Thottal Thodarum

Mar 14, 2018

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -1

எங்கு பார்த்தாலும் கந்துவட்டி.. கந்து வட்டி என்கிற பேச்சுத்தான். ஒரு மாதத்துக்கு முன் கந்துவட்டிக் காரணமாய் தீக்குளித்த குடும்பத்திற்கு கிடைத்த கவன ஈர்ப்பை விட சமீபத்தில் பைனான்ஸ் பிரச்சனையால் தூக்கு மாட்டிக் கொண்ட இயக்குனர்/ நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரின் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளருமாகிய அசோக்குமாரின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவின் பவர் அப்படி.

இறந்தவர் தன் இறப்புக்கு காரணமானவர் அன்பு செழியன் என்கிற பைனான்ஸியர்தான் என்று எழுதி வைத்துவிட்டு போக, ஏற்கனவே அவரின் பேரில் பல செவிவழிக்கதைகள் உள்ள நிலையில் பற்றிக்கொண்டது. உடனடியாய் கைது செய் என்று ஒரு கோஷ்டி போர்க்கொடி ஏந்தி களத்தில் இறங்க, அடுத்த நாளே அன்பு செழியன் நல்லவர் , வல்லவர், உத்தமர் எங்களீடம் அவர் நன்றாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார். என்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டிக் கொடுக்க ஆரம்பித்த ஒரு கோஷ்டி என தமிழ் சினிமா ரெண்டாய் பிளந்திருக்கிறது. இதில் அரஸ்ட் செய்யச் சொல்லி போராடுகிறவர்கள் அதே அன்புவிடம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களும் இருக்க, இந்த பிரச்சனையை பெரிது செய்து அதில் அவர்களின் கடனை மஞ்சள் குளிக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பெருகியிருக்கிறது.

நிஜத்தில் அன்பு செழியனால் தான் தமிழ் சினிமா நடக்கிறதா? என்று கேட்டால் ஒரு மாதிரி மையமாய் தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை. முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தங்களது பணத்திலிருந்து படமெடுக்க ஆரம்பிப்பார்கள். படம் முடியும் தருவாயில் தேவைக்கேற்ப பணம் கடன் வாங்கிய காலங்களும் உண்டு. செட்டியார்கள் சினிமா பைனான்ஸில் கொடி கட்டி பறந்த காலம் ஒன்று இருந்து, பிற்காலத்தில் தயாரிப்பாளர்கள் ஆன கதையும் உண்டு. ஆனால் அப்படி பணம் கடன் வாங்கும் தயாரிப்பாளர்கள் கந்துவட்டியெல்லாம் வாங்கி படம் செய்ததில்லை.  காரணம் அன்று இருந்த தயாரிப்பு முறையும், வியாபாரமும். சினிமா எனும் ஜிகினா உலகில் அப்படி யாரும் சுலபமாய் நுழைந்துவிட முடியாது. அதையும் மீறி கோட்டைக்குள் நுழைந்தால் அன்றைய சினிமா தயாரிப்பாளர்கள் வசமிருந்தது. தயாரிப்பாளர்களை முதலாளி என்று சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அழைப்பார்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.  ஏனென்றால் பணம் போடும் முதலாளிதான் தெய்வம்.  ஆனால் அதே எம்.ஜி.ஆர் தான் தயாரிப்பாளர்கள் கையில் இருந்த சினிமாவை ஹீரோக்கள் கையில் மாற்றியவர் என்றும் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கொடுத்துவிட்டால் அங்கே இங்கே புரட்டி, இரண்டு பேர் மூன்று பேர் சேர்தெல்லாம் பணம் போட்டு படம் தயாரித்த கதை உண்டு. ஏன் எம்.ஆர்.ராதாவே கூட எம்.ஜி.ஆர்.கால்ஷீட் கிடைத்து படமெடுக்க போய் அதில் பிரச்சனை ஆரம்பித்து பின்பு துப்பாக்கி சூடுவரை போனது உலகம் அறிந்ததே. எனவே பைனான்ஸ் எனும் விஷயம் சினிமாவிற்கு புதிதல்ல. எல்லா காலங்களில் வாங்கி வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் ஒழிந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க முனையும் போது நல்ல கதையை தெரிந்தெடுப்பார்கள். பின்பு அதற்கான நடிகர்களை, டெக்னீஷியன்களை தெரிவு செய்வார்கள். இப்படி கதைக்காக நடிகர்களை தெரிந்தெடுத்த காலத்திலிருந்து விலகி, இன்றைக்கு இந்த நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர். போன படத்து பட்ஜெட் 40 கோடி என்றால் இந்த படத்துக்கு அட்லீஸ்ட் 60 கோடியாவது இருக்க வேண்டுமென்று முடிவு செய்து படமெடுக்கிறார்கள். படத்துக்கு எது தேவையோ அதை விட்டுவிட்டு. முன்பு தயாரிப்பாளர் ஆக வேண்டுமென்றால் பரம்பரை பணக்காரர்கள் தான் படமெடுக்க வருவார்கள். புரடக்‌ஷன் மேனேஜர்கள், மேக்கப் மேன்கள், காஸ்ட்யூமர்கள் என ஆரம்பித்து மொத்தமாய் லட்சத்தில்  வாங்கியவர்கள் கூட தயாரிப்பாளர்கள் ஆனது நடிகர்களின் கால்ஷீட்டும், பைனான்ஸியர்கள் பணத்தினாலும் தான். கையில் கால் காசு கூட இல்லாமல் நடிகர்களின் கால்ஷீட்டை வைத்து ஓ.பி.எம். எனும் அதர் பீப்பிள் மணியை வைத்து படமெடுப்பது எப்படி சுலபமோ? அதைப்போல மிகவும் ரிஸ்கானதும் கூட. படம் தோல்வியெனில் திரும்ப வராது. செட்டில்மெண்ட் செய்ய அந்த நடிகர் தான் வர வேண்டும். தயாரிப்பாளரிடம் ஒன்றும் இருக்காது.

இருபது வருடங்களுக்கு முன் ஒரு படம் தயாரிக்க கொஞ்சம் முன் பணம் வைத்துக் கொண்டு, ஒரு பத்து நாள்ஷூட்டிங் போய் விட்டால் நிச்சயம் பைனான்ஸ் கிடைக்கும். படத்தின் நெகட்டிவ் உரிமையை வைத்துக் கொண்டு பணம் கொடுப்பார்கள். படத்தின் ரிலீஸ் அன்று பணம் செட்டில் செய்யப்பட வேண்டும். எப்படி செட்டில் செய்வார்கள்? என்றால் படத்தை வியாபாரம் செய்துதான். சரியான முறையில் திட்டமிடப்பட்டு, சரியான பட்ஜெட்டில் படமெடுத்த சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பல பேர், படத்தை விற்று லாபமும் சம்பாதித்து கடனை அடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சினிமாவுக்கு தியேட்டர் மூலம் வெளியாகி, அதில் வரும் வருமானம் தவிர வேறேதும் இல்லாத காலம். என்ன ஆடியோ மார்கெட் என்று ஒன்று எங்கேயோ கொஞ்சமே கொஞ்சம் இருந்த காலம். அந்த ஒரே ஒரு வியாபாரத்தை வைத்து பணம் எடுத்து, சம்பாதித்து, கடன் அடைத்தோரும் இருந்த காலமது. ஆனால் இன்றோ, ஆடியோ, வீடியோ, தியேட்டரிக்கல், ஸ்ட்ரீமிங் டிஜிட்டல், வெளிநாட்டு உரிமம், என பல உரிமங்கள் இருந்தாலும் கடன் கடனாகவே இருக்கிறது. இன்றைக்கு பிரபலமாக உள்ள நான்கைந்து நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் இதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தால் எப்படி இவர்களால் இத்தனை கோடியெல்லாம் செலவு செய்து படமெடுக்கிறார்கள் என்று கேட்டீர்களானால் அதற்கு ஒரே காரணம் அன்பு செழியன் போன்ற பைனான்ஸியர்கள் என்றே சொல்வேன்.



Post a Comment

No comments: