பிச்சம்மை மெஸ்- நுங்கம்பாக்கம்.

 வழக்கமாய் காதர் நவாஸ் கான் ரோட்டில் இந்த பெயரில் எல்லாம் கடை திறக்கவே மாட்டார்கள். ஏகப்பட்ட குண்டு குழி ரோட்டாகிப் போனதாலோ என்னவோ இப்படியான ஒரு கடைக்கு வழி விட்டிருக்கிறார்கள் போல. 599 ரூபாய்க்கு அன்லிமிடெட் நான் வெஜ் சாப்பாடு என்று கேள்விப் பட்டதிலிருந்து ரொம்ப நாளாக போக ஆசை. கடை திறந்தே ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது என்பது வேறு விஷயம். 

சரி.. கடை முதல் மாடியில் இருந்தது. உள்ளே நுழைந்த மாத்திரத்தில் மசாலாவின் மணம் நாசியில் ஏறி பசியை தூண்டியது.  வெஜ்ஜா நான் வெஜ்ஜா சார் என்றார்கள். யாரைப் பார்த்து என்ன கேக்குறே? என்று அவர்களை ஒரு பார்வை பார்த்தேன். சாருக்கு ஒரு நான் வெஜ் என்று இலை போட ஆரம்பித்தார்கள். நல்ல தலை வாழை இலையில் ஒரு கப்பில் இளநீர் பாயசத்துடன் ஆரம்பித்தார்கள். அடுத்தது மட்டன் சுக்கா. நன்கு வெந்த மட்டன் துண்டுகளோடு கெட்டிக் குழம்போடு இருந்தது சுக்கா. வாயில் வைத்தால் அத்தனை இலகுவாய் ஒரு மட்டன் உள்ளே சென்றது. காரம் மணம், சுவை எல்லாமே செம்ம. அடுத்ததாய் பெப்பர் சிக்கனை வைத்தார்கள். பெப்பரின் காரத்தோடு மட்டும் இல்லாமல் டிரையாவும் இருந்தது. நல்ல சதைப்பற்றுள்ள கோழி போல. வழக்கமாய் இம்மாதிரியான அன்லிமிடெட் கடைகளில் எலும்பு பீஸுகள் அதிகம் இருக்கும். அடுத்ததாய் நல்ல முந்திரி முந்திரியாய் உள்ள சின்ன எறால் தொக்கு. எறா தொக்குக்கே இருக்கும் லேசான தித்திப்போடு செம்மையாய் இருந்தது. பெப்பர் முட்டை. அடுத்ததாய் நல்ல ஆள்காட்டி விரல் சைஸ் நெத்திலி ப்ரை. அதுவும் சுடச் சுட என்றால் வாயில் வைத்ததும் கரைந்தது போனது. சீரக சம்பா சிக்கன் பிரியாணி வைத்தார்கள். பீஸு சின்னது மட்டும் போதும் என்று சொல்லிவிட்டேன். பிரியாணி சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நன்கு என்று சொல்லும் படி இருந்தது. 

அடுத்த ரவுண்டு சுட சாதம். மட்டன் குழம்பு. மட்டன் சுக்கா குழம்பும் மட்டன் பீஸும் கேட்டுப் போட்டுக் கொண்டு சாப்பிட்டேன். அட அட அட.. செம்ம. அடுத்தது சிக்கன் குழம்பு. அதுவும் நல்ல கெட்டியான குழம்பு. சமயங்களில் இம்மாதிரி ஓட்டல்களில் இரண்டு குழம்புக்கும் வித்யாசம் இருக்காது. இவர்களின் குழம்பில் எல்லாமே தனித்தனி சுவை. அடுத்தது மீன் குழம்பு. அளவான புளிப்பும் காரத்தோடு அதுவும் அடி தூள் தான்.  எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இளநீர் பாயசத்தையும் ஒரு ரெண்டு ரவுண்ட் அடித்துவிட்டு தான் எழ வேண்டியிருந்தது. 

எல்லாமே அன்லிமிடெட். சாப்பிட்ட திருப்திக்கு பிறகு 599 எல்லாம் ஒன்றும் அதிகம் இல்லை என்றே தோன்றும். நன்கு சாப்பிடும் ஆட்களும் பெரும் விருந்து. என்னை போல ருசிக்கு சாப்பிடுகிறவர்களுக்கு வேண்டுமானால் அதிகமாக தெரியலாம். மட்டன் சிக்கன் மீன் விற்கும் விலைக்கு இது சகாயம்தான். டிவைனான காரைக்குடி ஸ்டைல் மதிய லஞ்சுக்கு டோண்ட் மிஸ். 

இரவில் இதே அயிட்டங்களுடன் 450 ரூபாய்க்கு நான் வெஜ் போடுகிறார்கள். இரண்டு ஸ்டார்டர்கள். மட்டன், சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி. தோசையில் கல் தோசை, ஊத்தப்பம் ரெண்டு தந்தார்கள். அது ரெண்டுக்கும் ஏதும் ஆறு வித்யாசங்களை தேடிக் கண்டுபிடித்தாலும் சிறப்பாக ஏதும் தெரியவில்லை. ஐ ரெகமெண்ட் டிவைன் மதிய உணவு. டோண்ட் மிஸ்.

https://youtube.com/shorts/tlBxG0onxc0?feature=share

கேபிள் சங்கர்


Comments