Thottal Thodarum

Jan 28, 2019

EE.Ma.yau V/S மதயானைக்கூட்டம்.


EE.Ma.yau V/S  மதயானைக்கூட்டம்.
எப்போது பார்த்தாலும் எப்படா இந்த மாதிரியெல்லாம் ஒரு படம் தமிழ்ல வரும்னு மலையாள படங்களை கொண்டாடிக் கொண்டேயிருக்கிறோம். மீண்டும் ஒரு மலையாளப்படத்தைப் பார்த்து கொண்டாட வேண்டிய கட்டாயம். இந்த ஈ.மா.யூ. ஆனால் அதே நேரத்தில் நம் பக்கத்திலிருந்தும் இது போன்ற படங்கள் வந்திருக்கிறது. அது எதற்காக கொண்டாடப்படாமல் போனது என்பதை  பற்றியும் பேச வேண்டும். முதலில் இ.மா.யூ.

ரொம்பவே சிம்பிளான கதை. கடற்கரை கிராமம். வாவேச்சன் ஊர் வருகிறார். வரும் போதே வாத்து ஒன்றை பிடித்துக் கொண்டு வந்து மனைவியிடம் சமைக்கச் சொல்கிறார். சின்னதாய் மனைவியிடம் தோள் தட்டி ரொமான்ஸ். மகள், மருமகளிடம் விசாரிப்பு. மகனுக்காக காத்திருந்து வந்தவனுடன் பிராந்தி களி. கூடவே பேச்சு சுவாரஸ்யம் ஏற, தன் தந்தைக்கு நடந்த  இறுதி ஊர்வலத்தைப் பற்றி பேச்சு போகிறது. அப்படியான ஊர்வலம் ஊரிலேயே நடந்ததில்லை என்கிறார். அதை விட உயர்ந்த தரமான ஊர்வலத்தை உனக்கு நான் செய்வேன் என்று மகன் சத்யம் செய்கிறான். சத்யம் செய்த சில நிமிடங்களில் வாவேச்சன் சரக்கின் போதையில் கீழே வீழ்ந்து மரிக்கிறார். மகன் அவருக்கு சத்யம் செய்த வகையில் அவரின் இறுதிச் சடங்குகளை செய்தானா? இல்லையா? என்பதுதான் கதை.

நீளமான ஷாட்கள். ஷாட்களூடேயே கேரக்டர்கள் வந்து போவது. சுய எள்ளல். சாவு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள். ஊர் வம்பு பேசும் ஆட்கள். சின்னபுத்தியுள்ள சர்ச் பாதர், எப்போதும் சர்க்கடித்தபடி இருக்கும் குழி வெட்டும் ஆள், ஒரு முழு பாட்டில் ப்ராந்தியை குடித்துவிட்டு மட்டையாகிப் போயிருக்கும் டாக்டர், மூன்று பெக் அடித்துவிட்டு, நர்ஸைகூப்பிட்டு சாவை உறுதி செய்யச் சொல்லும் அவரது மனைவி. கொஞ்சம் கூட சிரிக்கவோ, வருத்தப்படவோ செய்யாத நர்ஸ். அவளுடய பயந்தாங்கொள்ளி, ஈர மனசு கணவன். ஈசீன் நண்பன் ஐய்ய்யப்பன், சாத்வீகனான இன்ஸ்பெக்டர். இறந்தவரின் பெண்ணிடம், ஆறுதல் சொல்லும் சாக்கில் இறுக்கி அணைத்து, பின்பக்கத்தை அழுத்தும் காதலன், நாலு பேர் வரும் போது கழுத்தில் செயின் இல்லைன்னா எப்படி? என்று இறுதி சடங்கிற்கு இருக்கும் தங்கத்தை கொடுத்துவிட்டு, பக்கத்துவீட்டு பெண்ணிடம் செயின் கடன் வாங்கிப் போட்டுக் கொள்ளும் மருமகள். மகளைப் போல நடந்த்தினாலும் சம்பந்திவீட்டார் வந்திருக்கும் போது ஒப்பாரியில் மகனுக்கு கல்யாணத்தின் போது டவுரி வாங்காததையும், அவர்கள் ஒன்றும் கொடுக்காததையும் சொல்லிக் காட்டும் மாமியார். என எத்தனை கேரக்டர்கள். அவ்வளவு கேரக்டர்களும் படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துனை துல்லியம்.

ஒரு சாவிற்கு பின் நடக்கும் சம்பவங்கள்.மிக இயல்பான காமெடியில்  ஆரம்பித்து,  தலையில் அடிப்பட்டு வீழ்ந்ததினால் அவரின் சாவில் சந்தேகத்தை கிளப்பி, பிரச்சனையாக்கி, எப்படியாவது அப்பனுக்கு வாக்கு கொடுத்தார் போல, இறுதி ஊர்வலம் நடந்த ஆசைப்பட்ட மகனின் ஆசையில் மண் விழ்ந்து விஷயம் கை மீறும் போது உருக்கமாக முடிக்கிறார்கள்.

