Thottal Thodarum

Jul 25, 2014

இசையெனும் ராஜ வெள்ளம் -

இளையராஜா, மொட்டை, ராக தேவன், இசைஞானி என ஆயிரம் பேர்களின் அவரை அழைப்பதற்கான காரணம் அவரின் இசை. ராஜாவின் ஒவ்வொரு இசையையும் கேட்டுக் களித்தவர்கள் அனைவருக்கும் என்றாவது ஒரு முறை தூரத்திலிருந்தாவது அவரை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இல்லாமல் இருக்காது. நண்பர் ஒருவருக்கு ராஜா என்றால் பைத்தியம். ஒவ்வொரு முறை என்னைப்பார்க்கும் போதெல்லாம், என்னைக்காவது ஒரு நாள் என்னை ராஜாவை பார்க்க வைக்கிறியா? என்று கேட்டுக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு படத் தயாரிப்பாளரை பார்க்க சென்றிருந்த போது நண்பர் போன் செய்ய, உடனே வாய்யா.. நான் ப்ரசாத்துலதான் இருக்கேன் என்றவுடன் அயனாவரத்திலிருந்து பத்து நிமிடத்தில் புயல் வேகத்தில் வந்தார். ராஜா ஏதோ ஒரு ரிக்கார்டிங்கிற்காக காரிலிருந்து வெண்ணுடையில் இறங்க, “வாங்க போய் பேசுவோம்” என்று நண்பரைக் கூப்பிட்டேன். அவரின் கண்கள் எல்லாம் மின்ன, “வேணாம் சார்.. ஏதோ வேலையாப் போவாரு அவரை ஏன் டிஸ்ட்ரப் பண்ணனும்” என்று பதில் மட்டுமே என்னிடம் வந்ததே தவிர பார்வை கேமரா பேனிங் போல அவர் போகும் திசையில் பயணித்துக் கொண்டேயிருந்தது. “அட வாய்யா. இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு போட்டோ எடுத்துக்க என்றேன். இல்லை நண்பா இது போது என் ஜென்மத்துக்கு என்று கரகரவென அழ ஆரம்பித்தார்.  


இப்படியான ரசிகர்கள் நிறைய பேர் இருக்க, அவரிடம் மூன்று முறை நேரில் சந்தித்து பேச வாய்ப்பிருந்தும் எதுவும் பேசாமல் வெறும் வணக்கம் மட்டுமே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். சில பேரை அவர்களின் ப்ரம்மிப்பிலிருந்து விலக மனமே வருவதில்லை. முதல் முறை என் அப்பாவுடன் அப்போது அவர் ஏவிஎம்மில் இருந்தார். பீக் பீரியட். அவர் வரும் முன்னமே அல்லக்கைகள் அவர் விரும்பினாரோ இல்லையோ, ராஜாவுக்கு கட்டியம் கூறுவதைப் போல வழி விடுங்க என்று சொல்லிக் கொண்டே ஓடுவார்கள். அதையும் மீறி நான் என் அப்பாவை விட்டு விலகி, அவரிடம் வணக்கம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவர் பதில் வணக்கம் சொன்னதைக் கூட கவனிக்கவில்லை. ராஜாவுக்கு வணக்கம் சொல்லணும் அம்புட்டுதேன். 

