Thottal Thodarum

Oct 12, 2021

சாப்பாட்டுக்கடை - கார்த்திக் டிபன் செண்டர்

அண்ணாநகர் ஏரியாவில் மிகப் பிரபலமான கையேந்திபவன் உணவகம். என்னது அண்ணாநகரில் கையேந்தி பவனா? என்று ஆச்சர்யப்படுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் சென்னையில் உணவகங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டு வகை. உயர்தர ஸ்டைலிஷ் உணவகங்கள். மற்றொன்று நடுத்தர மக்களின் உணவகங்கள். முதல் லிஸ்டில் உள்ள உணவங்கள் அவர்களது ரெஸ்டாரண்டுகளை ஆரம்பிக்க விழையும் இடம் நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோடு. இரண்டாவது வகையினர் ஆரம்பிக்க விழையும் இடம் அண்ணாநகர், அதிலும் சாந்தி காலனி என்றால் அது மிகையில்லை. புதிது புதிதாய் உணவங்கள் தோன்றுவதும், மறைவதும் இந்த இரண்டு ஏரியாக்களில் மிக சகஜம். அப்படியான ஒரு ஏரியாவில் வருடங்களாய் மிகவும் பிரபலமான சைவ உணவகம். அதுவும் சைவ கையேந்திபவன் என்றால் அது இந்த கார்த்திக் டிபன் செண்டர் தான்.

கையேந்திபவன் என்று சொல்வதால் அதன் தரம் குறைவாக இருக்குமென்று நினைக்க வேண்டாம். பொடி, நெய் பொடி, பட்டர் பொடி, பட்டர் பொடி க்ரீன் பீஸ் மசாலா, பட்டர் தோசை, பட்டர் பொடி வடகறி, பட்டர் வடகறி, சுடச் சுட பொங்கல், கிச்சடி என காலை முதல் இரவு பதினோரு மணி வரை படு பிஸியான கடை தான் இந்த கார்த்திக் டிபன் செண்டர். 

தாராளமான நெய், மற்றும், பட்டர் போடப்பட்ட தோசைகள், அதற்கு காரம், தேங்காய், சாம்பார் வகைகள் என சுடச்  சுட கொடுக்கிறார்கள். அதிலும், பட்டாணி தோசை அட்டகாசம். பட்டருக்கும், நெய் தோசைக்குமிடையே போட்டி வைத்தால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.. சகாய விலையில் நல்ல தரமான சைவ உணவு வேண்டுகிறவர்கள். கார் கொண்டு போனால் வாங்கி வந்து காரில் உட்கார்ந்து சாப்பிட முடியும். செல்ப் சர்வீஸ் தான். அல்லது நின்று கொண்டு சாப்பிட வேண்டும். இது மட்டும் தான் கொஞ்சம் வசதி குறைவான விஷயம். பட் ஒர்த். டோண்ட் மிஸ்.


Post a Comment

No comments: