Thottal Thodarum

Sep 28, 2017

கொத்து பரோட்டா 2.0-42

Okja
நெட்ப்ளிக்ஸின் திரைப்படம். 2017 கான்ஸ் பெஸ்டிவலில் திரையிடப்பட்ட போது மிக்ஸ்ட் ரெவ்யூவே கிடைத்தாலும், படம் முடிகையில் நான்கு நிமிட ஸ்டாண்டிங் ஓவேஷன் கிடைத்தது என்றார்கள். திரையரங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட படமல்ல என்றதும் அதற்கு ஒரு எதிர்ப்பும் எழுந்தது. சரி..இப்படியான சர்ச்சைகளை மீறி அப்படி என்ன இருக்கிறது இந்த ஓஜாவில் என்று பார்ப்போம். 2007 மி மிராண்டா கம்பெனியின் லூசி மிராண்டா தங்களுடய பேக்டரியில் ஒர் புதிய வகை காண்டாமிருக சைஸ் பன்னியை உருவாக்குகிறார். அதில் 26 குட்டிகளை உலகமெங்கும் ஒவ்வொருவருரிடம்  கொடுத்து வளர்க்கச் சொல்லுகிறார். பத்து வருடங்கள் கழித்து  அவைகளில் ஒன்றை சூப்பர் பிக்காக தெரிந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கிறார். பார்க்கும்போது அஹா.. என்பது போல தோன்றினாலும், அவர்களது உண்மையான எண்ணம் ஜெயண்ட் சைஸ் பன்னியின் மாமிசம்.  

பத்து வருடங்கள் கழித்து சவுத் கொரியாவில் உள்ள ஒர் மலை கிராமத்தில் மிஜா எனும் சிறுமியுடன் ஓஜா அறிமுகமாகிறது. கிட்டத்தட்ட குழந்தையோடு குழந்தையாய் விளையாடுகிறது. மலை உச்சியிலிருந்து கீழே விழ இருக்கும் மிஜாவை தன் உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு துணிந்து செயல்பட்டு காப்பாற்றுகிறது. மற்றபடி,பெரிய பிரச்சனையில்லாத பிராணியாய் வளர்கிறது. மிஜா ஓஜாவின் வாயில் உட்கார்ந்து கொண்டு பல்லெல்லாம் தேய்த்துவிடுகிறாள். ஒரு நாள் கம்பெனியிலிருந்து ஆள் வந்து இந்த ஒஜாவை சூப்பர் பிக்காய் தெரிந்தெடுத்து நியூயார்க்குக்கு கூட்டிக் கொண்டு போகிறார்கள். ஓஜாவை பிரிய மனமில்லாத மிஜா ஓஜாவை தேடி சிட்டிக்கு வருகிறாள். அங்கே ஓஜா ஒரு வேனில் ஏற்றபடுவதைப் பார்த்துவிட்டு,  அவள் ஓஜாவை தப்பிக்க வைக்க முயல, அனிமல் ஃப்ரீடம் க்ரூப் ஒன்று ஓஜாவை காப்பாற்றுகிறது. ஓஜாவின் காதில் ஒரு வீடியோ கேமராவை வைத்துவிட்டு, அதை நியூயார் அனுப்பி வைத்தால் அங்கே இவைகளுக்கு நடக்கும் கொடுமைகளை படம் பிடித்து முக்கிய நாளில் மிராண்டா கம்பெனியை ஒடுக்குவோம் என்று முடிவு செய்கிறார்கள். மிராண்டா கம்பெனி ஓனர் லூசியோ கொரிய பெண்ணையும் கூட்டி வந்து மக்களிடம் காட்டினால் அவர்களின் சாசேஸுகளுக்கு மார்கெட்டிங்கும் ஆகும் என அவளையும் ஓஜாவோடு கூட்டி வருகிறார்கள். பின்பு என்ன ஆனது என்பதை நீங்கள்  உங்கள் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் டிவி நெட்பிளிக்ஸ் திரையில் கண்டு கொள்ளூங்கள்.

சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் பூங் ஜூன் ஹோவை நவீன கால ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என கட்டுரையெல்லாம் வந்ததை வைத்து பார்த்தால், இதன் பின்னணியில் பெரிய புரட்டு மார்கெட்டிங் இருக்கிறது என்பது புரிகிறது. இத்தனைக்கும் சாதாரண இயக்குனரில்லை. மெமரீஸ் ஆஃப் மர்டர் புகழ் பெற்றவர்தான் என்றாலும், ஆங்கிலம் இல்லாமல் அமெரிக்காவில் ஒன்றும் வேலைக்காகாது என்றது ப்ளைட்டில் மிஜா ஆங்கிலம் கற்கும் புத்தகத்தை படிப்பதும்., க்ளைமேக்ஸில் அத்தனை நேரம் இவர் பேசும் பேச்சுக்கு ட்ரான்லேட்டர் வைத்திருக்க, நம்மூர் மாஸ் ஹீரோ தடாலடியாய் கட கட ஆங்கிலம் பேசுவதை போல, மிஜா ஆங்கிலம் பேசும் காட்சி. இவர்கள் வெளியேறும் போது இன்னொரு சூப்பர் பிக் ஜோடி தங்களது குட்டியை வேலிக்கு வெளியே தள்ளிவிட, அதை காவலர்களிடமிருந்து மறைக்க, ஓஜா தன் வாயில் மறைத்து வைத்துக் கொள்ளூம் காட்சியை பார்த்த போது என்ன இதுக்கு?  படம் பார்த்து முடித்த போது எல்லோரும் எழுந்து நான்கு நிமிடம் கை தட்டினார்கள் என்றே புரியவில்லை. சிஜி, கேமரா வேலைகள், ஆங்காங்கே மிக இயல்பான காட்சிகள், மிருக வதை, ஆர்டிபீஷியல் ஜீன்கள் மூலம் உருவாகும் புதிய வகை ஜி.எம் மிருகங்கள் என்பதைத் போன்ற விஷயங்களைத் தவிர, நம் ராம.நாராயணனின் துர்காவுக்கும் இதற்கு பெரிய வித்யாசமில்லை கொஞ்சம் ஹை ஃபை துர்கா மட்டுமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜி.எஸ்.டியுடன் தமிழக கேளீக்கை வரியும் கட்ட வேண்டுமென்ற சட்டம் வந்த மாத்திரத்தில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் தியேட்டர்கள் தங்களது கதவை இழுத்து சாத்தியதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஷால் இதே போன்ற ஒரு  போராட்டத்திற்கு தேதி சொல்லி கூப்பிட்ட போது, இது சரியில்லை. அரசிடம் முதலில் முறையிட்டு விட்டு, பிறகு ஒரு தேதிக்கு பிறகு போராடுவதே சரியானது என்று பேசியவர்கள் தான் இந்த திடீர் முடிவு எடுத்து கடையை மூடியவர்கள். இதனால் பாதிக்கப்பட்டது தமிழக அரசிடம் காசு கொடுத்து வரி விலக்க்கு வாங்கியவர்கள் வேறு வழியேயில்லாமல் ஜி.எஸ்.டி அமலுக்கு முன்னால் ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலை. அன்றைய தேதி வரை தமிழக அரசும் கேளிக்கை வரி பற்றி மூச்சுவிடாமல் இருக்க, என்ன தான் நடக்குது நம்ம நாட்டில என்று குழம்பியபடித்தான்  திரைத்துறையினர் இருந்தார்கள். ஜி.எஸ்.டி 18-28 % தமிழக கேளிக்கை வரி 30 % இரண்டையும் சேர்த்தால் 58% சதவிகிதம் வருகிறது.  120 ரூபாய் டிக்கெட்டில் 58 ரூபாய் போனால் மீதி 61 ரூபாயைத்தான் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும்.  இது ஆகாது என்று முடிவெடுத்ததுதான் இந்த கதவடைப்பு.

தொடர் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் இதன் பின்னணியில் குழு ஈகோ தான் பெரிய அளவில் விளையாடியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இதே 30 ஆம் தேதி இவன் தந்திரன் போன்ற சிறு முதலீட்டு படங்கள் வெளியாகாமல் பெரிய படங்கள் வெளியாகியிருந்தால் நிச்சயம் இந்த கதவடைப்பு உடனடியாய் நடந்தேறியிருக்காது. சென்ற முறை விஷால் அழைத்த போது பாகுபலி பெரிய அளவில் கல்லா கட்டிக் கொண்டிருந்த நேரம். அதை இழக்க யாருக்கும் விருப்பமில்லை.

ஆனால் இந்த முப்பதாம் தேதி வெளியான இவன் தந்திரன், அதாகப்பட்டது மகாஜனங்களே, யானும் தீயவன், இவன் யாரென்று தெரிகிறதா உட்பட கிட்டத்தட்ட எட்டு படங்கள் மூன்றே நாட்களில் தியேட்டர்கள் அடைப்பினால் நிறுத்தப்படுகிறது. இந்த படத் தயாரிப்பாளர்களின் நிலை தான் என்ன? முதல் மூன்று நாள் வசூலை எங்களது பங்கு எடுத்துக் கொள்ளாம்ல மொத்தமாய் அவர்களுக்கே கொடுத்துவிடுகிறோம் என்று தியேட்டர் காரர்கள் அறிவித்திருந்தாலும், முன்பே ஈகோ இல்லாமல் பேசி வைத்து செய்திருந்தால் இந்த குற்றச்சாட்டை ஏற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வரியை விலக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு டிக்கெட் விலையும் உயர்த்தி கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாய் வரி விலக்கு காரணமாய் எந்த விதமான வருமானமும் கொடுக்காத தமிழ் சினிமா ஜி.எஸ்.டியின் வரவால் கிட்டத்தட்ட 9 முதல் 15 % வரி கொடுக்கும் போது எந்த காரணத்துக்காக லோக்கல் கேளிக்கை வரியை போட வேண்டுமென்று புரியவில்லை. கேரளா, கர்நாடகா, வங்காளம் ஆகிய மாநிலங்கள் தங்களது வரியை விலக்கியும், ஜி.எஸ்.டியின் வரும் தங்களது மாநில பங்கையும் திரும்பி அளிக்க முடிவெடுட்திருக்கும் நேரத்தில் ஏன்  இந்த குழப்பம்?.  அதற்கு ஒர் காரணம் கூட உள்ளது.

நமது அரசின் தற்போதைய ஆணைப்படி, மல்ட்டிப்ளெக்ஸுகள் அதிகபட்சம் 120 ரூபாயும், குறைந்த பட்சம் 10 ரூபாய் டிக்கெடு தான் விற்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அதே சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்கள், காம்ப்ளக்ஸ் தியேட்டர்களின் விலை அதற்கும் கீழே தான். ஆனால் தமிழகம் எங்கும் அரசு நிர்ணையித்த விலையில் யாரும் டிக்கெட் விற்பதில்லை. மற்ற மாவட்டங்களில் 35 அதிகபட்ச டிக்கெட் விலை என்பது எல்லாம் வெறும் வாய் அளவில் தான். குறைந்த பட்சம் 80- அதிக பட்சம் 150 வரை விற்றுக் கொண்டிருப்பது அரசுக்கும் தெரியும், மக்களுக்கு தெரியும். அப்படியிருக்க, தற்போதைய ஜிஎஸ்.டியினால் அரசு நிர்ணையித்த விலைக்குத்தான் வரியுடன் வசூலாய் காட்ட வேண்டியிருக்கும், மீறி வாங்கும் மிகுதி பணம் மத்திய அரசின் சட்டப்படி, மணி லாண்டரிங் வகையில் சார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். அது மட்டுமில்லாமல் தற்போதையை புதிய கேளிக்கை வரியையும் சேர்த்தால் இன்னும் குழப்படிதான். இதனால் தான் வரி விலக்கு மட்டுமில்லாமல், கூடவே விலையுர்வையும் சேர்த்து கேட்டுக் கொண்டிருப்பது. பதினைந்து வருடங்கள் அபீஷியலாய் ஏற்றப்படாத டிக்கெட் விலையை அஃபீஷியலாய் ஏற்றிக் கொண்டுத்துவிட்டால் அட்லீஸ்ட் இந்த தில்லாலங்கடி வேலையாவது குறையும். எது எப்படியோ,இந்திய அளவில் தியேட்டர்களுக்கு அதிக மக்கள் வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அப்படியான தங்க வாத்தை அதிகப்படியான பேராசை காரணமாய் டிக்கெட் விலையை அநியாயமாயுயர்த்தி அறுத்துவிடக்கூடாது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

2 comments:

Unknown said...

அருமை

muthu123 said...

Sir, please write something about arasu set top box and fees. Govt announced free set top box with 200rs one time activation fee. But cable operator(mmda, arumbakkam) asking 850rs for set top box and activation. Monthly fees 220rs he is asking. U r the right person to educate us in this matter. Please write something for our basic awareness.