அடுத்த முறை  ஏவிஎம் சி என்று நினைக்கிறேன். என் அப்பாவின் படத்திற்கான ஒலி நாடாவை கொடுக்க போயிருந்தோம். ஏதோ ஒரு தெலுங்கு படத்தின் பின்னணியிசை கோர்ப்பு வேலை. சும்மா வேடிக்கை பார்க்க போக, அது ராஜாவின் படம் என் அப்பாவிடம் கேட்டு சவுண்ட் இன்ஜினியரிடம் பர்மிஷன் வாங்கி  ஒரு ஓரமா சத்தம் போடாம இருக்கணும் என்ற கட்டளையோடு நிறுத்தி வைக்கப்பட்டேன். உடலெல்லாம் ஜிவ்வென இருந்தது. ராஜா வந்தார். எல்லாரையும் ஒரு முறை சுற்றி பார்த்தார். நாற்பது ஐம்பது வயலின், கிட்டார், ட்ரம்ஸ் என நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். கண் மூடி ப்ரார்த்தனை போல ஏதோ செய்துவிட்டு, ரீலைப் போடுங்க என்றார். திரையில் காட்சி ஓடியது. வரலாற்று படம். குதிரையில் வீரர்கள் ஓடுகிறார்கள். பின்னால் வில்லன் கும்பல் குதிரையில் துறத்துகிறது. அவர்களின் பின்னால் ஹீரோ ஒர் குதிரையில் வில்லனை துறத்துகிறான். நடுவில் ஹீரோவை தடுக்க வரும் வில்லன் ஆட்களை  கத்தியால் சண்டைப் போட்டுக் கொண்டே வில்லனை விரட்ட, இன்னொரு ரதத்தில் வரும் ஹீரோயினை வில்லன் ஓவர்டேக் செய்து அலேக்காக தூக்கி தன் குதிரையில் வைத்துக் கொண்டு பறக்க, இதை பார்த்த ஹீரோ, கோபத்தில் இன்னும் நான்கைந்து பேரை சரக் சரகென வெட்டிவிட்டு,  வில்லனை துறத்தி, அவனுடன் சண்டைப் போட்டு, ஹீரோயினை சட்டென தன் குதிரையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, வில்லனின் குதிரையை தவறி விழச் செய்து அவனிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றி கொண்டு போகிறான். அக்காட்சியில் ஹீரோயினை காப்பாற்ற செய்யும் முயற்சியில் தன்னை காப்பாற்ற ஹீரோ எவ்வளவு முயற்சிக்கிறான் என்பதை ஹீரோயின் உணரும் ஒர் காட்சியும், அவனின் மேல் அன்பு அதிகமாக காரணமான காட்சியும் வேறு இருந்தது.  ஒரே மூச்சில் காட்சியை பார்த்தவர் ராஜா.. கண் மூடி யோசித்துவிட்டு, சட சடவென இசை குறிப்பு எழுதும் பேப்பரில் எழுத ஆரம்பித்தார். நோட்ஸுகள் எழுதப்பட்ட பேப்பர்களை சரிபார்த்தபடி, பக்கத்தில் இருந்த ஆர்கெஸ்ட்ரா ஆர்கனைசரிடம் கொடுத்து, அங்கிருந்த இசைக் கலைஞர்களிடம் கொடுக்க சொன்னார்.  அரை மணி நேரத்தில் இவையனைத்தும் நடந்தது. நான் பார்க்கும் முதல் பின்னணியிசை கோர்ப்பு இது. வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தேன். எத்தனை சீனு, எவ்வளவு ரியாக்‌ஷன், எவ்வளவு எமோஷன் இத்தனை எப்படி, எத்தனை நாள் பண்ணுவாங்களோன்னு யோசனை வேற ஓடிட்டிருந்த போதே வயலின் க்ரூப்பிலிருந்து சத்தம் வர திரும்பினேன்.

ராஜா கொடுத்த நோட்சை எல்லோரும் ஒரு முறை வாசிக்க, இரண்டாம் முறை வாசிக்க, மூன்றாம் முறை எல்லோரும் ஒழுங்காய் வாசித்ததாய் எனக்கு புரிந்த போது ராஜா யாரோ ஒருவரின் பெயரைக் கூப்பிட்டார், ஐம்பது பேர் இருந்த கும்பலில் அவர் எழுந்து நிற்க, ஏன் நீ மட்டும் உச்சஸ்தாயில வாசிக்கிறே என்று சொல்ல, அவரை மட்டும் தனியே வாசிக்க வைத்து சரி செய்து விட்டு, அடுத்த அடுத்த இசை கலைஞர்களிடம் நோட்சுகளை வாசிக்க சொல்லி, கேட்டு கரெக்‌ஷன் செய்துவிட்டு,  “ஓகே.. எல்லாரும் சேர்ந்து பார்த்துருவோம்” என்றார். சொன்ன விநாடியிலிருந்து 1..2..3..4.. என்று கண்டக்டர் சொல்ல, வயலினும், ட்ரம்ஸும், பேங்கோசும், செல்லோவும்  அதிர கேட்கும் போதே மனக்கண்களில் திரையில் ஒடிய காட்சிக்கு சிங் சேர்க்க, சின்னச் சின்ன கரெக்‌ஷனைகளை செய்து முடித்த பின் திரையில் காட்சி ஓட, டேக் என்றார்கள். வாவ்.. வாவ்.. என்னா சேஸிங், என்னா ஒர்வீரம், எத்தனை எமோஷனலான காதல் பார்வை, அதற்கான பின்னணியிசை சேர்ந்ததும் காதல் அவ்வளவு களேபரத்திலும் அருவியாய் பொழிய.. வாவ்வ்.. வாவ்.. கிட்டத்தட்ட ஒரு ரீல்.20 நிமிட பின்னணியிசை கோர்ப்பு வெறும் ஒன்னரை மணி நேரத்தில் எழுதி, ரிகர்சல் பார்த்து, பதிவாகிவிட்டது. இசையெனும் ராஜ வெள்ளம்.
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

சார் நீங்க ரொம்ப லக்கி சார்! ராஜாவின் ராஜாங்கத்தை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு! ராஜா என்றுமே ராஜதான் சார்

சீனு said...

கடைசி பேரா செம..

//பதில் மட்டுமே என்னிடம் வந்ததே//

பதில் மட்டும் அவரிடம் இருந்து வந்ததே என்று இருக்க வேண்டும் என்று நினைகிறேன்

நன்றி

ஒரு வாசகன் said...

தந்தை பற்றி இவ்வளவு எழுதியுள்ளீர்களே..... யார் உங்கள் தந்தை? தெரியாதவர்களுக்கு (என்னைப் போல) விபரம் தருவீர்களா?