Thottal Thodarum

Jul 16, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைரஸி, டிவிடி, C2H

திருட்டு டிவிடியினால் தான் இவ்வளவு பெரிய ப்ரச்சனை என்று சொல்வது ஒரளவுக்கு உண்மையென்றாலும், திருட்டு விசிடியிலோ, டிவிடியிலோ கூட வெளிவராத திரைப்படங்கள் இருக்கத்தான் செய்கிறது. நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.  அவர் ஒர் சினிமா ப்ரியர். கையில் கிடைக்கிற படங்கள் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவர். அவர் தான் மேல் வரிகளை சொன்னவர். சில வருடங்களுக்கு முன் மோசர்பியர் நிறுவனம் பழைய வீடியோ உரிமங்கள் வாங்கியவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து அவர்களது பழைய படங்களை எல்லாம் சேர்த்து முப்பது ரூபாய்க்கு மூன்று படம், ரெண்டு படம் என லீகல் ப்ரிண்டுகளை டிவிடிகளாய் வெளியிட்டார்கள். மொழி படத்தை படம் வெளியான சில மாதங்களில் 100 ரூபாய்க்கு கொண்டு வந்தார்கள். பெரியதாய் போகவில்லை என்றும் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனியை க்ளோஸ் செய்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கு தெரிந்து அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று அவர்கள் சரியான நெட்வொர்க் அமைக்கவில்லை என்பதும் ஒன்று.  பின்பு நிறுவனத்தில் ப்ரச்சனை ஏற்பட்டதால் டிவிடி தயாரிப்பையும் நிறுத்திவிட்டதாகவும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை ஏற்கனவே டிவியிலும், பைரஸியிலும் விற்ற படங்களை மீண்டும் வாங்கி வைத்து பொக்கிஷப்படுத்தும் பழக்கமே நம்மிடம் இல்லாததாலும், புதிய படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிடாததாலும், அவர்களது டிவிடி மார்கெட் வீழ்ந்தது என்பது என் கருத்து. 


இதையெல்லாம் மீறி டிவிடி விற்பனையில் இன்னொரு விஷயம் இருக்கிறது. வீடியோ கடை வைத்திருந்தவன் என்கிற வகையில் சொல்கிறேன். ஒரிஜினல் வீடியோ கேசட் என்று வரும் வரை பைரசி தான் விடியோ கடைகளின் ஒரிஜினல். அக்காலத்திலிருந்து பஜாரில் டிவிடி விற்கும் காலம் வரை ஓடுகிற, அல்லது கிரிட்டிகல் அக்ளெயிம் உள்ள படங்கள் மட்டுமே வியாபாரமாகிறது. ஓடாத படங்கள் பைரஸியில், ஒரிஜினல் ப்ரிண்ட் வந்தாலும் வாங்குவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.  அம்மாதிரியான படங்கள் டிவிடிக்களில் வெளியாவதேயில்லை.அதுதான் நிதர்சனமான உண்மை. 

சமீபத்தில் டிவிடி போட்டு தன் படத்தை வெளிக் கொணர்ந்த இயக்குனர், தயாரிப்பாளர் மதுபானக்கடை கமலக்கண்ணனை தொடர்பு கொண்டு பேசினேன். மதுபானக்கடையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாய் அமைந்த அந்த விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும்,  நல்ல படமானதால், தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு மேல் ஓடவில்லை. ஏ சர்டிபிகேட் படமானதால் அதை டிவிக்களுக்கு கூட விற்க முடியாத நிலை. எனவே அவரும் மார்டன் வீடியோ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மதுபானக்கடையை டிவிடியாய் விற்றார்கள். ஏற்கனவே படம் பற்றி ஓரளவு இலக்கிய, சீரியஸ் பட ரசிகர்கள் மத்தியில் ஒர் வரவேற்பு இருந்ததினாலும், டிவிடியின் விலை 75 ரூபாய் வைத்திருந்தாலும் சுமார் 30ஆயிரத்திற்கு மேற்பட்ட டிவிடிக்கள் விற்றதாய் சொன்னார். இது ஓரளவுக்கு நல்ல நம்பிக்கையை தரக்கூடிய தகவலாய்த்தான் தெரிந்தது. ஒரு வேளை சேரன் சாரின் நெட்வொர்க் அமைக்க முயற்சி செய்ததை முன்பே செய்திருந்தால் நிச்சயம் ஒரு 10ஆயிரம் டிவிடிக்களாவது அதிகமாய் விற்றுருக்க முடியும் என்கிறார் கமலக்கண்ணன். ஸோ.. வியாபாரம் செய்து கொடுக்க நல்ல நெட்வொர்க், படம் வெளியாகி ஒரளவுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த படத்திற்கு நிச்சயம் வரவேற்பு இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது. ஆரண்ய காண்டம் படம் இன்று  வரை ஒரிஜினல் ப்ரிண்ட் இல்லை. படம் வசூல் ரீதியாய் வெற்றி பெறாவிட்டாலும், இன்றைய நிலையில் அப்படத்திற்கு நல்ல படம் பார்க்கும் ரசிகர்கள் பணம் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள தயாராய்த்தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

அந்த விஷயத்தில் பார்க்கும் போது சேரனின் C2H வெற்றி பெறுவதற்கான அடிப்படை தகுதியான நெட்வொர்க் அமைத்திருப்பதாய் சொல்லியிருப்பது சந்தோஷமான விஷயமே.. சுமார் 7000 முகவர்களை தமிழகம் முழுவதும் அமைத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார். அதே போல டிவிடிக்களை படம் வெளியான ஒரே வாரத்தில் நல்ல தரமுள்ள ஒலி, ஒளி, அமைப்புள்ள டிவிடிக்களை பைரஸியில் பார்ப்பதை விட ஒரிஜினல் குவாலிட்டியில் பார்க்க, அதுவும் டோர் டெலிவரி செய்யக் கூட ஏற்பாடுகள் செய்வதாய் சொல்லியிருக்கிறார். எனவே அந்த வகையில் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் அமையும் என்ற நம்பிக்கை இன்னும் அதிகமாகத்தான் செய்கிறது. இதில் கடைக்காரர், சேரனின் நிறுவனம் இருவருக்குமான வருமான பகிர்மானம், சேரனிடமிருந்து படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் வருமான பகிர்மானம், எத்தனை டிவிடிக்கள் பதிப்பிக்கப்படுகின்றன? எத்தனை விற்றன?  என்பது போன்ற கணக்குகள் தெளிவாய் இருப்பின் தயாரிப்பாளர்களுக்கும் இவர்களுக்குமான வருமான பகிர்மானங்கள் திருப்தியாக இருப்பின் பாசிட்டிவாக போக வாய்ப்புகள் அதிகம்.  அது மட்டுமில்லாமல் டிவிடி உரிமம் வாங்குவதற்காக ஒர் வியாபாரம் மீண்டும் உருவாகும். சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சீனு ராமசாமி அவருடய தென்மேற்கு பருவகாற்று படத்தை தனியே டிவிடி உரிமம் விற்றதாய் சொல்லியிருந்தார். அதற்கு காரணம் என் சினிமா வியாபாரம் புத்தகம் என்று பாராட்டினார். 

இவர்கள் 50 ரூபாய்க்கு டிவிடி கொண்டு வந்தால் அதை காப்பி செய்து முப்பது ரூபாய்க்கு நிச்சயம் பைரஸிக்காரர்கள் விற்பனை செய்யத்தான் செய்வார்கள். இருபது ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று இது அநியாயம் இல்லயா? என்று கேட்காமல் நம் மக்களும் வாங்கிக் கொண்டுதான் போவார்கள். இங்கே தான் அரசின் ஆதரவு தேவை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, பைரஸியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டால் ஒரிஜினல் டிவிடி வியாபாரம் மூலமாய் ஓரளவுக்கு நல்ல படங்களும், மிக நல்ல படங்களும் மக்களிடையே டிவி மட்டுமேயில்லாமல் இன்னொரு முறையில் வீட்டில் சென்றடையும் எனபதில் சந்தேகமில்லை. சரி.. ஏற்கனவே ஒரு முறை நான் எழுதியது போல ஹிந்தியில் சிங்கிள் ஸ்கீர்னிங்கில் கூட படங்களை விலைக்கு வாங்கி ஒளிபரப்புகிறார்கள். அது போல சேரனின் C2H நிறுவனம் மூலமாய் அப்படங்களை ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். ஏசியாநெட்டில் போடப்பட்ட படம் மீண்டும் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பி பணம் செய்ய முடியுமா?  

தெலுங்கில் ஈடிவி சமீபத்தில் ஒர் சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளது. ஞாயிறு மதியம் ப்ரைம் நேரத்தில் ஓரளவுக்கு ஓடிய, விமர்சகர்கள் பாராட்டுப் பெற்ற படங்களை அதன் தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஒளிபரப்புகிறார்கள். படத்தின் மூலமாய் வரும் வருமானத்தை சேனல், தயாரிப்பாளர் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். மீண்டும் வேண்டுமானால் தயாரிப்பாளர் வேறு சேனலுக்கு கூட ஒளிபரப்பி பணம் பண்ணலாம். அல்லது ஈடிவியிலேயே ஒளிப்பரப்பலாம். உரிமம் தயாரிப்பாளருக்கு.  அது எப்படி ஹிந்தியில் சாத்தியமானது தெலுங்கில் சாத்தியமானது இங்கே சாத்திமாகாமல் இருக்கிறது?. ஈடிவி அங்கே இம்மாதிரியான வியாபார உத்தியை கையில் எடுத்ததற்கு காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.


Post a Comment

3 comments:

அகமது சுபைர் said...

ஆரண்ய காண்டம் அட்டகாசமான ப்ரிண்ட் விஜய் டிவி யூட்யூப் சேனலில் இருக்கிறது.. லீகலாக...

மகேஸ் said...

C2H வந்தால் மாதம் 200 ரூபாய் வாங்கிக் கொண்டு வீடுகளுக்கு டிவிடி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம்

Indian said...

//ஏ சர்டிபிகேட் படமானதால் அதை டிவிக்களுக்கு கூட விற்க முடியாத நிலை. எனவே அவரும் மார்டன் வீடியோ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மதுபானக்கடையை டிவிடியாய் விற்றார்கள். //

'தா' படமும் டிவிடில வந்தா நல்லாருக்கும்.