக்டர்களும், தொடர் ஓட்டமுமாய் விறு விறு விஷுவலுமாய், திரைக்கதையாய் நிறைய காட்சிகள். விக்ரம் படம் பார்த்த்தார் போல இருந்தது.  குறிப்பாய் ப்ளாஷ்பேக்கிலும், க்ளைமேக்ஸுலும், வரும் திருப்பங்களும் எல்லாமே ஊகிக்ககூடியதாய் அமைந்ததும், வசனங்கள் காட்சிகள் எல்லாமே சினிமாவிற்கான டெம்ப்ளேட்டில் இருந்ததுதான் இந்நாவலுக்கான பெரிய மைனஸ். மற்றபடி சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத வாசிப்பு அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. பொன்னி.  



Post a Comment

No comments: