Thottal Thodarum

Feb 15, 2024

அஸ்தமனமாகும் உதயம்

 அஸ்தமனமாகும் உதயம்

தனியாய் சினிமா போக ஆரம்பித்த காலம் அது. அப்போது தான் உதயம் திரையரங்கத்தை திறந்தார்கள். முதலில் திறக்கப்பட்டது உதயம் மற்றும் சந்திரன் என்று தான் நினைக்கிறேன். மற்ற தியேட்டர் வேலை நடந்து கொண்டிருந்தது. முதன் முதலில் அங்கே ரிலீஸான படம் ரஜினியின் சிவப்பு சூரியன். சைக்கிளில் சென்று படம் பார்த்தேன். சைக்கிள் பார்க்கிங், அங்கே விற்கும் சமோசா, கூல்டிரிக்ச் எல்லாம் சேர்த்து 10 ரூபாய்க்குள் படம் பார்த்துவிட்டு வந்துவிடலாம். உதயத்தின் பெரிய ஸ்க்ரீனைப் பார்த்ததும் மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது. இன்றைக்கு போல மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் இல்லாத காலம். ஒரே கட்டிடத்தினுள் நான்கைந்து காம்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் தான் அப்போதைய பேஷன். சிவப்பு சூரியனில் மொக்கை வாங்கினாலும், அட்டகாசமான ஒரு திரையனுபவத்தை கொடுத்தது உதயம் தியேட்டர்.

உதயம் ஆரம்பித்த காலத்தில் பில்லர் பக்கம் மட்டுமே கொஞ்சம் ஆங்காங்கே கூட்டம் இருக்கும். அந்தப் பக்கம் கே.கே.நகர். எதிரே வடபழனி பக்கம்  போகப் போக இருளோ என்று இருக்கும். எங்கம்மா இந்த ஏரியால எல்லாம் தியேட்டர் கட்டுனா யாரு வருவாங்க? அதுவும் நைட் ஷோ எல்லாம். என்று ஒரு முறை மாலைக் காட்சி படம் பார்த்துவிட்டு வரும் போது சொன்னது இன்றைக்கும் நியாபகம் இருக்கிறது. சென்னையில் பத்து மணிக்கு தான் இரவுக் காட்சி என்று இருந்ததை 9.15 மணிக்கு என ஆரம்பித்த ஒரே தியேட்டர் சென்னையில் உதயம் மட்டுமே. காரணம் அதிக பட்சம் 12 மணிக்குள் இரவுக் காட்சி முடிந்துவிடும். சமீப காலங்களில் கூட பத்து மணிக்குள்ளேயே படம் போடும் கலாச்சாரத்தை கடைபிடித்து வந்தார்கள்.

உதயம், சூரியன், சந்திரன் மூன்று தியேட்டர்கள். உதயம் கிட்டத்தட்ட 800 சொச்ச சீட்கள். சந்திரன் தியேட்டராக நன்றாக இருந்தாலும் திரை ரெக்டாங்கிலாய் இல்லாமல், ஸ்கொயராகவும் இல்லாமல் ஒரு மாதிரி அரைகுறையாய் இருக்கும். அதனால் அங்கே எனக்கு படம் பார்ப்பது அன்றைக்கே பிடிக்காது. சூரியன் நல்ல அகன்ற திரை. சின்ன தியேட்டர். ஒலி,ஒளி எல்லாம் சிறப்பாக இருக்கும்.

என் சினிமா ஆர்வமும், அறிவும் வளர்த்தெடுத்த இடம் உதயம் தியேட்டர் என்றால் அது மிகையாகாது. இதயத்தை திருடாதே, நாயகன், தளபதி, பொட்டி வராத குணா, காதலுக்கு மரியாதை, ரோஜா, அலைபாயுதே என வரிசைக்கட்டி சொல்லிக் கொண்டே போகலாம். நான் எல்லா படங்களை அங்கே தான் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். சைதாப்பேட்டைக்கு அருகில் என்பதால் மட்டுமல்ல. தொடர்ந்து அங்கேயே படம் பார்ப்பதால் அங்கே வேலை செய்யும், கைலாசம், ரவி, பார்க்கிங் சேகர், ஆகியோர் அனைவரும் எனக்கு பழக்கம் ஆதலால் எப்போது போனாலும் எனக்கு டிக்கெட் கன்பார்ம். படத்தின் தரம், அதன் ஓட்டம் பற்றியெல்லாம் அவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து இது ஹிட்டு, இத்தனை வசூல் என்று அன்றைக்கு கேட்க ஆரம்பித்த பழக்கம் தான் இன்று என்னை ஒரு விநியோகஸ்தராக, இயக்குனராய், மாற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் உதயத்தில் படம் ரிலீஸ் இல்லையென்றால் அது ஏதோ அவமானமான விஷயமாய் மாறி பேசும் அளவிற்கானது.

கே.கே.நகர், அசோக்நகர், ஜாபர்கான்பேட்டை, சுற்று வட்டாரத்தில் நல்ல மிடில்க்ளாஸ், ஹைக்கிளாஸ் தரத்துடன், பார்க்கிங், ஒலி,ஒளி அமைப்புடன் இருக்கும் சிறந்த தியேட்டர் உதயம் காம்ப்ளெக்ஸ்தான். அது மட்டுமில்லாமல் சினிமா ஏரியா பார்டர் கணக்கில் உதயம் சிட்டியில் வரும் கடைசி தியேட்டர். அந்தப்பக்க்கம் பின்னாளில் ஆரம்பித்த காசி, பழைய விஜயா, இந்திரா போன்ற அரங்குகள் செங்கல்பட்டு ஏரியாவில் வரும். எனவே சென்னையின் முக்கியமான கலெக்‌ஷன் செண்டர் உதயம் காம்ப்ளெக்ஸ் தான்.

நிறைய உதவி இயக்குனர்களின் கனவு அவர்களின் படம் உதயம் தியேட்டரில் ரிலீஸாவதுதான். நண்பர் ஒருவர், நல்ல கதை சொல்லி. உதவி இயக்குனர். இன்று வரை படம் செய்யவில்லை. அது தனிச் சோகம். ஆனால் அவர் ஒவ்வொரு முறை கதை சொல்லிவிட்டு அதை நாம் பாராட்டினாலோ இல்லை விமர்சனம் செய்தாலோ, வேகமாய் தலையாட்டி ”இதெல்லாம் செல்லாது செல்லாது. மொத நா மொத ஷோ உதயம் காம்ப்ளெக்ஸுல படம் பார்க்கும் போது அங்கே கிடைக்கிற கைத்தட்டல், பாராட்டுத்தான் நிஜ ரிசல்ட். மத்ததெல்லாம் வேஸ்ட் என்பார். காரணம் அங்கே வரும் ஆடியன்ஸின் தரம். லோ, மிட், மற்றும் ஹைக்ளாஸ் என எல்லாரையும் தன் வசம் வைத்திருந்த வளாகம் அது. அங்கே கிடைக்கும் ரிசல்ட் தமிழகம் எங்கும் கிடைக்கும் ரிசல்டுக்கு ஈக்குவலாய் இருக்கும்.

உதயத்தில் சரக்கடித்துவிட்டு சென்றால் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். அதற்காக அங்கே படம் பார்க்க இரவுக் காட்சிக்கு ரிசர்வ் செய்துவிட்டு பக்கத்து ஹவுஸிங் போர்ட் காம்ப்ளெக்ஸில் இருக்கும் ஒயின் ஷாப்பில் சரக்கடிப்பதற்காக மாலைக்காட்சிக்கே வந்துவிடுவோம். குடித்து சாப்பிட்டுவிட்டு, போதையெல்லாம் இறங்கிய பிறகு தெளிவாய் படம் பார்த்துவிட்டு வீடு போய் சேருவோம். தியேட்டர்காரனுக்கும் அவ்வளவாய் வாடை வராது. வீட்டுலேயேயும் மாட்ட மாட்டோம். தியேட்டர் அனுமதிக்கு என் இன்ப்ளூயன்சும் காரணம்.

உதயத்தில் ரசிகனாய் வளர்ந்தவன் அதே தியேட்டரில் விநியோகஸ்தராகவும் படம் வெளியிட்டது காலத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. எங்களது உயிரிலே கலந்தது திரைப்படம் அங்கே சூரியனில் தான் வெளியானது. ஒரு பிரபல நடிகர் தம்பதிகளின் காதலுக்கு அணிலாய், நானும், அந்த தியேட்டர் ஸ்பெஷல் கேபினும் இருந்த காலம். அப்படம் எங்களுக்கு பல படிப்பினைகளை தந்த படம். அது பற்றி என் சினிமா வியாபாரம் புத்தகத்தில் டீடெயிலாய் இருக்கிறது.

சென்னை ஏரியாவுக்குள் ஒரு சிறந்த கலெக்‌ஷன் செண்டர். கணக்கு வழக்கு எல்லாம் சரியாய் கொடுக்கும் தியேட்டர் என ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவுக்கும் பிடித்த தியேட்டராய் இருந்தது உதயம் காம்ப்ளெக்ஸ்.  இத்தகைய தியேட்டரின் மேனேஜ்மெண்டுடனான முரண்பாட்டால், தன் படங்கள் இனி உதயம் திரையரங்கில் வெளியாகாது என்று முடிவெடுத்து இன்று வரை பிடிவாதமாய் இருக்கிறவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.  எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கும் தானே!.

இப்படியாக இருந்த உதயம் மெல்ல தன் பொலிவிழக்க ஆரம்பித்தது. சினிமா அவ்வளவுதான் என பைரஸி, சிடி, டிவிடி, டெலிவிஷன் என பல காரணங்களால் அவ்வப்போது தொய்வடையும் போது எல்லா தியேட்டர்களைப் போலவே பெரிய திரையரங்கை நடத்த முடியாமல் உதயம் பால்கனியை மினி உதயம் ஆக்கினார்கள். பெரிய திரை, புஷ்பேக் என இருந்தாலும் ஏனோ கீழ் தியேட்டர் சத்தம் சில சமயம் மேலேயும், மேல் தியேட்டர் சத்தம் கீழேயும் கேட்பது எனக்கு பிடிக்காமல் போனது. ஆனால் அவர்களின் மூன்று தியேட்டரிலிருந்து நான்கு தியேட்டர் பரிணாம வளர்ச்சி, தியேட்டர் வளாகம் ரியல் எஸ்டேட் கைகளில் போகாமல் காப்பாற்றியது. மற்றொரு காரணம் தியேட்டர் ஓனர்களின் குடும்ப டிஸ்ப்யூட் தான் என்று சொல்ல வேண்டும்.

ஆம் ஓனர்கள் தான். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பார்ட்னர்கள் கொண்ட தியேட்டர் அது. மூன்றாவது தலைமுறையை பார்க்க ஆரம்பித்திருந்த நேரம். தியேட்டரை விற்றுவிடலாம் என்று ஒரு கூட்டமும், இல்லை நடத்தலாம் என்று பஞ்சாயத்து ஓடியதாய் நிறைய கதைகள் எல்லாம் உண்டு. கடைசியில் அது உண்மை தான். காரணம் 2008 வரைக்கும் அந்த திரையரங்கம் கோர்ட்டின் கண்ட்ரோலில் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு  உதயத்தை நிறுவியவரே விலைக்கு வாங்கி, இன்றைக்கு விற்றிருக்கிறார்.

உதயம் மங்கிப் போனதற்கு காரணம் சுற்றி உருவாகியிருக்கும் அப்கிரேடட் திரையரங்குகளின் வசதிகள் அங்கு இல்லாதது. எந்த தியேட்டரில் நான் படம் பார்த்து வளர்ந்தேனோ அந்த தியேட்டரில் நான் கடைசியாய் படம் பார்த்து, பார்த்தது என்று கூட சொல்ல முடியாது. எங்களுடய ‘6 அத்யாயம்” திரைப்பட வெளியீட்டின் போது.  அதன் பிறகு ஏனோ அங்கே படம் பார்க்க ஆர்வமே ஏற்படவில்லை. சீட்கள் சுமாராக இருப்பதாகவும், ஒலி,ஒளி அமைப்பும் அத்தனை சிலாக்கியமாய் இல்லாததாலும் மெல்ல தியேட்டர் தன் பொலிவை இழந்தது. ஆனால் இன்றைக்கும் அதை புதுப்பித்து தியேட்டராக மாற்றினால் மிகச் சிறந்த செண்டராய் இருக்கும். அது நடக்காது. காரணம் இன்றைய சினிமா தியேட்டர்களின் நிலை. திடீரென பழைய தியேட்டர்களை எல்லாம் புதிதாய் அப்கிரேட் செய்து புதிய புதிய வசதிகளோடு திறக்கும்  நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருகிற அதே நேரத்தில், உதயம் போன்ற மக்களின் தியேட்டர்கள் மூடப்படுவது வருத்தமான விஷயம் தான். ஏனென்றால் டிக்கெட் ரேட்டிலிருந்து உணவுகள் வரை மிகவும் நியாயமான விலையில் கிடைத்துக் கொண்டிருந்த ஒர் இடம்.  

இன்றைய தியேட்டர்கள் மக்களின் வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறது. மக்கள் திரையரங்குக்கு வர ஏனோ தயக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மேலும் பல திரையரங்குகளை மூடச் செய்யும். தியேட்டர்கள் இருக்கும் இடத்தில் பெரிய கேட்டட் கம்யூனிட்டி வரலாம். அங்கே வசிக்கும் மக்களுக்காக தனியே சின்ன தியேட்டர் ஓப்பன் செய்யப்படலாம். இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீடும் ஒரு மினி திரையரங்காய் மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் டெக்னாலஜி. எல்லார் வீட்டிலும் குறைந்த பட்சம் 55 இஞ்ச் டிவியியும் ஹோம் தியேட்டரும் இருக்கும் இடமாய்த்தான் உதயம் தியேட்டர் இடம் மாறப் போகிறது. நான்கு ஸ்க்ரீனில் 1500 பேர் பார்த்த இடத்தில் 500 வீட்டு ஸ்க்ரீனில் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கப் போகிறார்கள். சினிமா பார்க்கும் மீடியம் தான் மாறுகிறது. சினிமா ஏதோ ஒரு வித மீடியத்தில் உதயமாகிக் கொண்டேதான் இருக்கும்.

கேபிள் சங்கர்

 15-2-2024

 

 


Post a Comment

No comments: