Thottal Thodarum

Sep 1, 2020

சாப்பாட்டுக்கடை - Amma Cheyyi Curry's Point

நல் உணவு நல் இதயங்களை இணைக்கும் என்பார்கள். அப்படியான ஒர் நல்லுணவை சுவைத்ததில் ஆரம்பித்ததுதான் அதிகாரம் வெப் சீரீஸ் குழு. முதல் நாள் சரணை சந்திக்க போன போது மதிய சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. ”சாப்புடுறீங்களா?” என்று பிரபு கேட்ட போது வேண்டாம் என்றுதான் சொல்ல நினைத்தேன். எண்ணை மிதக்கும் கத்திரிக்காய் காரக்குழம்பின் நிறத்தை பார்க்கும் வரை, மணத்தைப் பார்த்ததும் களம் இறங்கி விட்டேன். தேன் போன்ற காரக்குழம்பு. காரம், மணம் குணம் என எல்லாமே சரிவிகிதமாய் குழைந்த குழம்பாய் இருக்க, “எந்த மெஸ்ஸுங்க? “ என்ற போது “நம்ம வீட்டுல செய்தது சார். அம்மா தான் சமைப்பாங்க” என்றார் பிரகாஷ். நிறுவனத்தின் ஈ.பி

அதன் பிறகு அவர்கள் வீட்டிலிருந்து வரும் மதிய சாப்பாட்டிற்காகவே வேலையே இல்லாவிட்டாலும் அந்நேரத்தில் ஆஜர் ஆகிவிடுவேன். அதிலும் நான் வெஜ் குழம்பும், மற்றும் தலைக்கறி, சட்னி  என்றால் கேட்கவே வேண்டாம். ப்ரகாஷும் உணவுப் பிரியர். நான் அவருக்கு பல சின்னக் கடைகளை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பேன். பல சமயம் மதிய சாப்பாட்டிற்கு சில கடைகளின் ஸ்பெஷல் ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டும் போய் சாப்பிடுவோம். எங்கள் அலுவலகத்தில் ஒர் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் யாருக்காவது ஏதாவது பிடித்த சாப்பிடும் அயிட்டமென்றால் அதை வீட்டிற்கு வாங்குவது போல அவர்களுக்காகவும் ஒரு பார்சல் வாங்கி வந்துவிடுவது வழக்கம். இப்படியான உணவுப்பிரியர்கள் அடங்கிய கூட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு எப்போதும் பஞ்சமேயிருந்ததில்லை. ஏனேன்றால் காரம், மணம், குணம் என அத்தனை சமாச்சாரங்களும் எங்கள் ப்ராஜெக்டிலும் சரிவிகிதமாய் இருக்கத்தான் செய்தது. 

சட்னி என்றால் நம்மூரில் தொகையல் வகையராவைத்தான் ஆந்திராக்காரர்கள் சொல்வார்கள். தேங்காய், பீட்ரூட் என பல வகைகளில் தினமொரு சட்னியை அனுப்பாமல் இருந்ததில்லை. நல்ல பொலபொலவென வடித்த பச்சரி சோற்றுடன் ஒரு ஸ்பூன் சட்னியை போட்டு, நெய்யூற்றி பிசைந்து சாப்பிட்டுப் பாருங்க அப்புறம் சொல்வீர்கள் டிவைனுக்கான அர்த்தம் என்னவென்று.

கத்திரிக்காய் எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு,  கோங்குரா போட்ட சிக்கன் தொக்கு, நன்கு வேகவைக்கப்பட்ட நீர்த்துப் போகாத மட்டன் குழம்பு. சாப்பிட்ட அரை மணிக்கு பிறகும் கையில் மட்டன் வாசம் கும்முனு தூக்கும்.

ஒரு முறை தலைக்கறி தொக்கு கொண்டு வந்திருந்தார். தொக்கும் இல்லாமல், கிரேவியுமில்லாத ஒர் கலவை. அட்டகாசம் என்பது சாதாரன பதம். சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும். அதன் நிஜச் சுவை. ப்ரகாஷ்  அம்மாவின் கைப்பக்குவம் அத்தனை ஜீவிதமானது. ஒரு நாள் கூட சாப்பிட்ட அஜீரணமோ, நெஞ்செரிச்சலோ வந்ததேயில்லை. அத்தனை தரமான மசாலாக்கள், எண்ணெய் வகைகளை தான் பயன்படுத்துகிறார்.  உணவில் மீதான கவனத்தில் அன்பு தெரியும். 

”சீக்கிரம் ஒரு குழம்புக்கடை போடுங்க” என்று தொடர்ந்து பிரகாஷிடம் இம்சிக்க ஆரம்பிக்க, அவருக்கும் அதே ஐடியா இருந்தபடியால் கடை தேடிக் கொண்டேயிருந்தார்.  படப்பிடிப்பு அது இதுவென பரபரவென சுற்றிக் கொண்டிருந்தவரின் பரபரப்பை கொரானா முடக்கியதால் நடந்த நல்ல விஷயம் குழம்புக்கடை போட்டேவிட்டார். திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார். முதல் முதலாய் அவரது அம்மாவை சந்தித்தேன். “அம்மா உங்களுடய சாப்பாட்டுக்கு நான் அடிமை” என்றேன். “நாம கடை போடுறதுக்கு இவரும் ஒரு காரணம்” என்றார் பிரகாஷ். 

”ஆமா நான் தான் உங்களை செஃப் ஆக்கினேன்.” என்று சொல்லி சிரித்தேன்.

“நான் ஏற்கனவே என் பெரிய குடும்பத்துக்கு செஃப் தான்” என்றவர் சற்று யோசித்தபடி, “என்ன தான் கஷ்டம்னாலும் நல்ல சாப்பாடுங்கிறது சந்தோஷமில்லையா?. நல்ல பச்சரிசியில நெய்யூத்தி, சட்னியப் போட்டு பிசைஞ்சு சாப்ட்டா கிடைக்கிற சந்தோஷம் வேற எதுலாயாச்சும் வருங்கிற?” என்றார். அம்மாவின் மனசு போலவே அவர்களின் கைப்பக்குவம். மனசிலிருந்து வரும் உணவு. நிச்சயம் உங்கள் மனதையும் வயிற்றையும் நிறைக்கும் என்பது நான் கேரண்டி. டோண்ட் மிஸ் த டிவைன்.


Amma Cheyyi
New No. 65, Old No. 17, Gangai Amman Koil St
Vadapalani, ch -26
ph: 099628 88861
Opp Ram Kalyanamandam 
Near Gangai amman koilPost a Comment

1 comment:

மகா said...

Sir Can they deliver to Thalambur (Naval ur). I need entire menu :)