Thottal Thodarum

Jul 6, 2016

சாப்பாட்டுக்கடை - சேலம் மங்களம் மெஸ்

சேலத்து மக்களுக்கு இவர்கள் பிரபலம். குறிப்பாய் நாட்டுக் கோழி பிச்சிப் போட்டது என்று ஒரு அயிட்டம் தருவார்கள். ஆவ்ஸமாய் இருக்கும், உடன் மிளகை அதிகமாய் சேர்த்த சிக்கன், மற்றும் மட்டன் குழம்பு வகையராக்கள், கொடுப்பார்கள். சேலத்திலேயே கொஞ்சம் காஸ்ட்லியாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் கொடுக்கும் பிச்சிப் போட்ட நாட்டுக் கோழியை அடிச்சிக்க யாராலும் முடியாது. சில வருடங்களுக்கு முன் சென்னையில் சாலிகிராமத்தில் ஆரம்பித்தார்கள். நாசியில் நாக்கில் அவர்களுடய சாப்பிட்ட ருசி உட்கார்ந்து கொள்ள, அடுத்த நாளே அங்கே ஆஜாராகிவிட்டேன். 


நாட்டுக்கோழியின் கால் பகுதியையோ, அல்லது நெஞ்சு பகுதியையோ பிய்த்துப் போட்டு, பெப்பர் போடப்பட்டு, அளவான காரத்துடன், கறிவேப்பிலையை மிக்ஸர் நடுவில் வருவது போல க்ரிஸ்பியாய், கிட்டத்தட்ட வாயில் போட்டால் கரையும் அளவில் சமைக்கப்பட்டு நம் டேபிளின் மீது வைத்த மாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டால் வாவ்..வாவ்.. வாவ்.. வாழ்க்கைன்னா ரசிக்கணும்யா.. ஆவ்ஸம்.. டிவைன் என்கிற வார்த்தைக்கெல்லாம் அகராதியை தேடாமல் புரிந்து கொள்ளலாம். இப்பேர்ப்பட்ட கடையை சென்னையில் திறந்து விட்டு சரியான விளம்பரம் மற்றும் விலை இல்லாமல் டி.நகரில் ஆர்மபித்து திரும்பவும் சேலத்துக்கே போய்விட்டார்கள். அதன் பிறகு எப்போது சேலத்திற்கு போனால் மட்டுமே பிச்சிப் போட்டது.

சமீபத்தில் ஜெமினிலேப்புக்கு அருகில் அதே பெயரில் ஒரு உணவகம் இருக்க, நேரே போய் பிச்சிப் போட்டது இருக்கா? என்றேன். ஒன்றும் புரியாமல் முழித்தார் கல்லா பெண்மணி. ஓகே.. இது டுபாக்கூர் என்றதும் என் ஆர்வம் புஸ்ஸென்று ஆனது. அதே வாரத்தில் ஐநாக்ஸ் விருகம்பாக்கம் சிக்னலில் நின்றிருந்த போது ஒரு மொக்கை விளம்பரத் தட்டியில் சேலம் மங்களம் விலாஸ் என்று எழுதியிருக்க, அதனடியில் ஒரு போன் நம்பர். அஹா.. என உடனடியாய் போன் அடித்தேன். சேலத்துல இருக்குற அதே மங்களம் விலாஸ் தானே? பெப்பர் போட்ட சிக்கன்குழம்பு, நாட்டுக்கோழி பிச்சிப் போட்டது கொடுக்குற கடை தானே என்று ஒன்றுக்கு நான்கு முறை கேட்டுவிட்டு, அங்கே போனேன். வேம்புலி அம்மன் கோயில் சிக்னலுக்கு எதிரே போகும் ரோட்டில் தான் இருக்கிறது இந்த புதிய சேலம் மங்களம் விலாஸ்.. 
நல்ல இண்டீரியர். போன மாத்திரத்தில் நம் பேலியோ டயட் காரணத்தால் உடன் வந்த நண்பர்கள் எல்லாம் மீல்ஸும், மற்றதையும் ஆர்டர் பண்ண, நான் பிச்சிபோட்ட நாட்டுக்கோழியும், மட்டன் சாப்ஸும் மட்டுமே ஆர்டர் செய்தேன். வந்தது அதே ருசி, அதே கோழி.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் டிவைன்.. ஒரிஜினல் பிச்சிப் போட்ட நாட்டுக் கோழி வேண்டுமென்கிறவர்களுக்கு இது ஒரு சொர்க்கம். என்ன விலைதான் 250 ரூபாய்.  பிரியாணி சீரக சம்பாவில் தருகிறார்கள். அவ்வளவு சிலாக்கியமில்லை..  இது அந்த குடும்பத்து தம்புடையதாம்.

சேலம் மங்களம் மெஸ்
7-41, AVM Ave 1st Main Rd, AVM Avenue, Valasaravakkam, Chennai, Tamil Nadu

Post a Comment

1 comment:

ஸ்ரீமலையப்பன் said...

நாங்களெல்லாம் புதுகையில் இருக்கிறோம் ... //இப்படியெல்லாம் போஸ்ட் போட்டு கடுப்பேத்துரின்களா மை லார்ட் //