இதே போன்ற படம் நம் தமிழில் வந்திருக்கிறது. அது மதயானைக் கூட்டம் என்கிற படம். ஒர் இழவு வீடு அதை சுற்றி நடக்கும் உறவு அரசியல். இறந்தவரின் சின்னவீட்டு ப்ரச்சனை, அதன் காரணமாய் நடக்கும் கொலை என படு சுவாரஸ்யமான கதைக்களம். இன்னும் சொல்லப் போனால் க்ரிப்பிங்கான திரைப்படமாகவும் இருக்கும். எங்கே ஈ.மா.யூவிலிருக்கும் தரம் மதயானைக்கூட்டத்தில் சறுக்கியது என்று யோசித்தால், சொல்லப்பட்ட விதத்தில் தான் என்று சொல்ல வேண்டும்.

மதயானைக்கூட்டம் ஆரம்பித்த காட்சியிலிருந்து கடைசி வரை தேவர்களின் புகழ் பாடும் படமாகவே நமக்கு புரிபட ஆர்மபிக்கும். நாம், நம் ஜாதி, ஜாதி பெருமை, ஜாதி வெட்டி வீரம், வெட்டி ஜாதிப் பெருமைக்காக கொலை என ஒரு சாராரின் புகழ் பாடும் படம் போலவே இருக்கும். தேவையில்லாத காதல் காட்சிகள், டூயட்., ஜாதிப் பெருமை என பிரஸ்தாபித்ததினால் ஒரு சாராரின் படமாய் போய் மக்களின் விருப்பத்தில்லாம போய்விட்டது.

ஆனால் ஈ.மா.யூ அதை செய்யவில்லை. மிக ஆழகாய் வாழ்க்கையை, மனிதர்களை கண் முன் கொண்டு வருகிறது. மனிதர்களிடையே இருக்கும் ஆசா பாசங்கள், வன்மம், சின்னபுத்தித்தனம் ஆகியவற்றை போகிற போக்கில் சொல்லிப் போகிறது. மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் மிக இயல்பான ஒளிப்பதிவும் நடிப்பும். வசனங்களும். சர்ச் பாதர் நடுராத்திரி போலீஸுக்கு போன் செய்து வாவேச்சனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புரளியை நம்பி புகார் கொடுக்க, இன்ஸ்பெக்டர் அதை லூசில் விட, பாதிரியாரா இருக்க வேண்டியவன் எல்லாம் போலீஸா இருக்கான் என்று துப்பறியும் நாவல் படிக்கும் பாதிரி கேரக்டர். போலீஸ் பிரச்சனையை சரி செய்ய கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் உள்ள அய்யப்பன் மழைக்காலையில் ஸ்டேஷனுக்கு போக, அங்கே ரைட்டருக்கு பிரிவு உபச்சார விழா. வேறு ஒரு மனநிலையில் உள்ள அய்யப்பனையும் அவரை வாழ்த்தி பேச சொல்லும் இன்ஸ்பெக்டரின் கட்டாயத்தின் பேரில் பேச விழைந்து, முடியாமல் அழுதபடி கிளம்புகிறவனுடன் கிள்மபும் இன்ஸ்பெக்டர்.  விசாரணைக்காக டாக்டரிடம் கேட்க, ஏற்கனவே உடம்பு சரியில்லை. கீழ வீழ்ந்துச் சின்னக் காயம். வேற ஒண்ணுமில்லை. என்று சொல்லவிட்டு, செல்ல, அதற்கு முன் பாதிரியுடன் நடந்த விஷயத்தை மனதில் வைத்து, நீங்க பாதிரியா இருக்க வேண்டியது இன்ஸ்பெக்டரா இருக்கீங்க எனும் வசனம் அழுத்தம்.

ஒர் அழுத்தமான விஷயத்தை மிக இயல்பாய், அதன் நிஜத்தன்மையோடு, கொண்டு சென்று எமோஷனலாக்கி நம்மை அனுப்புகிறார்கள் இந்த ஈ.மா.யூவில். ஆரம்பம் கொண்டே எமோஷனலாக்கி, ஜாதிப் பெருமை, ல்வ், தேடல் என அலைக்கழித்து கதை சொல்லி நம்மிடமிருக்கும் பொறுமையை சோதித்தது மதயானைக்கூட்டம். இருந்தாலும் நம் தமிழ் திரையுலகமும் ஒர் சிறு முயற்சியை செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்பதை மீறி கொஞ்சம் பெருமையாகக்கூட இருக்கிறது.


Post a Comment

No comments: