Thottal Thodarum

Feb 9, 2014

பண்ணையாரும் பத்மினியும்

  • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றி கேபிள் சங்கர்

குறும்படமாய் பார்த்த போது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்த படம். இவ்வளவு அருமையாய் மெல்லிய உணர்வுகளை குறும்படமாய் ஆக்கியிருக்கிறாரே.. இவர் நிச்சயம் நல்ல இயக்குனராய் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம். அதையே பெரிய படமாய் எடுக்க இருக்கிறார் எனும் போது கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. இதை ஒரு முறை விஜய் சேதுபதியிடம் கூட கூறினேன். இல்ல பாஸு.. ஸ்கிரிப்டை ரொம்ப மெச்சூர்டா பண்ணியிருக்காரு என்றார் நம்பிக்கையுடன்.  படம் பார்த்த போது நான் இயக்குனர் மீது வைத்த நம்பிக்கையும், விஜய் சேதுபதி வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை என்பது சந்தோஷமாய் இருந்தது.

குறும்படம் பார்க்காதவர்களுக்கு இந்த டைட்டிலே ஆர்வத்தை ஏற்படுத்தும். வயதான பண்ணையாருக்கும், அவரது மனைவிக்குமிடையே ஆன காதல். பண்ணையாரின் பத்மினி கார் மீதான அப்சஷன் தான் படமே. ரத்தமும் சதையுமாய் உடனிருக்கும் மனைவியிடம் கொண்ட காதலை நம்முள் எவ்வளவு இயல்பாக கடத்த முடிகிறதோ அதே இயல்புடன் காரின் மீதான காதலையும் கடத்தியிருப்பது அபாரம். அதற்கு முழு க்ரெடிட் இயக்குனரையே சாரும். நடிகர்களிடமிருந்து பண்பட்ட நடிப்பை, சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் கொண்டு அன்பை, காதலை, நெகிழ்ச்சியை, உன்னதமான மெல்லிய உணர்வுகளை கொண்டு வந்திருப்பது அவ்வள்வு சுலபமான ஒன்றல்ல. ஜெயபிரகாஷும், துளசியும் வாழ்ந்திருக்கிறார்கள். என்ன தான் கம்பேரிசனாய் “எனக்கு டபுள்ஸ் ஓட்ட தெரியாது” என்று வெகுளித்தனமாய் சொல்லி ஸ்கோர் செய்த தேனி முருகனை மிஞ்சவில்லை என்றாலும் க்ளாஸ். அதே போல பீடை கேரக்டரில் வரும் பாலமுருகன். ஆங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவைக்கு பொறுப்பேற்று அதை சரியாய் செய்திருக்கிறார்

விஜய்சேதுபதிக்கு படத்தைப் பொறுத்த வரை சப்போர்ட்டிங் கேரக்டர்தான். எங்கே பண்ணையார் கார் கற்றுக் கொண்டால் தன் வேலை பறிபோய்விடுமோ என்ற பதட்டத்தில் பத்து நாள் கழித்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் போதும், பண்ணையாருக்கு ஈடான காதலை காரின் மீது வைத்துக் கொண்டு அலையும் காட்சிகளிலும், பண்ணையாரின் மகள் வரும் போதெல்லாம் எங்கே கார் போய்விடுமோ என்று பதைக்கும் காட்சியிலும், துளசி பண்ணையார் எங்கே வருத்தப் படுவாரோ என்று விஜய்சேதுபதியின் மூலமாய் ஆறுதல் சொல்லும் காட்சியில் குரலடைத்து, கண்கலங்குவது தெரியாமல் பேசும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பினால் ஹீரோவாகிவிடுகிறார். 

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் உனக்கான பிறந்தேனே இனிமை. பின்னணியிசையில் அனுபவசாலியாய் தெரிகிறார். ஸ்ரீகர் ப்ரசாத்தின் எடிட்டிங் படத்தின் வேகத்தோடு இயல்பாய் பயணிக்கிறது. பத்து நிமிட குறும்படத்தை இரண்டரை மணி நேரப் படமாய், ஐஸ்வர்யா காதல், பண்ணையாருக்கும், அவரது மனைவி துளசிக்குமான நெகிழ்ச்சியான காட்சிகள்  என ஓவர் செண்டிமெண்ட் காட்சிகளாய்   நீட்டி முழக்காமல் கிரிஸ்பாய் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தைத் தாண்டி பொறுமை காத்தால் நல்ல ஃபீல் குட் படம் பார்த்த அனுபவம் நிச்சயம். வாழ்த்துகள் அருண்குமார்.
  • கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

கார்த்திகேயன் said...

குறும்படமாய் பார்த்த அதே அனுபவத்தை அளித்தது இந்த திரைப்படம்...

sornamithran said...

பண்ணையாரும் பத்மினியும் -இது விமர்சனம் அல்ல http://sornamithran.blogspot.in/2014/02/blog-post.html