Thottal Thodarum

Dec 12, 2015

வெள்ளம்.....



வெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒருமுறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய்ஆரம்பித்து, சளசளவென வீடு முழுதும் ஈரவாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். ஜுரம் வந்து ”தண்ணிவருது.. தண்ணிவருது” என புலம்பியிருக்கிறேன். 


பின்பு தண்ணீர் வடித்த வீட்டின் கதவை திறந்து உள்ளே போன மாத்திரத்தில் அத்துனை சேற்றின் நடுவே “ஓ’வென அலறி உட்கார்ந்தபடி அழுத அம்மாவைப் பார்த்து அழுதிருக்கிறேன். அப்பா.. ஏதும் சொல்லாமல் ஒரு கணம் நிறுத்தி நிதானமாய் சுற்றி பார்த்துவிட்டு, கலைந்து சிதைந்திருந்த பொருட்களையெல்லாம் கவனித்தபடி “சரிவா.. போனா போகட்டும் வாங்கிக்கலாம்.. வேலைப்பாப்போம்” என்று சொல்லி அம்மாவை எழுப்பினதை பார்த்திருக்கிறேன். டிவி,  விளையாட்டுப் பொருட்கள் போனது எல்லாம் பெரும் விஷயமாய் இருந்திருக்கிறது. 

வெள்ளம் வடிந்த வீடு என்பது ஊர் சாக்கடையை வீட்டினுள் விட்டு, அதில் நூறு பேர் நடமாடவிட்ட இடம் போலிருக்கும்.  கொழ, கொழவென வழுக்கும் சேறு. வீடெங்கிலிருந்து வரும் வீச்சநாற்றம். அருமையானவுட்னு சொல்லி வாங்கிய கட்டிலெல்லாம் தூக்கி வைக்கலாமென்று கைவைத்தவுடன் பொல, பொலவென உதிருவதை பார்த்தால் ரத்தக்கண்ணீர் வரும். ”என் கல்யாணதப்ப வீட்டுல கொடுத்த பண்டபாத்திரம் அத்தனையும் போயிருச்சு” என அம்மா அப்பாவை மீண்டும் இழந்து அழும் இளம்பெண் போல அழும் பேரன் பேத்தி எடுத்த வயதான அம்மாக்களின் நிலைதான் பெரும்பாலானவர்களுக்கு.
இம்முறை வெள்ளம் வரலாறு காணாதவகையில் சென்னையை ஆக்கிரமித்ததுவிட்டது. 

சென்றவாரம் வெள்ளத்திலிருந்து மீண்டவர்கள் மீண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கோரம். எப்போதும் ஆற்றோர குடியிருப்போர் மட்டுமே வழக்கமாய்படும் அத்துனை கஷ்டங்களையும் மிடில்க்ளாஸ், உயர்தர குடும்பங்களும் பட்டனர்.

விடியற்காலை மூன்று மணிக்கு வழக்கமாய் எங்கள் ஏரியாவில், விநாயகபுரத்தில் தண்ணீர் வந்துவிட்டதாய் சொன்னார்கள். போனவாரம் மூழ்கிய இடம் தான். அடுத்த அரைமணி நேரத்தில் பார்சன்நகரிலிருந்து என் சித்தி போன். “டேய். காரை எடுத்துரு. வாசவழியா ஏ ப்ளாக்வந்திரும்போல” என்றாள். முதலில் நம்ப முடியவில்லை. உடன் கலைந்து கிளம்பினேன். பார்சன்நகர் வாசலில் முட்டி அளவு தண்ணீர். கடந்த முப்பத்தைந்து வருடங்களில் நடந்தேறாத விஷயம். காலனியினுள் போய்காரிடம் நின்றபோது கணுக்கால் அளவுதண்ணீர். .காரைவெளியே எடுக்க எத்தனித்த போது நண்பர்கள். தேவையில்லாம வெளிய போற தண்ணீல மாட்டிக்கப் போவுது என்றார்கள். இதை விட ஒரு இஞ்சு உயரமான இடம்தான் பார்ப்போம் என்று வண்டியை எடுத்து வெளியேற முயற்சித்த போது, தண்ணீரில் மாட்டியது. இஞ்சு கூட நகரவிலை. ஆக்சிலரேட்டரை மட்டும் விடவேயில்லை. கடைசி அழுத்தாய் ஒரு முறை க்ளட்சை பிடித்துவிட்டு ஒரு அழுத்து அழுத்தினேன். மேடேறினேன். அடுத்து என் கேபிள்டிவி அலுவலகம். லேசாய் பயம் தொற்றிக் கொண்டது. இம்முறை வெள்ளம் ஏதோ செய்யப் போகிறது என்று உள்ளுணர்வு கூறியது.

என்னிடம் வேலைப் பார்க்கும் வெங்கடேஷின் வீட்டிற்கு போய் கூப்பிட்டு வந்தேன். நம்ம ஏரியாவெல்லாம் தண்ணியே வராது சங்கரு.. என்றார்.. ஏதும் பேசாமல் வந்து பாரு என்று அழைத்து வந்த போது என் அலுவலக வாசலில்லே சாய்தண்ணீர் இருக்கும் என்று நினைத்த நினைப்பில் வெள்ளம் சூழ்ந்திருந்தது.  ஆல்ரெடி முட்டிக்கால் வரை தண்ணீர்.. பேட்டரி பேக்கபில் ஓடிக் கொண்டிருந்ததை உடனடியாய் கட் செய்துவிட்டு, கிடைத்த பொருட்களை எல்லாம் கட்டர் கொண்டு இணைப்புகளை துண்டித்து இருந்த ஒரே பரண் மேல் தூக்கிப் போடுவதற்குள் அலுவலகத்தினுள் தண்ணீர் ஏற, வேறு வழியேயில்லாமல் உயிர் பிழைக்க ஓடி வர வேண்டியதாகிவிட்டது. இந்த வெள்ளத்தினால் மட்டும் சுமார் எட்டு முதல் பத்துலட்சம் வரையிலான என் தொழில் உபகரணங்கள் அழிந்திருக்கிறது. என் வாழ்வாதாரத்தை மீண்டும் ஆரம்பித்த இடத்திலிருந்து துவங்க வேண்டியிருக்கிறது. எங்கிருந்து துவng என்று  தான்  புரியாமல்  இருக்கிறது.

இந்த ஐந்து நாட்களில் இருளில் தவித்ததை விட அதற்கு பழகிப் போனது தான் சுவாரஸ்யமாய் இருந்தது. எல்லார் வீடுகளிலும் கார்த்திகை அகல்விளக்கை ஏற்றி வைக்க, அது கொடுத்த வெளிச்சத்திலேயே கீழே குழாயில் வரும் தண்ணீரை அடித்து மேலேற்றுவதும், அவ்வப்போது தண்ணீரில் நீந்திபால், குழந்தைகளுக்கான பொருட்கள், காய்கறி என அக்கம்பக்கம் இருந்தவர்கள் எல்லாரும் யாருக்காச்சும் உதவுமென்ற எண்ணத்தில் ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். 

நடு நடுவே நிவாரணமாய் வரும் பொருட்களை கீழே வந்து கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீரில் நின்று வாங்கி ப்ளாட்டில் இருக்கும் எல்லோருக்கும் சப்ளை வேலை, மற்ற ஏரியாக்களில் மாட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு உதவி, என மூன்று நாட்கள் மழையிலும், தண்ணீரிலுமாகவே கழிந்த பொழுதுகள்.

 இரவு நேரங்களில் பையன்களோடு பேசிக் கொண்டே கிடைத்த காய்களை வைத்து சமைக்கப்பட்ட உணவை உண்டது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலருக்கு என்னை தொலைக்காட்சியில் மட்டுமே ஆக்ஸஸபிளான ஆள் என நினைத்துவந்தார்கள். இந்த நான்கு நாட்கள் எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் ஏரியா லோக்கல் அதிமுக வட்டச்செயலாளர் பாஸ்கர் மட்டும் ரெண்டு முறை ஏரியாவுக்குள் சட்டைப்பையில் பெரிய அம்மா படத்துடன் வந்து சாப்பாடு, வகைகளை தொடர்ந்து கொடுத்தார். அரசியல் என்றாலும் காலத்தினால் செய்த உதவி. 

மழை நீர் வடிந்த பின் எங்கள் தெரு மக்கள் எல்லோரும் சேர்ந்து பணம் போட்டு, அக்கம்பக்கம் உள்ள மக்களுக்கு சாம்பார்சாதம் செய்து கொடுத்தார்கள். மச் நீடட் ஒன். 

இருக்கிற கொடுமையிலேயே பெருங்கொடுமை புரளிக் கொடுமை தான். மழைவிட்டு, தண்ணீர் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் மழை ஆரம்பிக்க, தீடீரென ரோட்டில் எங்கும் வண்டி ஹாரன் சத்தங்கள், கீழ் ப்ளோரிலிருந்து மக்கள் அங்கும் இங்கும் பெரும் இறைச்சலோடு ஓடி வரும் குரல்கள், குரல்களில் தெரியும் பயம் எல்லாம் பார்த்து என்னவென்று போய்க் கேட்ட போது செம்பரம்பாக்கம் ஏரி உடைஞ்சிருச்சாம் என்றபடி ஒரு வயதான பெண்மணியை நாற்காலியில் வைத்து, மூன்று பேர் தூக்கிக் கொண்டு மொட்டைமாடிக் போய்க் கொண்டிருந்தார்கள்.  “யாருங்கசொன்னது?” “போலீஸாம்” “உங்ககிட்டசொன்னாங்களா?” “இல்லை ஜெயராஜ் தியேட்டர்கிட்ட ஒரு போலீஸ் சொன்னாராம்” என்றபடி ஓடினார்கள். இரண்டு தோள்களில் குழந்தைகள், கைகளில் சில மூட்டைகள் என உயிர்பிழைக்க ஓடிய மக்களை பார்த்த போது அழுகை அழுகையாய் வந்தது. கீழ் ப்ளோரில் உள்ளவர்கள் எல்லோரும், ரெண்டாவது ப்ளோரிலும், மழை பெய்யும் மொட்டை மாடியிலும்,  குடைபிடித்து உட்கார ஆரம்பித்தார்கள்.

என் வீட்டில் வந்து “வீட்டில் இருக்கும் முக்கிய டாக்குமெண்ட்.. பசங்களோட புக்குங்க” எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கங்க. மத்தபடி ஏதுவும் எடுக்க வேணாம். என்றேன். 
“உயிருக்கே ஆபத்து இதுல புக்க எடுத்துட்டு எனன் செய்யறது?” என அழ ஆரம்பித்தான் சின்னவன். அவன் கேட்பதன் உண்மை உறைத்தாலும், “இல்லடா.. அப்படி ஏதும் ஆகாது.  என சமாதானப்படுத்தினேன்.யோசித்து பார்த்த போது இத்தனை சம்பவங்கள் நடந்தேறி கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகியிருந்தது.  ஊரில் பதட்டம் மட்டும் அடங்கவேயில்லை.
 
“சார். .செம்பரம்பாக்கத்தில ஏரி உடைஞ்சதை கண்ணால பார்த்தவர் சொல்லியிருந்து, அது இங்க நியூசா வரத்துக்குள்ள இந்நேரம் தண்ணி வந்திருக்கும். ஏன்னா அது திறந்து விடப்படுகிற தண்ணியில்லை உடைச்சிட்டு வர தண்ணீ” என்றேன் நண்பர்களிடம். கொஞ்சம் யோசித்து லாஜிக்தான் என்றபடி அரைமனதாய் கிளம்பினார்கள்.

லேண்ட்லைன், செல்போன், இண்டர்நெட் என எந்த விதமான தொலை தொடர்புமில்லாமல் இம்மாதிரியான செய்திகள் தரும் பீதி வெள்ள அபாயத்தை விட மோசமானது. இருந்த பேட்டரியில் ரேடியோ கேட்டாலாவது ஏதாவது செய்தி கிடைக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலான எப்.எம் ரேடியோக்கள், சாப்பாடு வேண்டுமா? தண்ணீர் வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு மீண்டும் சென்னை பீஸ்ட்ராங் என டயலாக் சொல்லி, பாட்டு போட ஆர்ம்பிக்கிறார்களே தவிர, அப்ட்டேட் செய்திகளை தரவேயில்லை. என்ன எழவுக்குடா பாட்டு இப்ப? அட்லீஸ்ட் அரசாங்க இயந்திரத்திடமிருந்ததாவது வாக்கி டாக்கியில் செய்தி சொல்லி பரப்ப வேண்டிய கடமையை யாரும் செய்ததாய் தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ஒரிரு லோக்கல் பாலிடிக்ஸ் அரசியல்வாதிகளைத் தவிர பெரும்பாலான உதவிகரங்கள் அவரவர் ஏரியாக்களில் உள்ள தன்னார்வலர்கள், இளைஞர்களைக் கொண்டு மட்டுமே சிறப்பாக செயல்பட்டது.  நிவாரண உதவிக்கு வந்த பிஸ்கெட் பாக்கெட்டுக்களை பெட்டிக்கடைகளில் அடுத்தநாளில் பாக்கெட் ஐம்பது ரூபாய்க்கு விற்பதை பார்க்கும் போது மனிதம் இழந்த மனிதர்கள் மேல் கோபம் கூட வந்தது.

