Thottal Thodarum

Sep 19, 2018

கும்பகோணம் டூ சென்னை

நேற்று மதியம் கும்பகோணம் டூ சென்னை மதிய பஸ். ரதி மீனாவின் ஸ்லீப்பர் கம் சீட் பஸ். 600 சொச்சம் டிக்கெட். மனசுக்கு கஷ்டமாய் தான் இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரே கூட்டமாய் கல்லூரி பெண்கள் வர, அனைவரும் அதே பஸ்ஸுக்கு என்று தெரிந்த போது 600 சொச்சம் கஷ்டமாய் இல்லை. வண்டி ஏறி லோயர் பர்த்தில் செட்டிலாவதற்குள் “ஏய்.. நீ இங்க வாடி. நான் அங்க போறேன். அய்யோ.. ஆ.. எப்படி ஏறுறது? ம்ம்.. தனியா வா சொல்லித் தரேன்” என்று கூச்சலும் குழப்பமுமாய் களேபரமாய் இருந்தது.

இன்னொரு மஞ்சள் சூடிதார் அணிந்திருந்த மித வயது பெண் இவர்களின் அத்தனை களேபரக் கூச்சல்களையும் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி இருந்தாள். பக்கத்து சீட்டில் ஒருவர் வண்டியேறி அடுத்த செகண்ட் தன் ஸ்லீப்பரில் ஏறி படுத்த மாத்திரத்தில் லேசான குரட்டை விட ஆரம்பித்தார். இந்த பெண்கள் கும்பலில் தன் தாயோடு வந்திருந்த பெண் மட்டும் மிக அடக்க ஒடுக்கமாய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தபடி, திரும்பித் திரும்பி தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஸ்லீக்காய் ஜீனும், கருப்பு டீ சர்டும் போட்ட இளம் பெண் மூக்கருகில் கர்சீப்பை வைத்தபடி இருந்தாள். அவளருகில் இருந்த பையில் டிபிக்கல் தமிழ் பெண் பெயரோடு சென்னை டூ தோஹா என்று எழுதியிருந்தது. அவளுக்கு போன் வந்த மாத்திரத்தில் கடகடவென முகத்தில் வைத்த கர்சீப்பை எடுக்காமல் வண்டியை விட்டு இறங்கியவள், வண்டியின் வாசலருகே காத்திருந்த வயதான பெரியவரின் கைகளை பிடித்து மிகமிக் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாள். அவளது கைபிடியில் அதீத பாசமிருந்ததாய் பட்டது எனக்கு. பெரியவர் மிகவும் அடிப்பட்டவராய், சோகமாய் இருந்தார். கிளம்பும் போது இரண்டு கைகளை ஒரு சேர பற்றி இறுக்கமாய் பிடித்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வண்டியேறினாள். பெரியவர் வண்டியை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, கிளம்பினார். அவளுடன் அவளுக்கு ரொம்பவுமே சம்பந்தப்படாத உருவத்தில் இன் செய்யப்பட்ட பேண்ட் சட்டையுடன் மாமா களையுடன் அமர்ந்திருந்தான். ஏனோ அவள் அவனுடம் பேசவேயில்லை. திண்டிவனத்துக்கு முன் காப்பிக்கடையில் நிறுத்திய போது அவள் காப்பி குடித்துவிட்டு, கடை வாசலில் தூறலில் நின்றபடி தூரத்து பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளுடன் நின்றுவிட்டு, அவளிடமிருந்து எந்தவிதமான மாறுதலும் இல்லாததால், அவர் பஸ் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் டிரைவர் வரும் வரை அதே தூரத்து பார்வையோடு இருந்தாள். சென்னையில் மீனம்பாக்கம் ஸ்டாப்பில் வண்டியை விட்டு இறங்கும் போது அவள் பின்னாடியே அந்த இன் செய்யப்பட்ட மனிதரும் ஒருவருக்கு ஒருவர் பேசாமலேயே போனார்கள்.

ரயில், பஸ்களில் தூக்கம் வராமல் பாட்டு கேட்பவர்கள் தயவு செய்து ஹெட் போன் எடுத்து வரவும். இல்லாவிட்டால் படு கொடுமையாய் இருக்கிறது. அவர்களுக்கு சின்னதாய் வைத்துக் கொண்டு கேட்பதாய் தெரியும். ஆனால் பஸ்ஸில் பயண அமைதியில் ஒலிபெருக்கியை விட கொடுமையாய் ஒலி டிஸ்ட்ரப் செய்கிறது. பாடல் தெரிவுகள் பல சமயங்களில் படு கொடுமை. நேற்று மொத்தம் எட்டு பாட்டுக்கள் எதையும் நான் கேட்டதேயில்லை. தேடி ஆளை கண்டுபிடித்து ஆஃப் செய்ய சொல்லிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தேன்.

கல்லூரி பெண்கள் ஒரு கட்டத்தில் என் பெட்டின் மேற்பெட்டில் கூட்டம் சேர ஆரம்பித்தார்கள். ஒரே பெட்டில் ஏழெட்டு பெண்கள். தொடர்ந்து சத்தமாய், ரகசியமாய், குசுகுசுவென, சினிமா, அவன், இவன், போன், வாத்தியார், ஜொள்ளு, அவ ரொம்ப சீன் போடுறவ, அவளும் அவ ட்ரெஸும், அவனோட அவளுக்கு மேட்டர் ஆயிருச்சு. என் கிட்ட சொன்னா. ஏய்.. சத்தமா பேசாத .... அம்மா இருக்காங்க. இங்க பேசுறது அங்க எப்படீடீ கேட்கும்?. அப்படியே கேட்டாலும் அவங்க காலத்துல இதெல்லாம் பண்ணாமய இருந்திருப்பாங்க?

இவர்கள் பேச்சுக்கு நடுவே அரை மணிக்கொரு தரம் ரெண்டு மூன்று பெண்களுக்கு போன் வந்து கொண்டேயிருந்தது. “ஏய் ஆருடி?” என்ற கேள்வி போன் வந்த பெண்களிடம் கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்க, பெண்கள் “நான் அப்புறம் பேசுறேன் வை” என்று கடுப்படுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இவர்களின் பேச்சின் சுவாரஸ்யம் குறைந்து ஜீ5யில் சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு பார்க்க போய்விட்டேன். இறங்குமிடம் வந்த போது கூட்டமாய் பெண்கள் இறங்க அந்த பெர்த்திலிருந்து எட்டு பேர் இறங்கினார்கள்.
தொடர்ந்து போன் ரீசீவ் செய்த இரண்டு பெண்கள் “இவனுங்க தொல்லை தாங்க முடியலை. கமிட்டாகுறவரைக்கும் அமைதியா இருக்குறவனுங்க.. ஆனப்புறம் பத்து நிமிஷத்துக்கு ஒரு போன் அடிச்சு என்ன பண்ணுறே? எங்க இருக்க? எந்த ஊரு? யாரோட பேசிட்டிருக்கேனு கிடைக்குற கேப்புல எங்க இவனுங்கள விட்டு ஓடிப் போயிருவோமோன்னு பயம். புஜ்ஜி. செல்லம்னு இம்சை. தாங்கலைப்பா. ” என்று அலுத்துக் கொண்டேயிருந்தாள்.

மீண்டும் அவளுக்கு போன் வர, அதை மற்றவளிடம் காட்டி “தோ. வந்திருச்சு. என்னடா வந்துட்டியா? மழை பெய்யுதா. அப்படியே ஓரமா நில்லு வந்துடறேன். பாவம். எனக்காக மழையில நினையுறே? வந்துட்டேன் செல்லம்” என்று சொல்லி போனைக் கட் செய்துவிட்டு, பக்கத்திலிருந்தவளைப் பார்த்து சிரித்தபடி பையை எடுத்து இறங்கினாள். மழையில் நினைந்தபடி நின்று கொண்டிருக்கும் அவனை நினைத்து சிரிப்பு வந்தது.

Post a Comment

No comments: