Thottal Thodarum

Dec 8, 2016

ஜெ.ஜெயலலிதாவாகிய நான்.

ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.  திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த  அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன சொல்ல?. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர்.

சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்ச்சி, சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி ஊழல், ஜெயில், சென்னை வெள்ளத்திற்கான காரணகர்த்தா, ஸ்டிக்கர் பாய்ஸ், எம்.ஜி.ஆருக்கு பிறகான தொடர் வெற்றி என வளைய வந்தவர். வேறொரு அரசியல்வாதிக்கு இத்தனை ப்ரச்சனைகள் வந்திருந்தால் இவ்வளவு அழுத்தமாய், வலிமையாய் கடந்து வந்திருப்பாரா? என்பது சந்தேகமே. தான் ஒரு இரும்பு மனுஷி என்பதை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கடந்து தன் பிம்பத்தை நிஜமென நிருபித்தவர். கடைசிக் காலங்களில் தனக்கென்று குடும்பம் இல்லாததால் மக்களால் நான் மக்களுகாகவே நான் என்கிற தாரக மந்திரத்தை முன்னெடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். சிறந்த நடிகை, உழைப்பாளி, படிப்பாளி, அறிவாளி, தைரியசாலி, இரும்புமனுஷி என பெயர் பெற்றவரின் கடைசி 75 நாட்கள் குழப்பத்தின் உச்சமாகவே கடந்தது.  புலனாய்வு பத்திரிக்கைகள் என்கிற பெயரில் பத்துக்கு மேற்பட்ட பத்திரிக்கைகள் வரும் தமிழ்நாட்டிலிருந்து  ஒரு பத்திரிக்கை கூட அப்பல்லோ எனும் இரும்புக் கதவுகளை திறக்க முடியாத நாட்கள் அவை. ஏன்?. அவரது இறப்பு பற்றிய அறிவிப்பில் கூட அத்தனை குழப்பங்கள். தந்திடிவி மாலையிலேயே அவரின் மறைவைப் பற்றி அறிவித்துவிட, அதை தொடர்ந்து எல்லா டிவிக்களும், ஜெயா டிவி உட்பட அறிவித்து, அதிமுக அலுவலகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட,  அப்பல்லோ அப்படியெல்லாம் இல்லை என்று அறிக்கை விட, இன்னொரு பக்கம் ரெட்டியின் மகள் படு சீரியஸ் என்று போட்ட ட்விட்டை திரும்ப எடுத்துவிட, என ஏகப்பட்ட குழப்பங்கள். இரவு பதினொரு மணி முப்பது நிமிடத்துக்கு தான் அவர் இறந்தார் என்றால் இத்தனை நாளாக கூடாத எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஏன் காலையிலேயே கூட்டப்பட்டது. ஏன் மறுபடியும் மாலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது? சரியாய் பதினோரு மணி தருவாயில்  எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டு, மீடியாவை கட்சி அலுவலகத்துள் அனுமதித்தது. அங்கே வீடியோ காட்சிகள் வெளி வந்து கொண்டிருக்கும் போதே இங்கே அப்பல்லோவில் ஜெவின் மறைவு குறித்து வெளியான அஃபீஷியல் தகவல். உடனடி அழுகையில்லா பதவியேற்பு. என ஆயிரம் குழப்படிகள் இருந்தாலும், தன் தங்கத்தலைவியின் மேல் வைத்திருக்கும் மாறாத அன்பை கலவரமில்லாமல் வெளிப்படுத்திய மக்களும், அதை கட்டிக்காத்த காவல் துறைக்கும் மிகப் பெரிய சல்யூட். ஒரு பேட்டியில் ஜெ தன் வாழ்வை பற்றி சொல்லும் போது தன் விருப்பமான வாழ்வை நான் எப்போதும் வாழ்ந்ததேயில்லை என்று சொல்லியிருந்தார். அவரது மறையும் போது அதே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

Post a Comment

2 comments:

ananthu said...

True ji ...

'பரிவை' சே.குமார் said...

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.