Thottal Thodarum

Mar 10, 2017

கொத்து பரோட்டா 2.0-16

கொத்து பரோட்டா -2.0-16
Hacksaw Ridge
மெல்கிப்சனின் இயக்கத்தில் வெளி வந்துள்ள புதிய படம். உண்மைக் கதைகளை எடுப்பதில் ஹாலிவுட்காரர்கள் விற்பன்னர்கள். அதுவும் போர் சார்ந்த உண்மைக்கதைகளை விதவிதமாய் எடுத்து தள்ளியிருக்கிறார்கள். இந்தப்படம் போரையும், அதனை சார்ந்த வீரர்களின் பின்னணியையும், அவர்களின் உயிருக்கான முக்யத்துவத்தையும் சொல்லும் படம்.  போர் செய்ய ஆயிரம் பேர் இருந்தாலும், போரில் வீழ்பவர்களை காப்பாற்ற ஒருவன் தேவை. டெஸ்மெண்ட் டாஸ் எனும் இளைஞன் நாட்டுக்காக சேவை செய்ய விருப்பம் என ராணுவத்தில் சேர்ந்து, பயிற்சியின் போது எல்லா நிலைகளிலும் வெற்றி பெறுகிறான். ஆனால் ஆயுதப் பயிற்சி, சனிக்கிழமைகளில் பயிற்சியிலும் ஈடுபடமாட்டேன் என்கிறான். நான் ஒரு மெடிக், நான் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று போராடுகிறான். அதனால் மேலதிகாரிகளில் கட்டளைக்கு கீழ்படியவில்லையென குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ தண்டனை அடைகிறான். பின்பு மன்னிக்கப்பட்டு போருக்கு அழைத்துச் செல்லப் படுகிறான் நிராயுதபாணியாய். அந்தப் போரில் தனியொருவனாய் 75 காயம்பட்ட வீரர்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. அதை சொன்னவிதம் க்ளாஸ். டாஸுக்கு இம்மாதிரியான எண்ணம் வரக் காரணம்?. அவனின் குடும்பப் பின்னணி. பயிற்சியின் போது கோழையென கிண்டலடிக்கப்பட்டு, அடித்து வீழ்த்தப்படும் நிகழ்வுகள். போரின் போது உயிரை துச்செமன மதித்து, சக வீரர்களைக் காப்பாற்றும் காட்சிகளாகட்டும், விபத்தில் அடிப்பட்ட ஒருவனை தூக்கிக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கு செல்லுமிடத்தில் அங்கிருக்கும் நர்ஸிடம் பார்த்த மாத்திரத்தில் மனதை பறிகொடுக்கும் நாஸ்டால்ஜிக் காதலாகட்டும் க்யூட். கதாநாயகி அம்பூட்டு க்யூட். படம் பார்த்து முடிந்ததும் மொத்த திரையரங்கும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். மெல்கிப்சன் டிசர்வ் திஸ் ஓவேஷன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Moana
கடல் மட்டுமே இருந்த காலத்தில் தீஃபிட்டி எனும் தீவுக்கடவுள் உருவாகிறாள். தன் இதயம் போன்ற மரகதக் கல்லை வைத்து தீவையும் , அதை சார்ந்த உயிரனங்களின் வாழ்க்கையை மேம்படுத்த நினைக்கிறாள்.  அவளது மரகதக்கல்லை அடைய பல தீயவர்கள் போட்டியிடுகிறார்கள்.  அதை மவுயி எனும் மனிதக்கடவுளாய் போற்றப்படுகிறவன் தான் சார்ந்த மனித இனத்துக்காக அதை திருடுகிறான். அவனிடமிருந்து தீகா எனும் எரிமலை சாத்தான் பறிக்க நினைக்கும் போது அந்த மரகதக்கல் கடலில் வீழ்ந்து காணாமல் போகிறது.  