Thottal Thodarum

Dec 29, 2023

சாப்பாட்டுக்கடை- ஆர்.ஆர் மெஸ் கோவை

 கோவையில் எப்போது போனாலும் ஒரு முறையாவது வளர்மதி மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவேன். இம்முறை மிகவும் டைட்டான ஷெட்டியூலில் போயிருந்ததால் போக முடியவில்லை. வேலை வேறு கிடைத்த இடத்தில் சாப்பிட்டு விட்டு விடுவோம் என்று தோன்றியதால் காலை டிபனை தங்கிய ஓட்டலிலேயே முடித்துவிட்டு, மதியம் நிகழ்வில் போடப்பட்ட சாப்பாட்டை சாப்பிட உட்கார்ந்தேன். நான் வெஜ் சாப்பிடும் ஆசையில் இருந்தவனுக்கு வெஜ் பிரியாணி, குருமா, தயிர் பச்சடி, தயிர் சாதம், கத்திரிக்காய் காரக்குழம்பு. கத்திரிக்காய் காரக் குழம்பின் கலர், மேல் மிதந்த எண்ணெய் கத்திரிக்காயும் கமான், கமான் என்று அழைத்தது. வெஜ் பிரியாணி தரமாக இருக்க, கொடுக்கப்பட்ட வெஜ் குருமா மட்டும் கொஞ்சம் தண்ணீராய் இருந்தது. கடைசியாய் தயிர்சாதத்தை போட்டுக் கொண்டு அந்த கத்திரிக்காய் குழம்பை ஊற்றிக் கொண்டேன். அவ்வளவாய் காரமில்லாமல், நல்லெண்ணெய் மிதக்கும் கத்திரிக்காய். தயிர் சாதத்தோடு அட்டகாசமாய் இருக்க, யாருப்பா இந்த சப்ளையர்? என்று கேட்ட மாத்திரத்தில் அங்கே நிகழ்விற்கு வந்திருந்த நண்பர் செல்வா நம்முளுதுதான் சார் என்றார். அவரின் கடை பெயர் ஆர்.ஆர். மெஸ் என்றதும் நான்வெஜ் போடுறீங்களா? என்று கேட்டேன். நம்முளூது நான் வெஜ் தான் சார். இங்க தான் வெஜ் போதும்னு சொல்லிட்டாங்க என்றார் வருதத்தோடு. எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பை சிலாகித்தவுடன் "அப்ப நீங்க வெண்டைக்காய் மண்டி சாப்புட்டு பார்க்கணும்" என்றார். அடுத்த நாள் லஞ்சுக்கு நான்வெஜ் மற்றும் வெண்டைககாய் மண்டியுடன் வருகிறேன் என்று சொன்னார். அடுத்த நாள் மதியத்துக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன் அப்பேர்ப்பட்ட சுவை அந்த எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு.

அடுத்த நாள் மதியம் சீரக சம்பா சிக்கன் பிரியாணி, சிக்கன் மசாலா, மட்டன் பள்ளிப்பாளையம், எறா தொக்கு, மீன் குழம்பு, சாதம், தயிர் சாதம், ரசம், கூடவே அவர் சொன்ன வெண்டைக்காய் மண்டி. கட்டுச் சோற்றைப் பிரித்தவுடன் சீரக சம்பா பிரியாணியின் வாசம் மூக்கை தாக்கியது. பச்சை மிளகாய் போட்டு அரைத்த சிக்கன் பிரியாணி. அளவான காரத்துடன் நன்கு வெந்த சிகக்ன் பீசுகளுடன் சிறப்பாகவே இருந்தது. அடுத்ததாய் அதற்கு தொட்டுக் கொள்ள சிக்கன் மசாலாவை எடுத்தேன். சின்னச் சின்ன பீஸுகளோடு கிரேவியாய் இருந்தது சிக்கன் மசாலா.காரம் அத்தனை இல்லை. தக்காளியின் சுவை லேசாய் தூக்கலாய் இருந்தது. அடுத்து சாதம் போட்டு மட்டன் பள்ளிப்பாளையத்தையும் எறா தொக்கையையும் ஒரு கை பார்த்தேன். மட்டன் பள்ளிப்பாளையம் நல்ல காரத்துடன், தேங்காய் அரைத்த மசாலா மற்றும் தேங்காய் துண்டுகளோடு சின்ன சின்ன பீஸுகளாய் லேசாய் கிரேவியோடே தந்திருந்தார். செம்மையாக இருந்தது. அடுத்த சாப்பிட்ட எறாதொக்கு கேட்கவே வேண்டாம். பெரியதாகவும் இல்லாமல் சின்னதாகவும் இல்லாமல் எறா. அதற்கே உரித்தான லேசான தித்திப்புடன் சிறப்பு.  மீன் குழம்பு புளீப்பு அதிகமாகவும் இல்லாமல்  சரியாக இருந்தது. ரசத்ததையும் ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று ரச பாக்ஸை திறக்கும் போதே மணம் தூக்கியது. சென்னையில் இம்மாதிரியான ரசத்தை நான் அருளானந்தத்தில் சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு பிறகு இங்கு தான். சாப்பாட்டோடும், தனியாய் குடித்து வயிறு நிறைந்தது. கட்டங்கடைசியாய் தயிர்சாதம் வெண்டைக்காய் மண்டி. கெட்டியாய் குழம்பு எண்ணையில் வதக்கிய வெண்டைக்காயோடு, அரைத்துவிட்டபதத்தில் தயிர்சாத கிரேவி. தனியாய் சோறு போட்டு சாப்பிட்டாலும் சரி, சப்பாத்தி தோசைக்கும் கூட சாப்பிடலாம். அட்டகாசம். அண்ட் டிவைன். முட்ட முட்ட சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கத்தைக் கூட போட முடியாமல் வேலைக்கு போக வேண்டியதாகிவிட்டது.  கொங்கு சமையலிலிருந்து செட்டிநாட்டு சுவையில் இவர்களது உணவு மிகவும் சிறப்பு.

கோவையில் இருப்பவர்களுக்கு ஒரு முறை டேஸ்ட் செய்து பார்க்க

ஆர்.ஆர். மெஸ்

ராஜ ராஜேஸ்வரி புட்ஸ்

S.F No. 374, Therkku Thottam

Chil See Road, Saravanapettai (po)

cbe 641035

9894129912/9786688898


Post a Comment

No comments: