Thottal Thodarum

Oct 30, 2018

தமிழ் சினிமா இன்றைய நிலை.

தமிழ் சினிமா இன்றைய நிலை.
புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ் சினிமாவின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டீர்களானால், ரெண்டு மாதத்திற்கு முன் என்ன நிலையோ அதை விட கொஞ்சம் மோசம் என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ரிலீஸான மெர்க்குரி, முந்தல் போன்ற படங்களின் வசூல் நிலை மோசம் என்பதுதான் தகவல். படம் வெளியான பிறகு அதன் தகுதிகேற்ப படத்தின் வசூல் அமைவது ஒன்றும் தவறில்லை. ஆனால் பிரபல இயக்குனரின் படம் ஒன்று வெளியாகும் போது அட்லீஸ்ட் மல்ட்டிப்ளெக்ஸுகளிலாவது நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட அம்மாதிரியான விஷயம் நடக்க வில்லை. என்பதை பார்க்கும் போது பயமாகவே இருக்கிறது.

இந்த வாரம் வெளியான தமிழ் படங்கள் தியா, பக்கா, பாடம் ஆகியவை. கூடவே ரெண்டு மலையாள படங்கள், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ். மக்கள் திரைப்படம் பார்க்கவே விரும்பவில்லையோ, என்று சந்தேகப்படும் காலத்தில், அவெஞ்சர்ஸ் வெளியான அத்துனை திரையரங்குகளிலும் காலைக் காட்சியே கிட்டத்தட்ட ஹவுஸ்புல். ஆனால் வெளியான தமிழ்சினிமாவின் நிலை மிகப் பரிதாபம். படத்தின் கண்டெண்ட் ஒரு பக்கம் நன்றாக இல்லை என்ற கருத்து இருந்தாலும், அவென்சர்ஸுக்கு கிடைத்த ஓப்பனிங்கில் பத்து சதவிகிதம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். இதில் படம் வேறு சரியில்லை என்று வெளிவந்தவர்களும், விமர்சகர்களும் சொல்லிவிட்ட படியால். இப்படங்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது. எனக்கென்னவோ எல்லா ஊர்களிலும் பத்து பர்செண்டுக்கு உள்ளான பார்வையாளர்கள் அனைவரும் இணையத்தில் விமர்சனம் செய்கிறவர்களாய் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு படத்திற்கு அதிகபட்சம் 350 தியேட்டர்கள் என்று சொன்னார்கள். ஆனால் வழக்கம் போல சென்ற வாரம் ரிலீசான முந்தல், இந்த வார பாடம் போன்றவைகளுக்கு வழக்கம் போல தியேட்டர்களே இல்லை என்ற நிலைமை தான். சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வழி செய்வது என்ற கொள்கை என்னவானது என்றே தெரியவில்லை. அது சாத்தியம் இல்லை என்றே கூட தோன்றுகிறது.

தியேட்டர் அதிபர்கள் அட்வான்ஸோ, எம்.ஜியோ கொடுக்க முடியாது என்று முடிவான பிறகு, தியேட்டர் வருமானத்தில் வரும் அவர்களது ஷேர் மட்டுமே அவர்களது வருமானம் என்று ஆகும் போது, நிச்சயம் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ள திரைப்படங்களை மட்டுமே வெளியிட ஆசைப்படுவார்கள். ஏனென்றால் அப்படியான படங்களை வெளியிட்டால் தான் பார்க்கிங், டிக்கெட் மூலம் கிடைக்கும் ஷேர், புக் மைஷோ போன்ற டிக்கெட் விற்கும் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் ஒரு டிக்கெட்டுக்கான புக்கிங் சார்ஜில் பங்கு, காண்டீன் வியாபாரம் என பல வழிகளில் பணம் பார்க்க முடியும். புதிய நடிகர்கள் சிறு முதலீட்டு திரைப்படங்களை வெளியிட்டால், அம்மாதிரியான பலவிதமான வருமானங்கள் வரவே வராது. படம் நன்றாக இருக்கிறது என்ற டாக் வரும் வரை காத்திருந்து தியேட்டர் நடத்த வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் டிக்கெட் வருமானம் மட்டுமே தான் இருக்கும் பட்சதில் அதுவும் விற்கும் டிக்கெட்டுக்கு ஏற்பத்தான் வருமானம் என்று இருக்கும் பட்சத்தில் பெரிய படங்களை வெளியிட்டால் மட்டுமே லாபம் பார்கக் முடியும். இல்லாவிட்டால் வாடகை கொடுத்து ஓட்ட சொன்னால் கூட கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். வாடகை வாங்கி படம் போட்டாலும், பல தியேட்டர்களீல் கேண்டீனை வாடகைக்கு விட்டிருப்பார்கள். கூட்டம் வராத படத்தை போட்டு ஆட்கள் வரவில்லை என்றால் காண்டீன்காரரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் 350 திரையரங்கு லிமிட் ஒர்க்கவுட் ஆகும் என்றே தோன்றவில்லை.


இந்த வாரம் செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள ஒர் ரெட்டை திரையரங்கில் அவென்செர்ஸ் ஒரு அரங்கிலும், பக்கா, தியாவை ஒர் திரையரங்கில் ரெண்டிரண்டு ஷோக்களாய் பிரித்துக் கொடுத்திருந்தனர். தமிழ் படங்களுக்கு முதல் நாளில் கிடைத்த வரவேற்பைப் பார்த்தவர்கள். அடுத்த நாளே அவென்சர்ஸை எல்லா அரங்குகளிலும் வெளியிட்டுவிட்டார்கள். சனி, ஞாயிறு கல்லாவை கட்ட இதை விட சிறந்த வழி கிடையாது. இந்த ஆங்கிலப்படம் குழந்தைகளை சரியாக டார்கெட் செய்து, விளம்பரப்படுத்தப்பட்டு, வெளியாகியிருக்கிறது. இப்படம் பற்றிய அறிவோ, மார்வலின் படங்கள் பற்றிய அறிவோ கொஞ்சம் கூட இல்லாமல் வேறு வழியே இல்லாமல் குடும்பம் குடும்பமாய் மக்கள் தம்தம் குழந்தை குட்டிகளோடு படம் பார்க்க வருகிறார்கள். எனவே படம் பார்க்க மக்கள் தயாராக்த்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான கொண்டாட்டத்தை அளிப்பதற்கான படங்கள் தான் இல்லை என்கிற போது, எப்படி மக்களால் குறைந்த அளவே தெரியப்பட்ட, அல்லது சுத்தமாய் தெரியப்படாமலேயே இருக்கும் படங்கள் நாங்கள் வெளியிட முடியும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். 

Post a Comment

1 comment:

srik said...

Why all the very old articles