இந்த வெள்ளத்தில் என் வாழ்வாதாரத்தை இழந்து, உடமைகளை இழந்து மீண்டும் தலெயெடுக்க, ஆரம்பிக்க இருக்கும் தடைகளை எப்படி உடைத்தெறிந்து வரப் போகிறேன் என்ற குழப்பமும் பயமும் வெள்ளமாய் சூழ்ந்திருந்தாலும், எல்லாம் வடிந்து போகுமென்ற நம்பிக்கையும், சகமனிதர்கள் மேல் காட்டும் பரிவுகளும், அக்கறையும் பார்க்க, தான்வழிநடத்துகிறது.

Post a Comment

17 comments:

Nagendra Bharathi said...

வேதனை

வெங்கட் said...

Don't worry sir. I know you will come back...pls let know how can I help you...

தி.தமிழ் இளங்கோ said...

இந்த துயரத்திலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும்.. வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நம்பிக்கையே வாழ்க்கை.

கலையன்பன் said...

தங்கள் வாழ்வு நலமாயிருக்க எனது பிரார்த்தனைகள்!


.

நிலாமதி said...

Thinking of you and your land in my prayers . God save them alive. every thing will be gain again soon.

Unknown said...

Stay strong sir. You will get through this and you will bounce back stronger. Our prayers are with you

Unknown said...

Stay strong sir. You will get through this and you will bounce back stronger. our prayers are with you

குரங்குபெடல் said...

யதார்த்தமான பதிவு . . .

இதுவும் கடந்து போகும் . . . மீண்டு வருவீர்கள் . . . .

க கந்தசாமி said...

மீண்டு எழ, இதனினும் பெரிதாய் வ(ள)ர வாழ்த்துக்கள்

கிருஷ்ணா ஜெராக்ஸ் said...

ithuvum kadanthu pogum

Bala said...

Feeling bad for your losses. You ll raise again.

Anonymous said...

உங்கள் வேதனைகளும் அந்த வேதனைகளுக்கு நடுவிலும் நிமிர்ந்து நிற்கின்ற உங்கள் தன்னம்பிக்கையையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இழப்புகள் எல்லாம் இழப்புகளாகவே இருந்துவிடுவதில்லை சங்கர் சார். நீங்கள் இதைவிடச் சிறப்பாக முன்னேறி வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதையும் உலகம் பார்க்கும்.

அன்புடன்,
ஜிரா

ராஜ நடராஜன் said...

அறிமுகமானவர்களின் துயரம் கொஞ்சம் அதிகமாகவே வலிக்கிறது. இழப்பின் கணக்கை அரசு,வங்கிக்கு எழுதுங்கள். உதவிகள் குறைந்தாலும் குறைந்த பட்சம் ஆவணமாக எதிர்கால சாட்சியாக நிற்கும்.

அன்புடன் அருண் said...

நிச்சயம் மீண்டு வருவீர்கள். அதற்கு மேலும் வருவீர்கள்! உங்கள் மேல் உங்களை விட எங்களுக்கு நம்பிக்கை இருக்கு!

Anonymous said...

Dear Sankar,

Idhuvum Kadanthu Pogum!.......We have to come up...............

sarav said...

Dear Cable,

Hope and believe that you will be able to come out of your current predicament and situation. i believe in a statment , "Tough times never last But Tough People do"

Sarav

MP said...

Dear Cable sir,
Can I have your number? I would like to talk or meet you once
Thank you