இது நடந்து நூற்றாண்டுகளுக்கு பிறகு வழிவழிக்கதையாய் தன் பாட்டி சொல் கேட்டு வளர்கிறாள் மோனா. பாலிநேஷிய தீவின் குட்டி இளவரசி. பாட்டியின் பேச்சைக் கேட்டு என்றாவது ஒருநாள் கடலின் அப்பக்கத்தை நோக்கி போவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு முறையும் அதை அவளது தந்தை தடுக்கிறார். குழந்தையிலிருந்தே கடல் அவளை தேர்தெடுக்கிறது. அவளுக்காக வழி விடுகிறது. அவளை பாதுகாக்கிறது. தேர்தெடுக்கப்பட்ட அவள் வளர்ந்து சிறுமியாகிறாள். அப்போது அவளது தீவை இருள் சூழ்கிறது. விவசாயம் பொய்க்கிறது. என்ன செய்வது என்று தெரியாது இருக்கும் வேளையில் தீஃபிட்டியின் இதயமான மரகதக்கல்லை அவளிடம் சேர்க்க கிளம்புகிறாள். அவள் அடையும் அனுபவங்கள். மனிதக்கடவுளான மவுயியுடன் சேர்ந்து எப்படி தன் தீவையும், இயற்கையையும் காக்கிறாள் என்பது தான். கதை. நீதிக்கதைகளை வலிக்காமல் அனிமேஷன் மூலமாய் சொல்வதில் டிஸ்னியை அடித்துக் கொள்ள ஆளில்லை. அற்புதமான அனிமேஷன். லயன்கிங் படத்திற்கு பிறகு சூப்பர் ஹிட் பாடல்கள். சுவாரஸ்யமான கதை. கிச்சுக்கிச்சு மூட்டும் ஒன்லைனர்கள். அதிலும் சில காட்சிகள் 3டியில் அட்டகாசம்.  பாடல்கள் நமக்கு வேண்டுமானால் கொஞ்சம் போராய் தோன்றலாம் பட் குழந்தைகளுக்கு பிடிக்கும். குழந்தைகளோடு கொண்டாட்டமாய் பார்க்க சரியான படம். நம் எதிர்கால சந்ததியருக்கு இயற்கையைப் பற்றி பாடமாய் சொல்லி புரிய வைப்பதை விட, இம்மாதிரியான படங்கள் மூலம் அதிகம் புரிய வைக்க முடியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Fantastic Beasts and Where To Find Them
ஹாரிப்பாட்டர் சீரீஸின் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் 2001ல் எழுதிய நாவலின் திரைமொழியாக்கம். 1926. நியூயார்க் நகரத்தில் ஒர் ஆசாதரணமான, அமானுஷ்யமான மிருகத்தால் நிறைய பிரச்சனைகள்.  அதே நேரத்தில் பிரிடிஷ் மேஜிக்காலஜிஸ்ட் ந்யுட் நியூயார்க்கு வருகிறார். அவருடய மேஜிக்கல் சூட்கேஸிலிருந்து விசித்திர மாயாஜால உயிரனமொன்று தப்பிவிடுகிறது.  அதை பிடிக்கப் போகையில் ஜேக்கப் கோவால்ஸ்கி எனும் பேக்கிரி வைக்கும் ஆசையுடன் லோனுக்காக அலையும் சாதாரணனின் பெட்டியோடு ந்யூட்டின் பெட்டி மாறி விட, அதன் பிறகு நடக்கும் கூத்துக்கள் தான் படம். ஒரு பக்கம் ந்யூட் தன் மேஜிக்கல் உயிரினங்களை தேட, இந்த களேபரங்களுக்குள் எதுவும் புரியாமல் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் ஜேக்கம். இன்னொரு பக்கம் கேட்ட மேஜிக்காரர்களை பிடிப்பதற்காகவே அலையும் அதிகாரி. என சுவாரஸ்ய வலை இறுக்கமாய் பின்னப்படுகிறது. இதன் நடுவில் ந்யூட் அமெரிக்க மேஜிக்கல் காங்கிரஸில் சேராத மேஜீஷியன் என்பதால் அவரை கைதும் செய்கிறார்கள். எப்படி எல்லா பிரச்சனைகளிலிருந்து தப்பித்து, அமானுஷ்யமான் நியூயார்க்கை தாக்கும் அந்த வினோத மிருகத்தை கண்டு பிடித்து நகரை காப்பாற்றுக்கிறார்கள் என்பதுதான் கதை. படத்தில் நடிப்பின் மூலம் நம்மை கட்டிப் போட்டவர் என்றால் க்வால்ஸ்கியாக வரும் டேன் பால்கர் தான். மனித இரட்டை நாடி உடம்பும், அவர் முகத்தில் தெரியும் இன்னொசென்ஸும், இக்னோரஸும் அட்டகாசம். ஹாரிப்பாட்டருக்கும் இந்த கதைக்க்கும் சம்பந்தமேயில்லை. சொல்லப் போனால் ஹாரிப்பாட்டருக்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதை. கம்யூட்டர் கிராபிக்ஸ்தான் படத்தின் ஹீரோ, ஹீரோயின், கேரக்டர் ஆர்டிஸ்ட் எல்லாமே. சர்வம் சி.ஜி மயம். படம் ஆர்மபித்து கொஞ்ச நேரத்துக்கு சின்னபசங்களுக்கு முட்டாய் ரீதியில் ஆங்காங்கே சிஜி ஆச்சர்யங்களைக் காட்டி இழுத்தடித்தாலும் விஷுவல் சுவாரஸ்யம். தற்சமயம் பெரும்பாலான ஹாலிவுட் படங்களின் டார்கெட் ஆசிய, இந்திய ஆடியன்ஸாய் இருக்க, ஒரு அரை மணி நேரம் சும்மா டூயட், காமெடின்னு வராம இண்டர்வெல்ல கதைக்க்கு வரும் பாணிக்கு அவர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது.  எனிவே.. ஒர் சுவாரஸ்ய விஷுவல் 3டி படம் பார்க்க வேண்டுமானால் இது நல்ல சாய்ஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@
வர்தா புயலுக்கு பின் வீழ்ந்த மரங்களை எல்லாம் முடுக்கிவிடப்பட்ட அரசு இயந்திரங்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மரத்தை வெட்டி எடுத்துப் போட பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று பேரம் பேசி தனியார்களும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கொடுங்கையூர் போன்ற ஏரியாக்களில் வீழ்ந்த கான்க்ரீட் மின்சார தூண்களை சரி செய்ய, அத்தெருக்காரர்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்தால் தான் மின் இணைப்பு தர முடியும் என்று கேட்டு பணம் வாங்கி மின்சாரத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள்.  எடுக்கப்படும் மரங்களையெல்லாம் ஒவ்வொரு ஏரியாவிலும், காலியிடங்களிலும், என்பது அடி ரோடுகளிலும் ஒரு பக்கத்தை அடைத்து வீசி விடுகிறார்கள். கே.கே.நகர் மெட்ரோ வாட்டர் அலுவலகம் இருக்கும் ஒரு பாதியை முழுக்க, முழுக்க மரக்குப்பைகளை கொண்டு அடைத்துவிட்டார்கள். இப்படி போடப்படும் குப்பைகளை மீண்டும் ஒர் இடத்திற்கு இங்கிருந்து மாற்றும் வரை இதனால் ஏற்படும் கொசு மற்றும் பூச்சி தொந்திரவுகளுக்கு எதிரே இருக்கும் ப்ளாட் வாசிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். குப்பைகளால் ஏற்படும் துற்நாற்றம் வேறு. குப்பைகளை எடுக்கும் போதே அதற்கான ஒர் இடம் தெரிவு செய்து அங்கே போடுவதை விட்டுவிட்டு, இங்கே ஒரு முறை, மீண்டும் அங்கிருந்து இன்னொரு இடத்துக்கு என்று அதற்கான செலவு என பார்க்கும் போது ரெண்டும் கெட்டான் வேலையாய் தெரிகிறது. இதே போலத்தான் வெள்ளத்தின் போது வாரப்பட்ட அத்துனை பொருட்களை இங்கே கொட்டி, இன்னொரு இடத்துக்கு அப்புறம் மாற்றினார்கள். வீண் செலவு, உழைப்பு, எரிபொருள் என டபுள் வேஸ்ட். அரசு இதை கவனிக்க வேண்டும்.Post a Comment

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

N.H. Narasimma Prasad said...

Nice Reviews. Thanks for Sharing...