Thottal Thodarum

Feb 7, 2024

சாப்பாட்டுக்கடை- கும்பகோணம் மங்களாம்பிகா

 ஏற்கனவே இவர்களைப் பற்றி சில வருடங்களுக்கு முன் சாப்பாட்டுக்கடை பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.நான் எப்போது கும்பகோணம் போனாலும் இவர்களுடய ரவா தோசை, சாம்பார், கார சட்னிக்கு அடிமை. அட்டகாசமாய் இருக்கும். முன்பு கும்பேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் வைத்திருந்தவர்கள் இப்போது அந்த கோவிலின் பிரகாரத்தின் பின்னால் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே செட்டப்பில் தான் இக்கடையும்.

நாங்கள் சென்ற போது ஏகப்பட்ட கூட்டம். இத்தனைக்கும் வார நாட்கள் தான். வெளியூர்க்காரர்கள் தான் அதிகம். அங்கே உட்கார்ந்திருந்த தெலுங்குகார கஸ்டமரிடம் கும்மோணத்துக்கார சப்ளையர் தெலுங்கு அரிசு உப்புமாவை “உப்பு பிண்டி” பிய்யம் உப்பு பிண்டி என்று ரெகமெண்ட் செய்து கொண்டிருந்தார்.  இடம் கிடைத்து உட்கார்ந்த மாத்திரத்தில் உடனடியாய் ஆர்டர் செய்தது ரவா தோசைதான். நல்ல முறுகலா கொடுங்கன்னு சொல்லி ஆர்டர் செய்தேன். மகனார்கள் நெய் பொடி தோசை ஆர்டர் செய்தார். இன்னொருவர் பரோட்டா. மனைவியும் அம்மாவும் தோசை மற்றும் ரவா. 

நான் கேட்டார்ப் போலவே நல்ல முறுகலாய் ரவா தோசை வந்தது. உடன் காரச்சட்னியை கேட்டு வாங்கி போட்டுக் கொண்டேன். நல்ல எண்ணெய் ஊற்றி பொன்முறுவலாய் ஒர் ரவா தோசை. பிய்த்து சாப்பிட எடுக்கும் போதே ரவா தோசையின் ப்ரவுன் நிற முறுகல் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கொடுக்க, சாம்பாரில் தொட்டு ஒரு வாய், தேங்காய் சட்னி, சாம்பாருடன் ஒரு வாய். காரச்சட்னியுடன்  ஒரு வாய் சாப்பிட்டதும் ஒவ்வொரு விள்ளலும் வாயில் கரைந்து போனது. கண் மூடி கண் திறப்பதற்குள் தோசை காலி. இத்தனை நாள் இங்கே நான் ட்ரை செய்யாத அயிட்டம் பொடி தோசை. அதற்கு காரணம் நிறைய உண்டு. பெரும்பாலான பொடி தோசைகள் நன்கு வழுமூனாக அரைத்த பொடியாய் இருக்கும். அதுவும் காரமும் இல்லாமல், பருப்பு அதிகமாய் நரநரவென நெய்யோடும், எண்ணெயோடும் இருக்கும். அது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவர்கள் கொடுத்த பொடி அப்படியல்ல.. என்னவென்று சொல்ல..

நன்கு பொன்நிற கலரில், நெய்யூற்றி வெந்த தோசைக்கு நடுவில், கல்லில் இடித்த மிளகாய் விதைகள் பாதி அரைப்பட்ட பத்தத்தில் நல்ல காரம் மற்றும் சரியான மிக்ஸுடன் வறுத்த பருப்பையும் சேர்த்து அரைத்த பொடி. தோசையை பிரித்துப் பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறியது. நெய்யை தாராளமாய் ஊற்றி, உள்ளே மிளகாய் பொடியை முழுவதுமாய் ஸ்பெர்ட் செய்திருக்க, ஒவ்வொரு விள்ளலுக்கும் நடு நாக்கில் லேசான மிளகாயின் காரமும், பருப்பும் அட அட அட.. டிவைனின் முழு அர்த்தத்தை இந்த பொடி தோசை சாப்பிட்டு விட்டு புரிந்து கொள்ளவும். அத்தனை அட்டகாசமான பொடி தோசை. ஒரு விள்ளல் சாப்பிட்டுவிட்டு மிஸ் செய்யக்கூடாது என்று இன்னொரு தோசை ஆர்டர் செய்தோம். அதை சாப்பிட்டுவிட்டு என் இளைய மகன் “அப்பா எனக்கு வந்த தோசையை விட உன் தோசை இன்னும் சூப்பரா இருக்கு” என்றான். பொடி தோசையின் மகிமை. உள்நாக்கு காரம் அடங்க அடங்க.. இன்னும் கேட்குமே மோர்!! 

எனவே கும்பகோணம் போகிறவர்கள் நிச்சயம் மிஸ் செய்யக்கூடாத ஒரு வெஜ் உணவகம் இந்த மங்களாம்பிகா மெஸ். கூட்டம் அதிகம் ஆக, ஆக, ஜிபே, கார்ட் எல்லாம் கிடையாது என்று கேஷ் கேட்கிறார்கள். அது மட்டும் கொஞ்சம் இடித்தது. 

கும்பகோணம் மங்களாம்பிகா

கும்பேஸ்வரர் கோயில் பிரகார வீதி.



Post a Comment

No comments: