Thottal Thodarum

Jan 3, 2014

சாப்பாட்டுக்கடை - ONLY VADA

ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடை பகுதி எழுதி. தொட்டால் தொடரும் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் என பிஸி. நேற்றிரவு டப்பிங் முடித்துவிட்டு நண்பர் ஒருவரை கே.கே.நகரில் பார்த்துவிட்டு கிளம்புகையில் என் இசையமைப்பாளர் பி.சி.சிவன் எம்.ஜி.ஆர் நகர் உடுப்பி டாடா ஓட்டலுக்கு அருகில் வடைக்கு மட்டுமே ஸ்பெஷலாய் ஒர் உணவகம் திறந்திருப்பதைப் பற்றி சொன்னது ஞாபகம் வர, உடன் வண்டியை விட்டேன்.


 கடையின் வெளிப்புற தோற்றம் டீசெண்டாய் நல்ல பச்சையில் போர்டுகளுடன் இருந்தது. நானைந்து பேர் இருந்த ஒர் டேபிள் சேரில் உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க, நான் உள்நுழைந்து மெல்ல மெனுவை நோட்டமிட்டேன். மெதுவடையில் ஆரம்பித்து, லைனாய் நிறைய வடைகள் லிஸ்டும், தோசைகள் லிஸ்டும் போடப்பட்டிருந்தது. சரி வடைக்கான ஸ்பெஷலாயிற்றே என்று வடையில் ஆர்மபித்தேன். வடை சூடாய் போடப்படாவிட்டாலும் கிரிஸ்பியாய் இருந்தது. நல்ல கையகல வடை. சாம்பார் சட்னியோடு ஒர் சின்ன பவுலில் போட்டுக் கொடுத்தார்கள். உளுந்து வடையைப் பொறுத்தவரை மேலே நல்ல கிர்ஸ்பியாகவும் இருந்தது. உள்ளே வழுக்கிக் கொண்டு போகும் பதத்தில் அரைத்த உளுந்து நல்ல புஸு புஸுவென வந்திருக்க வேண்டும். கொஞ்சம் ஆறிப் போனாலும், சாப்பிட்டால் தொண்டையடைக்காமல் இருக்க வேண்டும். அதிலும் சூடாய் கிடைக்கும் படச்த்தில் நல்ல காரச் சட்னியையோ, அல்லது தேங்காய் சட்னியையோடு சேர்த்து சாப்பிட்டால் அருமையோ அருமை. நல்ல சுவையான மெதுவடை, மசால்வடை, கீரைவடை அதுவும் சாயங்கால நேரங்களில் கிடைத்தால் தேவாம்ரிதமாய் இருக்கும்.  அந்த வகையில் ராத்திரி பத்தரை மணிக்கு கொடுத்த வடை சுகமே.
அடுத்ததாய் தோசை நல்ல காரமான பூண்டுப் பொடி தோசை ஆர்டர் செய்தேன். தோசையும் நல்ல சுவையில் இருந்தது. பூண்டுப் பொடி நல்ல காரமாய் இருக்குமென்றார். எனக்கென்னவோ அவ்வளவாய் தெரியவில்லை.  உடன் சாம்பார், சட்னி, காரச்சட்னி என கொடுத்தார்கள். ஒர் சிங்கிள் பீஸ் பரோட்டாவும் குருமாவும் ஆர்டர் செய்திருக்க, நல்ல சூடான பரோட்டா வந்தது. உடன் கொடுத்த குருமா ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. கடை ஓனரிடம் பேசிக் கொண்டிருந்த போது கடை ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும்,  வெறும் வடை வகைகளுக்காகவே ஆரம்பிக்கப் பட்ட கடை என்றாலும், மெல்ல தோசை , இட்லி என போட்டு, குட்டி ரெஸ்ட்டாரண்டாய் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார். ஆட்கள் பற்றாக்குறை, மாஸ்டர்களின் அடாவடி, என அவர் தொழிலின் இம்சைகளை மிகவும் பர்சனலாய் பேச ஆரம்பித்தார் அந்த ஸ்டாக் மார்கெட் பேக்ரவுண்டிலிருந்து வந்த பிரகாஷ். சின்ன வயதில் மதுரையில் நிறைய வடைகடைகளுக்கு வாடிக்கையாளராய் இருந்ததாகவும், அதனால் வடைகளின் மேல் தீராக்காதல் கொண்டு இம்மாதிரியான ஒர் கடை அமைக்க விருப்பப்பட்டதாகவும் சொன்னார். 
வெஜிட்டபிள் ஆம்லெட், ஜாக் ப்ரூட் தோசை, வடை மஞ்சூரியன், என வித்யாசமான அயிட்டங்களை மெனுலிட்டார். அதில் ஆம்லெட்டை ஆர்டர் செய்தேன். கடலைமாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து கிட்டத்தட்ட வித்யாசமான அடை போல இருந்தது. அதன் மேல் நல்ல பெப்பர் தூவி கொடுக்க, ஆம்லெட் சுவையாய் இல்லாமல் இருந்தாலும் கடலை மாவு அடையாய் சுவையாய்த்தான் இருந்தது.  வடை மஞ்சூரியனில் இருந்த வடை கொஞ்சம் பழசாய் இருந்ததால் மஞ்சூரியன் சிலாகிக்கவில்லை. எனிவே நிறைய கனவுகளுடன் வடைக்கடை நடத்திக் கொண்டிருக்கும் அவரிடம் எனக்கு தெரிந்த கடைகளைப் பற்றியும் இங்கே விற்கும் விலைக்கு சட்னி வகையறாக்களின் குவாலிட்டி மேம்பட வேண்டுமென்றும் சொன்னேன்.  மதிய ஸ்பெஷலாய் மைலாப்பூர் தயிர்சாதமும், மிளகு குழம்பு சாதமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், வந்து ஒரு முறை டேஸ்ட் பார்க்கவும் சொன்னார். பார்ப்போம். 

  • கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

avainaayagan said...

நிச்சயமாக போய் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.

தனிமரம் said...

சாப்பிட்த்தூண்டும் விளக்கப்பகிர்வு.