Thottal Thodarum

Mar 29, 2017

கொத்து பரோட்டா -2.0-17

கொத்து பரோட்டா -2.0-17
சென்னை டூ கோவா நண்பர்களோடு பயணம். இது வரை ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஒட்டு மொத்தமாய் பயணித்ததில்லை. முதல் முறை அதுவும் கோவாவிற்கு எனும் போது சுவாரஸ்யம் அதிகமாகவேயிருந்து. அந்த சுவாரஸ்யத்தை சென்னை டூ ஆற்காடு டோல் ரோடு நாசமாக்கியது படு மோசமான ரோடுகள். ஒவ்வொரு டோலிலும் இந்த ரோட்டுக்கெல்லாம் காசு வாங்குறீங்களே இது நியாயமா? என்று கேட்டதற்கு எதிர் முனையிலிருந்து பதிலில்லை. பெரும்பாலும் நார்த் ஈஸ்ட் முகங்கள்.  எல்லா டோல்களிலும் பேடிஎம். டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் வாங்குகிறார்கள். கார்டு பரிவர்தனைக்கு கொஞ்சம் நேரமெடுக்கிறது. ஆற்காடுக்கு பிறகு ரோடு அருமை. அப்படியே பெங்களூர் போகாமல் நைஸ் ரோடுக்கு வழியே போக டோலுக்கு 155 ரூபாய் கொடுத்தோம். பேரே நைஸாக இருக்கிறதே ரோடும் அதே போல என்று எண்ணியது எங்கள் தவறு. பாதி ரோடு கொஞ்சம் ஏறு மாறாகத்தான் இருந்தது. பாதிக்கு பிறகு நிஜமாகவே நைஸ் ரோடு. தும்கூரிலிருந்து ஹூப்ளி வழியாய் போக முடிவெடுத்தது வண்டியை விட்டோம். அட..அட..அட.. அட்டகாசமான வெண்ணை ரோடு. காரோட்டிகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் சாலை என்றே சொல்ல வேண்டும். ட்ராவலை விரும்புகிறவர்கள் ஓவ்வொருவரும் பயணம் செய்ய வேண்டிய சாலை. ஹூப்ளிக்கு பிறகு கோவாவிற்கு செல்லும் சாலை ஒற்றை சாலை. கொஞ்சம் காடுகளுக்கிடையே செல்லும் சாலை. வளைந்து நெளிந்து சென்று கொண்டேயிருக்கிறது. பகலிலேயே 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க முடியாத சாலை. சாலை அருமையாய் இருந்தாலும் நான்கு வழி சாலையில் வெண்ணையாய் பயணித்துவிட்டு, இந்த சாலையில் பயணிப்பது ஏரோப்ளேனை தரையில் ஓட்டுவது போல.. ஓட்டுகிறவனுக்குத்தான் தெரியும்.  கோவா எங்கும் கிட்டத்தட்ட ரோடுகள் சுத்தமாக இருக்கிறது. பனாஜி அருகே காலையிலும் மாலையும், எப்போது படு ட்ராபிக்காய் இருக்கிறது. குட்டிக்குட்டி தீவுகளில் கூட சாலை வசதிகள் உலகத்தரம். பெர்ரிகள் மக்களுக்கு இலவசம், கார்களுக்கு பத்து ரூபாய் வாங்குகிறார்கள். மக்கள் ட்ராபிக் ரூல்ஸை மிகவும் மதிக்கிறார்கள். கொஞ்சம் நம்மூர் வழக்கத்தில், ஒருமிதி மிதித்து எதிரே வருகிறவனை மதிக்காமல் ஏறிப் போனால் நடு ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு, மெளனமாய் முறைக்கிறார்கள்.  வழியேயில்லாமல் மீண்டும் நம் ட்ராக்கில் பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.  ஊரெங்கும் நல்ல தரமான சரக்குகள். சகாய விலையில். முக்குக்கு முக்கு கடையிருந்தாலும் யாரையும் ரோட்டில் மட்டையாகிப் பார்க்கவில்லை. இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை மிக சாதாரணமாய் மது பானங்களை வாங்கிச் செல்கிறார்கள். பல கடைகளில் வட இந்திய முதிய  பெண்கள் தான் கல்லாவில். ஒரே ஒரு கட்டிங்கிற்கு நிலவைக்காட்டும் சாகச பானங்களாய் இல்லாமல் நன்கு அனுபவித்து குடிக்கக்கூடிய ட்ரிங்குகள். வெளிநாட்டு ஆண் பெண் கூட்டத்தினால் கலர்புல்லாய் இருக்கும் ஆரோபல் பீச். அட்மாஸ்பியர் கொடுத்த தைரியத்தில் மிகச் சுலபமாய் அத்து மீறி, முத்தமும், அரை உடையுமாய் வெட்கம் விட்ட நம்மூர் இளம் பெண்கள்.  கிட்டத்தட்ட சிக்ஸ் பேக்கிலும், சிங்கிள் பேக்கிலுமாய் மிக இளைஞர்கள்.  சற்றே காலியாய் இருந்தாலும், உள்வாங்கிய கடலான மேரிஜம் பீச். ததும்பும் கடலலைகளுக்கு மிக அருகில் கடைகளை திறந்து வைத்து, அலைகளில் கால் நினைத்தபடி பீரையோ, பகார்டி பீரிசரையோ சப்பியபடி, வெய்யிலில் விட்டமின் டியை பெற்றுக் கொண்டிருக்கும் டூ பீஸ் வெளிநாட்டு பெண்கள். இவங்களுக்கு எல்லாம் தொப்பையே போடாதா என்று என்னை தாண்டிப் போன பெண்ணொருத்தி தன் கணவன் அல்லது பாய்ப்ரெண்டிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். தாய்லாந்து ரோடுகளை நியாபகப்படுத்தும் பாகா பீச் “டோட்டோ பப்” ரோடு. இரவு டிஸ்கோவிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே ஆள் பிடிக்கும் மிக இளைஞர்கள். இரவு நெருங்க நெருங்க உதடெங்கும் சிகப்பாய் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு டோட்டோவை நோக்கி நடை பயிலும் அரவாணிகள். இந்தியாவில் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலம் கோவா என்றார்கள் ஒருத்தன் கூட கார்ட் வாங்க மாட்டேன் என்கிறார்கள். இத்தனைக்கும் அங்கே பீ.ஜே.பி ஆட்சியாம். கார்ட் மிஷின் வைத்திருந்தாலும் கார்ட் நஹி தான். இந்த வருட சீசனை இந்த டிமானிடேஷன் மிகவும் பாதித்திருக்கிறது. 30 சதவிகிதம் தான் கூட்டம் என்கிறார்கள்.  ஆள் நடமாட்டமே இல்லாது இருந்தாலும், பழைய போர்ச்சுக்கல் கலாச்சாரத்தை மெயிண்டெயின் செய்யும் கட்டடங்களோடு கொஞ்சம் புராதனமான டிவார் தீவு. அங்கிருக்கும் புத்தம் புதிய ஐசிஐசிஐ பேங்கும், அங்கே மண் மணக்க தமிழ் பேசும் மதுரைப் பையனும். குட்டியாய் இருந்தாலும் சிங்கிள் மேன் ஷோவாய் பார் சப்ளையும் செய்து கொண்டு, கோவா ஸ்பெஷல் மீனும், ப்ரானும், அளித்து, வெஜ் தாலிக்கு தாலை சாம்பாராய் குடித்த எங்கள் குழுவினருக்கு மீண்டும் தாலும், சலிக்காத மேன்ஷன் ஹவுசுடன், கார்ல்ஸ்பெர்க்கை அளித்து, பேபியிடமிருந்து பணம் அக்கவுண்டுக்கு வந்துவிட்டதா? என்று கேட்டபடி அமர்ந்த பெருசிடம் “அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை. மாசா மாசம் அக்கவுண்டுக்கு வந்திரும் வராவிட்டாலும் பிரச்சனையில்லை ஐ வில் டேக் கேர் ஆப்யூ” என்று சரளமாய் ஆங்கிலம் பேசியபடி, அவரது விருப்ப பீரையும், மீனையும் டேபிளில் வைத்துப் போன கடைக்காரர். கொஞ்சம் ஊருக்கு வெளியே வாய்போய் எனும் இடத்துக்கு பக்கத்தில் விழும் ஹார்ப்போய் நீர்வீழ்ச்சி.  வாய்ப்போய்க்கு போகும் ஸ்லீக் சாலைகளுக்காகவே பயணித்த 60 கிலோ மீட்டர்கள். சென்னை எக்ஸ்பிரஸினால் பிரபலமான தூத் சாகர் நீர்வீழ்ச்சி. ஒரு காலத்தில் பைக்கில் போய் வந்து கொண்டிருந்த இடத்திற்கு தற்போது நானூறு ஜீப்புகளை வைத்துக் கொண்டு தலைக்கு 400 ரூபாய் பீஸும், லைப் ஜாக்கெட்டுக்கு 30 ரூபாயும் வாங்கிக் கொண்டு உள் நுழைய அனுமதிக்கிறார்கள்.  போகும் போது எத்தனை ப்ளாஸ்டிக் பாட்டில்கள் வைத்து இருக்குறீர்கள் என்றெல்லாம் எண்ணி அனுப்புகிறார்கள். வரும் போது அதை செக் செய்வார்கள் என்று பார்த்தால் அதெல்லாம் இல்லை. ஆனால் உள்ளே போன போது செய்த செக்கிங்கினால்,  வரும் போது பெரும்பாலனவர்கள் ப்ளாஸ்டிக் பாட்டிலை போடாமல் எடுத்து வந்திருந்தார்கள். நீர்வீழ்ச்சியில் லைப் ஜாக்கெட் இல்லாமல் குதிக்க முடியாது. தண்ணீரை பார்த்த உற்சாகத்தில் சட்டென குதித்ததும், உச்சி மண்டை வரை உள்ளங்காலில் கரண்ட் வைத்தது போல சுரீர் என்று ஏறியது. அத்தனை ஜில்லிப்பு. மணிக்கு ஒரு முறை கூட்ஸ் வண்டி ஒன்று அருவிக்கு மேலே க்ராஸ் செய்கிறது. அது செட் ப்ராப்பர்ட்டியா இல்லை நிஜமாகவா என்று தெரியவில்லை. மக்கள் ரயிலையே பார்க்காது போல குதூகலிக்கிறார்கள். ஆண் பெண் பேதமில்லாமல் சட்சட்டென உடை மாற்றி தண்ணீரில் குதிப்பவர்களை பார்க்கும் போது உற்சாகமாயிருக்கிறது. ஆவ் சம் எக்ஸ்பீரியன்ஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தேவனகரே “பென்ன தோசையும்” தார்வாட் “பேடாவும்”
இரவில் பயணிப்பது எங்களுக்கு ஒவ்வாத விஷயம் என்பதாலும், ஹூப்ளிக்கு 300 கிலோ மீட்டர் முன்பு இருக்கு தேவனகரே பென்னே தோசைக்கு புகழ் பெற்றதாய் இருந்ததாலும், அங்கேயே ஸ்டே. 2000 ரூபாய்க்கு கிட்டத்தட்ட ஒரு சிங்கிள் பெட்ரூம் அறையை ஒதுக்கிக் கொடுத்தார்கள். பென்னே தோசை இரவில் கிடக்காது என்றார்கள். ஊருக்கு ஆரம்பத்திலேயே இருந்ததால்.. அங்கே விடியற்காலையில் லோக்கல் மார்கெட் ஆரம்பித்திருந்தது. பச்சை பசேல் என்ற காய்கறிகள் படு ப்ரெஷ்ஷாக கடை விரிக்கப்பட்டிருக்க, அங்கேயிருந்த சின்னச் சின்ன உணவங்களில் கூட பென்னே தோசை போட்டார்கள். அட்டகாசமான தோசை. தோசை மாவு கொஞ்சம் தண்ணீராய் கரைத்து கொள்கிறார்கள். தோசை போடுவதற்கு முன்பே கல்லை கொஞ்சம் வெண்ணையை போட்டு பதப்படுத்திக் கொண்டு, பின்பு மாவை ஊற்றி, ஒரு பக்கம் வேகும் போது அதன் மேல் நான்கைந்து பொட்டு ஆவின் வெண்ணையை போட்டு, அது உருகுவதற்குள் திருப்பிப் போடுகிறார்கள். உட்பக்கமாய் உருகும் வெண்ணை அப்படியே தோசை மாவோடு ஊற, மீண்டும் மீண்டும் அந்த தோசை திருப்பித் திருப்பி போடப்பட்டு, கடைசியாய், மீண்டும் அதன் மேல் நான்கைந்து பொட்டு வெண்ணைய். மீண்டும் தோசையை திரும்பத் திரும்ப போட்டு, இரண்டு பக்கமும், பொன் நிறமாய் ஆனவுடன் தோசையை மடக்கி ப்ளேட்டில் போட்டு, கொஞ்சம் தித்திப்பான சாம்பாருடன், பச்சை மிளகாய் அதிகமாய் சேர்க்கப்பட்ட தாளித்து விடாத தேங்காய் சட்டினியோடு. செட் தோசை வெறும் 50 ரூபாய்க்கு. டிவைக்கு அருகில் என்றால் அது மிகையில்லை.
ஹைவேயில் தார்வாட் வரும் போது ஊர் எல்லையில் பேடா கடை ஒன்று இருந்தது. நண்பர்களுக்கு போட்டோ எடுத்து உடனடியாய் அனுப்பிய போது மறக்காமல் தார்வாட் பேடா சாப்பிடாமல் போகக்கடவது என்று சொல்ல, ஆளுக்கு ஒரு அரைக்கிலோ வாங்கினோம். காப்பிக்கலரில் பேடா.. தித்திப்பு குறைவாய், கொஞ்சம் அன்சைஸில் இருந்தாலும், மேலே சக்கரையை தூளாக்கி அதன் மேல் தூவியிருந்தார்கள். ஆவ்சம் டேஸ்ட்.. வீட்டிற்கு வாங்கி வந்து திறந்த மாத்திரத்தில அரைக்கிலோ காலி. நான் பேலியோ ஆசாமி என்பதால் ஒரே ஒரு பீஸோடு நிறுத்திக் கொண்டது பெரும் சகாப்தம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hand of God
நெட்ப்ளிக்ஸுக்கு போட்டியாய் அமேசான் ஆரம்பித்திருக்கும் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் சீரீஸ்.  பெர்னல் ஹாரிஸ் ஒரு தில்லாலங்கடி ஜட்ஜ். அவருடய மகன் வாயில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மயிரிழையில் உயிர் பிழைத்தாலும் கோமாவில் இருக்கிறான். அவனது தற்கொலைக்கு காரணம். அவன் மனைவி ஜோய்சிலினை அவன் கண் முன்னே ரேப் செய்யப்பட்டதுதான் என்று அனைவரும் நம்புகிறார்கள். அந்நேரத்தில் ஜட்ஜ் ஹாரிஸுக்கு திடீரென மத நம்பிக்கை மேலோங்கி பாப்டைஸ் செய்து கொண்டு, இறைவன் தன்னிடம் பேசுகிறார் என்று ஒரு சொல்ல ஆரம்பிக்கிறார். திடீரென கோமாவில் இருக்கும் அவரது மகன் அவனுடன் பேசுகிறதாகவும், அவன் சாவுக்கு காரணமானவர்களை அவன் அடையாளம் காட்ட க்ளூ கொடுப்பதாகவும் அவர் முன் காட்சிகள் விரிகின்றது. மற்றவர்களுக்கு இவரது பிரச்சனை ஹலூசினேஷன், மன பிழற்வாய் தெரிந்தாலும், இவரது நம்பிக்கையை உறுதிப் படுத்தும் விதத்தில் ஒவ்வொரு க்ளூவும் கிடைக்க, கிடைக்க, தன் மகன் மற்றும் மருமகளின் இந்நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார். ஒரு தீவிர மதவாதியான கே.டி எனும் எக்ஸ் கைதியின் மூலமாய். ஒரு பக்கம் மருமகள் லைஃப் கேரை ஆப் செய்து மகனுக்கு விடுதலை கொடு என்று போராட, அவளின் முயற்சியை கோர்டு மூலமாய் தடுத்து, தன் பழிவாங்குதலை கடவுள், கேடி, மற்றும் தன் பதவியின் அதிகாரத்தோடு செய்து முடிக்க அலைகிறார். நிஜமாகவே கடவுள் அவருக்கு உதவுகிறாரா? அல்லது அது அவரது மனப்பிழற்வா? இவரது இந்த நிலையினால் அவரது சமுதாய நிலையில் ஏற்படும் பிரச்சனைகள். உடலுறவைத் தாண்டி பழகும் ப்ராஸ்டிட்டியூட்டின் நெருக்கம். கடவுள் சார்ந்த பிரச்சனைகள் என சுவாரஸ்யமாய் போகிறது. கொஞ்சம் டார்க் வகை கதைதான். என்ன முழு பத்து எபிசோடை பார்த்ததும் அமெரிக்க பக்தி படம் பார்த்த ஃபீல் வராமல் போகாது. ஜட்ஜ் ஹாரிஸாய் நடித்த,ரான் பெர்ல்மெனின் நடிப்பும். உயர்தர ப்ராஸாய் நடித்தவரின் நடிப்பும் அபாரம். Emayatzy Corinealdi

@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

No comments: