Thottal Thodarum

Dec 7, 2016

கொத்து பரோட்டா 2.0-9

கொத்து பரோட்டா – 2.0-9
யூட்யூப் வீடியோ– ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்
யூ ட்யூபில் குறும்படங்கள் என்ற தலைப்பில்லாமல் நிறைய வீடியோக்கள் பிரபல்யம். வலைப்பூ உலகில் எப்படி வித்யாசமான பெயர்களோடு வளைய வருவார்களோ  அது போல, ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர், பாரசிட்டமால் பணியாரம், டெம்பிள் மங்கீஸ், புட் சட்னி என்றெல்லாம் எகனமொகனையாய் பெயர் வைத்துக் கொண்டு  கவனத்தை ஈர்க்கக் கூடிய சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் பல விதமான திறமையாளர்கள். விதவிதமான பகடிகள் என பரந்து பட்ட ஆர்வலர்களை அடையாளம் காட்டும் ஒரு தளமாகிக் கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் நாளுக்கு முன் பார்த்த இந்த ”ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்” குறும்படம் அல்லது வீடியோ படு சுவாரஸ்யம். ரேடியோ ஜாக்கி, நடிகர் என பல முகங்கள் கொண்ட பாலாஜி வேணுகோபாலின் எழுத்தாளர், இயக்குனர் அவதாரம். இந்த வீடியோவின் மிகப்பெரிய பலம் வசனங்கள்.  அதை விட பெரிய ப்ளஸ் அதை கிட்டத்தட்ட மேஜர் சுந்தர்ராஜன் வாய்ஸில் சொன்ன மாடுலேஷன். அதற்கு இணையான விஷுவல்கள். நடிகர்களின் இயல்பான நடிப்பு. என பத்து நிமிட வீடியோவில் குறைந்தது பத்து அட்டகாச சிரிப்பு. ஏழெட்டு புன்முறுவல்கள், நான்கைந்து அவுட்டு களுக்குகளுக்கு நான்  கியாரண்டி.  https://www.youtube.com/watch?v=_Pn2qrfj3tw
@@@@@@@@@@@@@@@@@@@
Sairat
ஃபன்றி பட இயக்குனர் நாகராஜ் இயக்கிய புதிய படம். சாய்ரட். சுமார் நாலு கோடியில் தயாரிக்கபட்ட இந்த மராத்தி படத்தின் மொத்த வசூல் 100 கோடி. மல்ட்டி ப்ளெக்சுகளில்  ஸ்பெஷல் ஷோ போட்டால் புல்லாகி விடுமளவுக்கு  மராத்தி படமொன்று தமிழ்நாட்டில் ஓடியதற்கான காரணம் நாகராஜ் மஞ்சுளே எனும் ப்ராண்டும், இணையத்தில் படம்  பற்றி தொடர்ந்து சிலாகித்து பேசியதன் காரணமென்று நினைக்கிறேன்.

கிராமத்தில் வரும் பதின்ம வயது காதல் பாட்டீல் எனும் மேல் ஜாதி பெண்ணுக்கும், மீனவ சமுதாயத்தை சேர்ந்த பையனுக்கும் காதல். பெண் டாமினெண்ட், காதலை அவள் தான் முதலில் வெளிப்படுத்துகிறாள். பையனுக்கு பெண்ணுக்குமிடையே பரிமாறப்படும் பார்வைகள், பின்னணியிசை, பாடல்கள் எல்லாம் செம்ம. குட்டிக் குட்டி ஷாட்களில் அவர்களின் ரியாக்‌ஷன்கள் அட்டகாசம். முக்கியமாய் ஒரு காட்சியில் காதல் கைகூடிவிட்டதை ரயில் ஓடும் சத்தத்தோடு, அதற்கு இசைந்து ஆடும் ஆட்டம்,  பெண்கள் குளிக்கும் போது தெரிந்தே குதித்து காதலியை பார்த்துக் கொண்டே கரையேறும் காட்சிகள் எல்லாம் க்யூட் கவிதை. அந்த பெண் தான் எவ்வளவு அழகு. அந்த கண்களும், உதடுகளிலும் தெரியும் காதல், சோகம், ஆதிக்கம் எல்லாமே க்ளாஸ்.. உயர்ஜாதியின் திமிர், அதிகார நடை, ட்ராக்டர் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றையும் ஓட்டும் லாவகம், காதலை சொல்லும் காட்சிகள் முதல், க்ளைமேக்ஸ் வரை நாயகி நம் கண்களைவிட்டு, மனதை விட்டு அவரை விலக்கவே முடியவில்லை.

நகரங்களின் டாப்  ஆங்கிள்  கேண்டிட் ஷாட்கள், கரட்டாண்டி போல ஊனமுற்ற நண்பன், கதாநாயகியுடன் உடன் வலம் வரும் சுமார் பெண், ஊர் விட்டு ஓடி வந்து பஸ்ஸிலும், பஸ் ஸ்டாண்டிலும், காமன் பாத்ரூமில் குளித்து சினிமா தியேட்டரில் தூங்கி, வாழும் காட்சிகள், க்ளைமேக்ஸ் என  காதல் படத்தை மராத்தியில் ரைட்ஸ் வாங்காமல் எடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், காதல் படத்தில் பேசாத சில விஷயங்களை இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். முக்கியமாய் பணக்கார புத்திசாலி பெண், ஆவரேஜ் ஆண் ஊரை விட்டு ஓடி போய் எப்படி அவ்வளவு சுலபமாய் வாழ்ந்துவிட முடியும். அவர்களிடையே நடக்கும் ஊடல், கோபம், சந்தேகம், இன்செக்யூரிட்டி அவர்களுக்குள்  ஏற்படும் கைகலப்பு, பொறுமையின்மை, தப்பு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி எல்லாவற்றையும் படம் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தாலும் அதை அழகாய்  சொல்லியதிலும், க்ளைமேக்ஸில் என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிந்தாலும் காட்சியை அமைத்த விதம், அக்கொலைகளை பின்னனியிசையில்லாமல் அமைதியாய், காட்சிப்படுத்திய விதம், குழந்தையின் ரத்தம் தோய்ந்த கால்களின் பதிவு எல்லாம் அழுத்தமான முத்திரை பதித்து நம் மனதை பிசைந்து ஊடுருவ ஆரம்பிக்க வைத்ததில் நம்மூர் காதலை  விட ரெண்டு படி உயர்ந்த படைப்பை  தந்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ராண்ட் நேம் ஆகிவிட்டால் எல்லாவிதமான விமர்சனங்களுக்கு தயாராக இருக்கவேண்டும். பெரும்பாலானவர்கள், முக்கியமாய் இளைஞர்கள் ப்ராண்ட்டை பிடிக்காவிட்டாலும் கூட, எங்கே நாம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவுட்டேட் ஆகிவிடுவோமோ, நமக்கான ஆதரவு குறைந்துவிடுமோ என்றெல்லாம் யோசித்து பாராட்டியோ, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியோ விடுவார்கள். ஆனால் இவையனைத்தும், சோசியல் மீடியாவில் மட்டுமே. இவர்கள் அங்கு  மட்டுமே தினமும் வலம் வருவதால் அது மட்டுமே உலகம் என்றிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படிக்கும் அல்லது கண்களில் படும் விஷயங்களை எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி நம்பி விடுவார்கள். இவர்களின் எண்ணத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ, இவர்களை நம்ப வைப்பதற்காக செயல் படும் கூட்டமொன்று பெரிய அளவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மார்க்கெட்டிங் என்கிற பெயரில் ப்ரோமோ செய்கிறேன் பேர்விழி என்று பத்து பதினைந்து ஃபேக் அக்கவுண்டுகள், சில நூறு பேஸ்புக் பேஜ்கள், என சிலதை  வைத்துக் கொண்டு பத்தாயிரம் முதல் லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அதன் மூலம் இவர்கள் பரப்பும் விஷயத்தைத்தான் பெரும்பான்மையான இணையவாசிகள் நம்புகிறார்கள். உண்மையாகவே ஷோசியல் மீடியாவின் பவர் என்ற ஒன்று உண்மையென்றால் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்கட்சியாகவாகவாவது வந்திருக்க வேண்டும். ஸோ.. பெய்ட் ரிவ்யூசுக்கும், கருத்துக்கும், ஆட்டு மந்தையாகாதீர்கள். சொந்தமாய் ஜிந்தியுங்கள்.  இணையம் எனும் குண்டுச் சட்டிக்குள் வண்டியோட்டாமல் வெளியே வாருங்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாட்டிலைட் உரிமை என்ற ஒரு விஷயம் சினிமாவை எப்படி சில வருடங்களுக்கு முன் உயர்த்த்தியதோ அதே உரிமைதான் கடந்த சில வருடங்களாய் இக்கட்டில் நிற்க வைத்திருக்கிறது. ஒரு கோடியிலிருந்து ரெண்டு கோடிக்குள் தயாரிக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்கள் முதலீட்டில் 50 சதவிகிதம் சாட்டிலைட்டிலேயே வந்துவிடும் என்கிற நிச்சயத்தன்மையும், டிஜிட்டல் சினிமாவும், பெரிதும் கை கொடுக்க, வருடத்திற்கு 200 சொச்ச படங்கள் வெளியாகும் நிலை. ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் நடித்த படமென்றால் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட தற்போது கொஞ்சம் யோசித்து வாங்கிக் கொண்டிருக்கிற நிலை தான். நடிகர்கள் தங்களது சாட்டிலைட் விலையை சம்பளமாய் வாங்கி ஆரம்பித்திருக்க, எட்டு கோடிக்கும் பத்து கோடிக்கும் போய்க் கொண்டிருந்த நடிகர்கள் படமெல்லாம் ஒன்னரைக்கும் ரெண்டு கோடிக்கும் விலை போக ஆரம்பித்துவிட்டது. இருபது முப்பது கோடி விலைக்கு விற்ற  பெரிய நடிகர்கள் படங்களுக்கு இது பொருந்தும். அதனால் தான் முதல் நாள் கலெக்‌ஷனே முப்பது, நாற்பது கோடி என விளம்பரப்படுத்திக் கொள்வது. ஆனால் அது கிராஸா? ஷேரா? என்று கேட்டால் எவருக்கும் தெரியாது. உண்மையில் சொல்லப் போனால் டிவியில் படம் பார்க்கும் பழக்கமே கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. பண்டிகை நாட்களில் போடப்படும் திரைப்படங்களுக்காக காத்திருந்தவர்கள் தற்போதெல்லாம் டிவியில் போடப்படும் விளம்பரங்களின் இம்சை தாங்காமல் படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் இணையம், டிவிடி, என படம் நல்லாருக்கு என்று தெரிந்தால் அதை அவரவர்கள் வசதிக்கு ஏற்ப மொபைலில் கூட பார்க்கும் நிலை வந்து விட்டதால், டிவி வீயூவிங் என்பது குறைந்து கொண்டேயிருக்கிறது. சினிமாவை விட  மற்ற நிகழ்ச்சிகளுக்கு நல்ல டி.ஆர்.பி வருகிறது என்பதால் படத்தில் இன்வெஸ்ட் செய்வதை குறைத்துக் கொண்டு, மற்ற நிகழ்ச்சிகளுக்கு இன்வெஸ்ட் செய்வது அதிகமாகிவிட்டது. நண்பர் ஒருவர் தமிழ் படங்களின் வெளிநாட்டு உரிமை வாங்கி விற்பவர். சின்ன படங்களுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பத்து, பதினைந்து லட்சம் கிடைத்துக் கொண்டிருந்தது தற்போது ரெண்டு மூணு லட்சத்திற்கு கொடுக்க தயாராக இருந்தும் வாங்க் ஆளில்லை என்கிறார். காரணம் படங்களின் குவாலிட்டி என்றும் சொல்கிறார். நானெல்லாம் ராத்திரி பத்து மணிக்கு  மேல் தான் டிவியே பார்க்கிறேன். என்னழவு பத்து மணிக்கு மேலே அவர்களுடய நிகழ்சிகளுடய விளம்பரங்களைப் போட்டு கொல்கிறார்கள்.  தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் வந்திருக்கும் புதிய இம்சை பேஸ்புக் லைவ். உரிமையில்லாமல் எல்லா படங்களையும் ஹெச்.டியில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்கவில்லையென்றால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும்.  சாட்டிலைட் உரிமம் ஏற்கனவே அதளபாதாள நிலையில் இருக்க்கும் பட்சத்தில் மேலும் அடி வாங்கும். உடனடியான நடவடிக்கை பைரஸிக்கு எதிராகவும்,  படங்களை வெளியிடும் முறையில், விற்கும் முறையில் நாலு காசு பார்க்க வாய்ப்பு நிறைய பெருகியிருக்கிறது. சாட்டிலைட் விற்றால் கொஞ்சம் பெரிய காசு வரும் என்று அடியில் கண்ட சொத்துக்கள் எல்லாவற்றையும் 99 வருட பெர்பெச்சுவல் ரைட்ஸாக விற்பதற்கு பதில், எல்லா டிஜிட்டல் தளங்களையும் தனித்தனி உரிமையாய் விற்று தியேட்டர் மட்டுமே என்றில்லாது காசு பார்க்க முடியும். அதை கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் அரசியல் பாராமல் திடமான முடிவெடுத்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும்  கொஞ்சம் மாத்தி யோசியுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
வெள்ளத்தின் போது எல்லா ஏரியாக்களிலும் லேண்ட் லைன், செல் என எல்லா நெட்வொக்கும் கந்தர் கோளமாகியிருந்த நேரம். எல்லாம் சரியாகி லைன் வருவதற்கே கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எனக்கு பதினைந்து நாளாய் வரவில்லை. ஏர்டெல்லிலிருந்து அம்மாத டெலிபோன் பில் வந்தது. மாத வாடகை முழுவதுமாய் போட்டிருந்தார்கள். கஸ்டமர் கேருக்கு போன் செய்து என் லைன் எத்தனை நாளாக வேலை செய்யவில்லை? எத்தனை முறை நான் புகார் அளித்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன். எல்லாவற்றையும் சொன்னார்கள். பின்பு எப்படி நீங்கள் எனக்கு முழு மாத வாடகை கட்டணத்தை கட்டச் சொல்லி அனுப்பலாம் என்று கேட்டேன். பில்லிங் மும்பையிலிருந்து வரும் சார். அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்ட் வேறு என்றார். மும்பையிலிருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு சென்னையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் பிரச்சனை. உங்களத் நெட்வொர்க் எங்கெல்லாம் பழுதாயிருக்கிறது என்று தெரியாதா? அப்படியிருக்க நேர்மையாய் நீங்களே அந்தந்த  இணைப்புகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுத்திருக்க வேண்டுமில்லையா? ஏனென்றால் என்னுடய பில்லிங் சைக்கிள் முறைக்கு முன்னாலேயே உங்களது  நெட்வொர்க் வெள்ளத்தினால் பாதிப்படைந்துவிட்டது, சரி அப்படியே பில்லிங் மும்பையிலிருந்து வந்துவிட்டாலும் கம்யூனிகேஷன் பிஸினெஸில் இருக்கும் நீங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சார்.. உங்களது லைன் இத்தனை நாள் வேலை செய்யாததினால் உங்களுக்கான டிஸ்கவுண்ட் தொகை என்று அறிவிக்க ஒரு எஸ்.எம்.எஸ், அல்லது மின்னஞ்சல் போதுமே? என்றேன். எதிர்புறம் பதில் இல்லை. சற்று நேரத்துக்கு பிறகு எனக்கு இருநூறு ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் எனக்கு இணைப்பு இல்லை.  மாத வாடகை 1500 ரூபாய் எனும் போது பாதி நாட்களுக்கான பணம் டிஸ்கவுண்ட் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள் என்றேன்.  எங்களுடய நெட்வொர்க் மொத்தமும் நாசமாகிவிட்டது என்றார். உங்களுடயது தேசிய அளவிலான நிறுவனம் அதற்கான நஷ்ட ஈட்டை உங்களது இன்ஸூரன்ஸ் டிவிஷன் பார்த்துக் கொள்ளும். ஆனால் என் போன்ற சாதாரணன்களில் நஷ்டத்திற்கு எந்த இன்ஷூரன்ஸ் பொறுப்பெடுத்துக் கொள்ளும். மக்கள் வெள்ளத்தினால் இருப்பவற்றையெல்லாம் இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடும் திருடனைப் போல ஏன் இப்படி அவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள்? என தொடர்ந்து கேட்டேன்.  அடுத்த சில நொடிகள் அமைதிக்கு பிறகு..  எனக்கான டிஸ்கவுண்ட் கிடைத்துவிட்டது. இதையே ஏன் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் செய்யக் கூடாது என்று கேட்டேன். பதில் இல்லை. எனக்கு கேட்கும் தைரியமும் பொறுமையும் இருக்க, என்னால் என் உரிமையை கேட்டாவது பெற முடிந்தது. ஆனால் எத்தனை வாடிக்கையாளர்கள் எங்கே பணம் கட்டவில்லையென்றால் லைனை கட் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் பணம் கட்டியிருப்பார்கள்?. அத்தனையும் ஏமற்று வேலையல்லவா?. இணையத்தின் கேட்டால் கிடைக்கும் குழுவில் இதை போட்டு  எல்லாரையும் கேட்க சொல்லி அதனால் பயனடைந்தார்கள். கேட்காதவர்கள்???..  கேளுங்க.. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

1 comment:

பதி said...

ACT நிறுவனத்தார் வெள்ளத்தின்போது 4 நாள் இணைப்பு இல்லாமைக்கு அவர்களாகவே 200 ரூபாய் குறைத்துக் கொண்டார்கள்.