Thottal Thodarum

May 24, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6
சில வருடங்களுக்கு முன் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் பல சீரியல்களை இயக்கியவர். திரைப்படத்துக்கான முயற்சியில் இருந்தார். எப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், என்னையும் ஸ்க்ரிப்டில் உதவ அழைத்துக் கொள்வார். ஒரு நாள் வழக்கம் போல அழைத்தார். படம் ஒண்ணு ஓகே ஆயிருக்கு. நம்ம காமெடிக்கதைதான். ப்ரொடியூசர் ஓகே சொல்லிட்டாரு. ஆபீஸ் பார்க்க சொல்லியிருக்காரு. என்றார். மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

”அப்ப நாம உடனே கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு காமெடிய சேர்த்துருவோம்’ என்றேன். நண்பரும் உற்சாகமாக தலையாட்டினார்.

அங்கே இங்கே என அலைந்து ஒரு வழியாய் கோயம்பேடில் அலுவலகம் வாடகைக்கு பிடித்தாயிற்று. ஒரு சுபயோக சுபதினத்தில் அலுவலக பூஜை போடப்பட்டது. தயாரிப்பாளர் மட்டுமே வந்து கலந்து கொண்ட நிகழ்வு. உடன் யாரும் வரவில்லை. தயாரிப்பாளருக்கு 50 வயது இருக்கும். நல்ல ஸ்லிம்மாய், வயது தெரியாமல் இருந்தார். இருந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டில் எந்த அறையை அவருக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று கேட்டோம். இரண்டு அறைகளில் பால்கனி உள்ள அறையை அவர் எடுத்துக் கொள்வதாய் சொன்னார். அது வெய்யில் நேரடியாய் உள்ளே வரும் படியான அறை. மதிய நேரத்தில் வெக்கை அதிகமாய் இருக்கும் என்றேன்.

“பரவாயில்லைங்க வெய்யில் படாம வாழுறது தப்பான விஷயம்” என்றார்.

நாங்கள் ஏதும் பேசவில்லை. தினமும் கதை விவாதம் நடக்க ஆரம்பித்தது. இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்தது மட்டுமே நடந்திருக்க, உதவி இயக்குனர்கள் சேர்க்க இயக்குனர் விருப்பப்பட்ட போது, 

“மொதல்ல உங்க நண்பரோட வச்சி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிருங்க. அதுக்கு அப்புறம் உதவியாளர்களை கூப்பிட்டுக்கலாம். பைனல் ஸ்டேஜுல என்றார்.

அவர் சொல்வது சரியென பட்டது. எதற்கு வீண் செலவு எப்படியும் நாங்கள் இருவரும் தான் எழுதப் போகிறோம் எனும் பட்சத்தில் ஷூட்டிங்குக்கிற்கு தயாராகும் நேரத்தில் உதவியாளர்களை போட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தோம். தயாரிப்பாளர் தினமும் அங்கே தங்குவார். திடீரென ரெண்டொரு நாளைக்கு ஆள் இருக்க மாட்டார். எங்கே போகிறேன் என்றும் சொல்ல மாட்டார். அவருடன் யாருமே வர மாட்டார்கள். அவரைத் தேடியும் யாரும் வர மாட்டார்கள் எனும் போது அவரைப் பற்றி ஏதும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத புதிராய் இருந்தார். கொஞ்சம் நாட்கள் பழக்கத்திற்கு பிறகு ‘என்ன சார். .அடிக்கடி காணாம போயிர்றீங்க? ஏதுனாச்சும் சின்ன வீடு செட்டப் பண்ணியிருக்கீங்களா?’என்று ஜாலியாய் கேட்டேன். மையமாய் ஒரு புன்னகையை பூத்து.. “அது ஒண்ணுதான் குறைச்சல்” என்றார்.

தினமும் காலையிலும், மாலையிலும் கதையில் எந்தெந்த காட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நிறுத்தி நிதானமாய் சொல்லச் சொல்வார். அதில் கரெக்‌ஷன் எல்லாம் சொல்வார். பலது மொக்கையான மொக்கையாய் இருக்கும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டு, கரெக்‌ஷன் பண்ணிரலாம் சார் என்பார் இயக்குனர். அப்படியெல்லாம் ஒத்துக்க கூடாது நண்பா என்று அவரை கடிந்து கொள்வேன்.

“இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டா ப்ரோடியூசர் கிடைக்க மாட்டான் “ என்றார் நண்பர். உண்மையும் கூட.
தயாரிப்பாளரிடம் ஒர் விநோதமான பழக்கம் இருந்தது. அரை மணிக்கொரு தரம் பால்கனி கதவை பாதி திறந்து தலையை மட்டுமே நீட்டி வலது, இடது என இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு,  மீண்டும் சாத்திவிட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர்வது. ஏன் அப்படி அறைகுறையாய் கதவை திறந்து பார்க்கிறார் என்று எங்களுக்குள் ஒர் கேள்வி இருந்து கொண்டேயிருந்தாலும், சில விநோத பழக்கங்களை பற்றி கேட்டு அவரை சங்கடத்தில் விடக்கூடாது என விட்டு விட்டோம்.

கதைக்கு லொக்கேஷன் பார்க்க கோபி செட்டி பாளையத்திற்கு போகலாம் என்று முடிவு செய்த போது  வேண்டாம் என்றார். இல்ல சார். .நம்ம ப்ரெண்டோட இடம் ஒண்ணு இருக்கு ப்ரீயா கிடைக்கும் என்றார் இயக்குனர். “அட என்னங்க.. எவ்வளவோ செலவு பண்றோம் லொக்கேஷனுக்காக, அதுவும் ப்ரீயா கிடைக்கும்ங்கிறதுக்காக எல்லாம் அங்க போறது எனக்கு பிடிக்கலை.. இங்கயே ஏதாச்சும் ஒரு இடம் கிராம பேஸோட பாருங்க என்றார்.

வேறொரு இடம் பார்த்து அவரை அழைத்த போது அவர் வரவில்லை நீங்களே பாருங்கள் என்றார். லொகேஷன் வேலைகள் நெருங்க நெருங்க.. அவர் அலுவலகத்துக்கு இரவில் மட்டுமே வர ஆர்மபித்தார். அலுவலகம் ஆரம்பித்த நாட்களில் அங்கே வந்த துணை நடிகையோடான பழக்கம் நெருக்கமாகியிருந்தது. பல நேரங்களில் அவளுடன் இரவுகள் கழிய ஆரம்பித்தது. வழக்கம் போல சில பல நாட்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார். திடீரென போன் செய்து நாளைக்கு இஙக் வந்துருங்க என சொல்லி சென்னையில் அவுட் ஸ்கர்டுக்கு அழைத்து பேசுவார்.

சில நாட்கள் கழித்து, அலுவலகத்திற்கு வந்தார். வழக்கம் போல பால்கனி கதவை திறந்து பார்த்தார். கொஞ்சம் பதட்டமாய் இருந்தது போல இருந்தது. “ஆபீஸ மாத்திருவோமா” என்றார். ஏன் நல்லாத்தானே இருக்கு? என்ற போது இல்லை கொஞ்சம் வாஸ்து சரியில்லைன்னு தோணுது. அதான். சீக்கிரம் வேற ஆபீஸ் பார்ப்போம் என்றார்.  சரி என்று தலையாட்டிவிட்டு கிளம்பினோம். நாங்கள் கிளம்பிய போது துணை நடிகை உள் நுழைந்தாள். 

அடுத்த நாள் காலை அலுவலகம் பூட்டி இருந்தது. நாங்கள் போட்ட பூட்டு இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் துணைநடிகைக்கு போன் செய்தோம். ஓவென அழுதாள். என்னாச்சு என்று கேட்ட போது, “நடு ராத்திரி கதவ தடதடனு தட்டுனாங்க.. இவரு போய் பெட்டுக்கு அடியில ஒளிஞ்சிக்கிட்டாரு. என்னைய போய் திறக்க சொன்னாரு. எனக்கு பயம். போலீஸா இருக்குமோன்னு. அடநீங்க வாங்கன்னு கூப்பிட்டா வர் மாட்டேன்குறாரு. தைரியத்த வர வழைச்சுட்டு போய் திறந்தா நாலு தடி பசங்க  என்னைய தள்ளீவிட்டுட்டு உள்ளாற போய் கட்டிலுக்கு கீழ இருந்தவரை அடிச்சி நிமித்தி, கூட்டிட்டு போய்ட்டாங்க.. என்னாங்க இப்படி பண்றீங்களேன்னு கேட்டு, போலீஸுக்கு போன் பண்ணுவேன்னேன். நாங்களே கோபி செட்டி பாளையம் போலீஸ் தான்னாங்க.. ஊருல இருக்குற ரெண்டு மூணு பெரிய ஆளுங்களோட பினாமிங்கிட்டேர்ந்து டாக்குமெண்டை எடுத்து போலி பத்திரம் செஞ்சு, கை மாத்தி விட்டுட்டு, ஆள் காணாம போயிட்டானாம். ஆறு மாசமா தேடி கண்டுபிடிச்சிருக்காங்க” என்று அழுதாள்.

“சரி விடு அதுக்கு நீ ஏன் அழுவுற? நாங்க தான அழுவணூம்” என்றார் இயக்குனர்.

“அட நீ வேற டைரக்டர்.. மூணு மாசமா வாடகை, உங்க பேட்டா எல்லாம் நான் நகைய அடகுவச்சி கொடுத்தது” என்றாள் அவள் அழுவது நியாயமாய் பட்டது.



Post a Comment

No comments: