Thottal Thodarum

Sep 28, 2018

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் வெற்றியா?


இந்தக் கேள்வியை சினிமா ஆர்வலர்கள் பலர் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டரைக் அறிவுக்கும் போது, தியேட்டர்காரர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கை, தமிழக அரசின்  கேளிக்கை வரி விலக்கு, மற்றும், ஏற்கனவே ஒப்புக் கொண்ட தியேட்டர் பராமரிப்பு தொகையை உயர்த்தி அரசாணை பெறுவது போன்றவை தான். ஏற்கனவே தியேட்டரை  மூடி ஆள் வர காத்திருந்த நாட்கள் பலருக்கு நியாபகம் வந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம், வரிசையாய் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சிட்டி திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படம் இல்லையென்றால் என்ன? இருக்கவே இருக்கு, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என்ற குஷன் இருக்கும் போது அதை விட மனசில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆட்டத்திற்கு வர வில்லை என்று அவர்களது ஸ்டரைக் பிசுபிசுத்துப் போக முக்கிய காரணம்.
ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மிக வலுவாய் இம்முறை இந்த ஸ்ட்ரைக்கை நடத்தியது. வி.பி.எப் கட்டணத்தை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டாலும்,  முறையான கணக்கு வழக்குக்காக, கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்ங், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை என பல விதமான சப் டெக்ஸ்ட் கோரிக்கைகளுடன் இன்னும் அழுத்தமாய் போராட்டத்தில் குதித்தார்கள்.க்யூபுக்கு போட்டியாய் ஒன்றிரண்டு நிறுவனங்களை மாஸ்டரிங், மற்றும், ப்ரொஜெக்‌ஷனுக்காக இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி மாஸ்டரிங்குக்காக க்யூப்பை நம்பி இருக்க வேண்டிய தேவையில்லை. தமிழ் தயாரிப்பாளர்கள் கவுன்சிலே செய்து கொடுக்கும் என்று அதற்குரிய கட்டணத்தை வாங்கிக் கொள்ளும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஈ சினிமா எனும் 1 கே ப்ரொஜக்‌ஷனுக்காக இது வரை கட்டிக் கொண்டிருந்த பணத்தில் பாதியை கட்டினால் போதும் என்று க்யூப் ஒத்துக் கொண்டிருந்தாலும், 2கே, 4கேவுக்கான கட்டணங்களில் எந்தவிதமான மாறுதல்களும் இல்லை என்றே தெரிகிறது. வி.பி.எப் கட்டணமாய் பத்தாயிரம் ஆக்கியிருப்பதாய் சொன்னாலும் எவ்வளவு தூரம் அது நிஜம் என்று தெளிவான அறிவிப்பு வெளிவரவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் தற்போது 1கே ஈ சினிமா மிகவும் குறைவான தியேட்டர்களிலேயே இருக்கிறது. பெரும்பாலான தியேட்டர்களில் 2கே, 4 கே என தொழில்நுட்பம் உயர்ந்த ப்ரொஜக்டர்களுக்கு க்யூப் ஏற்கனவே மாற்றியாகிவிட்ட நிலையில் 1 கேவுக்கு பணம் குறைந்து ஏதும் பெரிய புண்ணியமில்லை. அது மட்டுமில்லாமல் 2 கே வுக்கு மேலேஉள்ள விலையில் மாற்றம் செய்தால் க்யூப்புக்கு மற்ற மாநிலங்களில் வாங்கும் பணத்திற்கு பங்கம் வந்துவிடும். என்பதால் அதை அறிவிக்காமல் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இது வரை க்யூப், யூ.எப்.ஓ, பி.எக்ஸ்.டி, ஸ்கிராபிள், ப்ரோவி, சோனி, ஏராக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதற்கு முன்பு க்யூப் நிர்ணையித்த விலையையேத்தான் வாங்கிக் கொண்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு பிறகு ஏராக்ஸ் தன் விலையைக் குறைத்திருக்கிறது இதை முன்பே செய்திருந்தால் நிஜமான போட்டி உருவாகி இந்த பிரச்சனைக்கே முடிவு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் ஏராக்ஸிடம் மிக குறைந்த தியேட்டர்களே இருக்கிறது. ஆறு மாதங்களுக்குள் க்யூபின் அக்ரிமெண்ட் பிடியில் இருப்பவர்கள் விலக வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதன்படி மற்ற டிஜிட்டல் ப்ரொவைடர்கள் தங்களது சிறந்த மார்க்கெட்டிங் மற்றும் செட்டப் வசதிகளை வைத்து எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். க்யூப்பும் தங்கள் பங்கிற்கு இந்த ஆறு மாதங்களுக்குள் தியேட்டர் அதிபர்களை எப்படி கவரப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். நிச்சயம் பணபலம் கொண்ட நிறுவனம் பெரிய அளவில் இறங்கி அடிக்க வாய்ப்பு அதிகம்.

டிக்கெட்டுக்கள் ஆன்லைனில் தான் விற்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை. கேரளாவில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அர்சுக்கும் நேரிடையாய் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையானது, அதற்கான வரி எல்லாமே வெளிப்படையாய் தெரியவரும் முறையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை. இதற்கு வெளிப்படையாய் பல திரையரங்கு உரிமையாளர்கள் நாங்கள் தயார். நேர்மைக்கு பெயர் போனவர்கள் எங்களது உறுப்பினர்கள் என்று கூக்குரலிட்டார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதில் உடன்பாடே இல்லை. ஏனென்றால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து கொண்டிருக்கும் வேலையில் முதல் நாள் இருநூறு டிக்கெட் விற்பனை என்றால் விநியோகஸ்தருக்கு ஏற்றார்ப் போல 50 -100 டிக்கெட் விலையை அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரபல தியேட்டர்கள் பல. அட்ஜெஸ்ட்மெண்ட் பணம் மட்டுமில்லாமல், அதற்கான வரியை கணக்கு காட்ட தேவையில்லை. ஏற்கனவே வசூல் இல்லை அதனால் எம்.ஜி.தரமாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் கைதூக்கிவிட்டபடியால், அட்வான்ஸ் மட்டுமே வாங்கிக் கொண்டு படம் போடுகிற நிலையில் தியேட்டரதிபர்களுக்கு கணக்கு காட்டாமல் இருந்தால்மட்டுமே லாபம். அதிகம்.
சமீபத்தில் எங்களது பட வெளியீட்டிற்கு பிறகு எங்களது பங்கை பெரும் போது அதற்குரிய இன்புட் ஜி.எஸ்.டி டேக்ஸோடு வாங்கிக் கொள்ள இன்வாய்ஸ் எழுதி,வரியோடு வாங்க முடிகிற ஏரியா, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் மட்டுமே, எங்களிடம் கணக்கு சரியாய் இருக்கு, நியாயமாய் இருக்கிறோம், கம்ப்யூட்டர் மூலமாய்த்தான் டிக்கெட் கொடுக்கிறோம் என்று எப்போது அரைகூவல் விடுக்கும் ஏரியாக்களில் எல்லாம் யாருமே ஜி.எஸ்டி நம்பர் கொடுக்கவில்லை. அதற்குரிய கணக்கும் கொடுக்கவில்லை. தோராயமாய் வரிகள் போக இவ்வளவு என்றும் அதை நான் பெற்றுக் கொண்டேன் என்று வாங்கிக் கொள்ளும் முன்பே லெட்டர் கொடுத்தால் பணம் தரும் பழைய வழக்கமே இன்னமும் இருக்கிறது.


இப்படியான பட்சத்தில் பெரிய கேள்விகளோடுதான் இந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, வி.பி.எப் கட்டணம், டிஜிட்டல் ப்ரொவைடர் ப்ரச்சனைகள் ஒரளவுக்கு தான் சரியாகியிக்கிறது. முக்கிய கோரிக்கையான வெளிப்படைத்தன்மைக்கு, அரசின் முன்பாகவே ஜூன் மாதம் வரை டைம் வாங்கியாகிவிட்டது. புக் மை ச்ஷோ, டிக்கெட் நியூ போன்ற நிறுவனங்களுக்கு ஒரே நாளில் தங்களது டிக்கெட் விற்பனை நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளும் வசதியிருக்கும் இந்நாளில் இதற்கு மூன்று மாதங்கள் என்பது நேரத்தை இழுத்தடிக்கும் ஒர் உக்தி என்றே சொல்ல வேண்டும். பார்ப்போம் ஜூன் மாதத்திற்குள்ளாவது இதற்கு விடிவு கிடைக்கிறதா என்று? . இல்லாவிட்டால் காலத்திற்கு தியேட்டர்களின் ஆதிக்கத்தில் பிழைக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு இருந்தே தீரும்..

Post a Comment

No comments: