Thottal Thodarum

Aug 13, 2017

கொத்து பரோட்டா -2.0-38

கொத்து பரோட்டா -2.0-38
Socio Sexuals எனும் டெர்ம் சமீபகாலமாய் இணையத்தில் வளைய வர ஆரம்பித்திருக்கிறது.  இது என்ன புது கலாட்டா? என்றால் புதுசு எல்லாம் ஒன்றுமில்லை. பழசுதான் புதுசாய் பெயர் வைத்திருக்கிறார்கள். காதல், டேட்டிங், மீட்டிங் எல்லாம் இன்றைக்கு இணையம் மூலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்க, நான் ஒரு “கே” “லெஸ்பியன்” பை- செக்‌ஷுவல்” “ஸ்ட்ரெயிட்” என்பது போல “இந்த சோபியா செக்‌ஷுவல். சரி சோபியா செக்‌ஷுவல் என்றால் என்ன? இனக்கவர்ச்சி, அழகு, வயது எல்லாவற்றையும் மீறி அறிவு சார்ந்த, புத்திசாலித்தனமான விஷயங்களை பேசி அதன் மூலமாய் ஒருவருக்கு ஒருவர் இன்ஸ்பயர் ஆகி, செக்‌ஷுவல் தேடலை தொடர்வது.  டாரன்  ஸ்டான்லர் தான்  1998ல் இந்த சோஷியோ செக்‌ஷுவல் என்ற வார்த்தையை  தன்னுடய செக்‌ஷுவாலிட்டியாய்  அறிவித்தாராம். .

காதல், செக்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, கதை, கட்டுரை, மதம், இசை, என இரண்டு பேரின் ஒருமித்த கருத்துக்களை அறிவுப் பூர்வமாய் முதல் டேட்டிங்கில் பேச ஆர்மபித்து, மெல்ல அந்த பேச்சு பேசுகிறவர்கள் மீது காதலாய் மாறி, செக்சுவல் உறவு வரை போவது தான் இந்த சோசியோ செக்‌ஷுவல். இவர்களுக்கு, இருபாலரின் உடலோ, அல்லது அழகோ, பணம், ஆகியவற்றைப் பார்த்து செக்ஸுவல் உணர்வு ஏற்படுவதில்லையாம். அறிவு சார்ந்த விஷயங்கள் தான் அவர்களுடய செக்ஸ்ஷுவல் உணர்வைக் கிளப்பி விடுகிறதாம்.

இன்றைக்கும் இணைய வெளியில் கவிதை, கட்டுரை, என ஒருவரை ஒருவர் பாராட்டி, சீராட்டி, தனியே இன்பாக்ஸில் தனியே பேச ஆரம்பித்து, பேஸ்புக்காலில் தொடர்ந்து, பின் நேரடியாய் சந்தித்து, தங்களுடய இண்டெலிக்சுவல் தேடலை உடலால் ஒன்று சேர்ந்து முடிப்பவர்கள் பல பேருக்கு தாங்கள் ஒரு சோஷியோ செக்ஸ்ஷுவல் என்று தெரியாது. நம்மூர் நாவல்கள், சிறுகதைகளில் , கதாநாயகி, சாலிஞ்சரோ, ல.சா.ராவோ, புளியமரத்தின் கதை பற்றி பேசும் இளைஞனிடம் மெல்ல, மெல்ல ஈர்ப்பு ஏற்படுவதாய் எழுதப்படுவதும்,  அதே வைஸ் வர்ஸா பேசும் இளைஞி ஆங்கில கவிதைகளை கோட் பண்ணி பேசுவதாய் எழுதப்படுவதும், ஹா என்று அவளின் அறிவை, ஆச்சர்யமாய் பார்த்து, இருவரும் புத்தகம் கொடுத்து, காதல் செய்வதாய் எழுதப்படுவதும், சோஷியோ செக்ஸுவாலிட்டியில் வரும் என்று அன்றைக்கு யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அப்படிப் பார்த்தால் பாலசந்தரின் பெரும்பாலான நாயக, நாயகிகள் சோஷியோ செக்ஸ்ஷுவாலிட்டி வகைதான். என்ன இப்பத்தான் பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Wonder Woman
காமிக்ஸை படமாக்கி காசு பண்ணுவது ஹாலிவுட்காரர்களுக்கு பழகிப் போன ஒன்று. சிஜி என்ற டெக்னாலஜி வளர்ந்த பிறகு இவர்களது விஷுவல் விஸ்வரூபம் கட்டுக்கடங்காமல் போய், ப்ளாஸ்டிக்காய் உலகை காப்பாற்றிக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோக்களை, சிஜியோடு, கொஞ்சம் எமோஷனையும் கலந்தடித்து கிட்டத்தட்ட அந்தக்கால தமிழ் பட ரேஞ்சில், சாதாரண மனிதனின் உணர்வுகள், தடுமாற்றங்கள், செண்டிமெண்ட்  எல்லாவற்றையும் கலந்த சூப்பர் ஹீரோவை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஹாலிவுட்காரர்கள். சூப்பர் ஹீரோவாக ஆண்களை பார்த்த கண்களுக்கு  சூப்பர் வுமன்களை அவ்வளவாக பிடிப்பதில்லை.  அதையெல்லாம் மீறி பேட்மேன் v/s சூப்பர் மேன் படத்தில் வொண்டர் உமனை சேர்த்திருந்தார்கள். அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து டி.சி காமிக்ஸ் முழு படமாகவே தயாரித்து வெளியிட்டுவிட்டார்கள்.
டயானா அமேசானில் உள்ள ஒர் தீவில். கடவுளால் உருவாக்கப்பட்ட வீரப் பெண்களால் வளர்க்கப்பட்டவள். அவளது தீவில் ஸ்டீவ் எனும் அமெரிக்க விமானி அடிபட்டு விழ, அவனை காப்பாற்றுகிறாள். அவனைத் தேடி ஜெர்மானிய வீரர்கள் வருகிறார்கள். போரில் ஜெர்மனிய சயிண்டிஸ்ட்  டாக்டர் மரோ புதிய வகை மஸ்டர்ட் கேஸ் எனும் வாயு ஒன்றை கண்டுபிடித்து போரில் பயன்படுத்தி, உலகை, போரை வெல்ல நினைக்க,  எப்படி ஒண்டர் வுமனும், ஸ்டீவும் சேர்ந்து தன் பவரையெல்லாம் வைத்து காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. காமிக்ஸ் வெறியர்கள் நான் இப்படி சர்வ சாதரணமாய் அவர்களது சூப்பர் ஹீரோ கேரக்டரின் பின்புலம், பின் கதை என எதையும் சொல்லாமல் சொல்லியிருப்பதை பார்த்து காண்டாவதை என்னால் உணர முடிந்தாலும் என்னைப் பொறுத்தவரை உலகை அதிலும் அமெரிக்காவையோ, பிரிட்டனையோ, ஜெர்மானியர்களிடமிருந்தோ, அல்லது ரஷ்யர்களிடமிருந்தோ காப்பது ஒன்றுதான் இந்த சூப்பர் ஹீரோக்களின் பிரதான வேலையாய் இருப்பதால் வேறேதும் சொல்ல தோன்றவில்லை.

வொண்டர் உமன்  கால் கடோடுக்கு 32 வயதாம்.. ம்ஹும்.. என்னாமா இருக்கு பொண்ணு. அந்த ஷார்ப் மூக்கும், ஓங்கு தாங்கான சிக் உடலும், தன் தீவிலிருந்து நகருக்கு வந்து மக்களின் நடவடிக்கைகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல் வெகுளியாய் கேள்வி கேட்கும் போது அவ்வளவு க்யூட். ஆனால் அதே நேரத்தில் வொண்டர் உமன் காஸ்ட்யூமில் உயரமான கால்களை, தன் இறுக்கமான ஸ்லீக் தொடைகளை காட்டிக் கொண்டு, சாதாரண துப்பாக்கியிலிருந்து, பீரங்கி குண்டு வரை சர்வ சாதாரணமாய் ஒரு சில மொக்கை சிஜி ஷாட்களோடு, தடுத்தாளும் பாங்கு இருக்கிறதே.. ஆகா.. அகா..அககா..  சால பாக உந்தி. நான் நம்பிட்டேன் அம்மணி வொண்டர் உமன் தான்.  என்ன ஆளாளுக்கு கலர் கலராய் லைட் அனுப்பி வெடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். டிசி காமிக்ஸ் காரர்களிடம் ஒர் வேண்டுகோள். கொஞ்சமாச்சும் வெளிச்சத்தில் படமெடுக்கவும் எல்லா ஷாட்களும் விடியற்காலை மூணு மணிக்கு எடுத்தார்போலவே இருப்பதாலும், 3டி கண்ணாடி வேறு கருப்பாய் இருப்பதாலும் கருகும்மென இருக்கிறது. என் தலைவியை கண் குளிர காண முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் நெடுக மிக இயல்பான வசனங்கள். டயானா ஆண்களாய் பேசிக் கொண்டிருக்கும் மீட்டிங்கில் நுழைந்துவிட, ”இங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்று மற்றவர்கள் சொல்ல, அவளை வெளியே கூட்டி வருகிறான் ஸ்டீவ். “ஏன் பெண்களை பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்? என்று டயானா கேட்க, அப்போது அங்கு வரும் பேட்ரிக்கிடம் மன்னிப்பு கேட்கிறான் ஸ்டீவ். அதற்கு அவர் சொல்லும் பதில். “பரவாயில்லை. ஒரு பெண் உள்ளே வந்ததினால் கிடைத்த அமைதியை வைத்து என் பேச்சை சுலபமாய் கேட்க வைக்க முடிந்தது” என்பார். இன்னொரு காட்சியில் ஹீரோ குளித்துக் கொண்டிருக்க, டயானா எதிர்பாராமல் உள்ளே போய் விட, பப்பி ஷேமாய் இருக்கும் ஹீரோவை வைத்த கண் வாங்காமல் மேலிருந்து கீழ் பார்த்து நிலைத்த பார்வையோடு, டயானா ஸ்டீவிடம் கேட்கும் கேள்வி “அது என்ன?” என்பதுதான். என்ன என்பதை வெள்ளித்திரையில் 3டியில் கண்டு கொள்ளுங்கள். இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ் ஒரு பெண் என்பதால் குட்டிக் குட்டி ரொமான்ஸ், எக்ஸ்பிரசன்ஸில், மிக நுணுக்கமான நகைச்சுவை வசனங்களில்  பளிச்சென்று தெரிகிறார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது நடிகர் சத்யேந்திரனை பார்த்தேன். என்ன படமென்றார். சொன்னேன். ஹீரோயினை பற்றி நாலு வரி புளங்காகிதமாய் சொன்னேன். என்ன இருந்தாலும் ராக்வெல் வெல்ச் போல வரலை என்றார். ம்ஹும்.. ஒவ்வொருத்தருக்குள்ளேயும்.. ஒவ்வொரு..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பர் மணிஜியின் அழைப்பின் பேரில் திடீர் மாயவரப் பயணம். டோல்களின் கொள்ளை காரணத்தினாலும், ரொம்ப நாள் ஆயிருச்சு ஈ.சி.ஆர்ல போய் என்பதாலும் ஈ.சி.ஆர் பயணம். முன்பு போல அவ்வளவு சுகமாய் இல்லை. பல இடங்களில் டபுள் ரோடும், திடீர் திடீரென சிங்கிள் ரோடுமாய் பாண்டிவரை போய்க் கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பாண்டிக்கு வாங்கு ஒரே ஒரு டோல்தான். ஹைவே எங்கும் இருந்த டாஸ்மாக்குகளும், பாண்டி ஓயின்ஸ்களும் கண்களுக்கு தட்டுப்படவேயில்லை. பாண்டி ஊர் எல்லையில் இருக்கும் கென்னடி மட்டும் ட்ரைவின் ரெஸ்டாரண்டாய் 500 மீட்டர் தள்ளி வழி காட்டியது. முன்பை விட பிரம்மாண்டமாய் மிக பிரம்மாண்டமாய் வயல்வெளிகளை வழித்தெடுத்து புதிய கடை அமைத்திருந்தார்கள். எதிரே இன்னொரு பெரிய ஒயின்ஸ் காரர் ரெடியாகிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல புத்தூர் ஜெயராமன் கடையில் வேர்வையும், அன்பும் ஒழுக, கெட்டித்தயிரோடு அட்டகாச சாப்பாடு. மாயவரத்தில் வேலை முடித்துவிட்டு சனீஸ்வரரை சந்திக்க ப்ளான் செய்து திருநள்ளாரில் அறை எடுத்தோம். டபுள் பெட் 1200 என்றார். ஏறெடுத்து பார்த்த போது இன்னைக்கு வியாழன் அதனால இந்த ரேட்டு, நாளைக்கு 2500 என்றார். ராத்திரி டிபன் எங்க நல்லாருக்கும் என்று ஒரு மளிகைக்கடையில் கேட்டோம். இங்க எங்கேயும் சாப்பாடு வெளங்காது. அநியாயமா ஏமாத்திருவாங்க. ஒரு ரெண்டுகிலோமீட்டர் போனீங்கன்னா காரைக்கால் டவுன் வந்திரும். அங்கன போய் சாப்பிட்டிருங்க.. என்றார். சோம்பேறித்தனப்பட்டு பக்கத்திலிருந்த ஒர் சின்ன கடையில் சாப்பிட்டோம் நல்ல காரச்சட்னி, தேங்காய் சட்னியோடு, தோசை, இட்லி என வெறும் 80 ரூபாய் சிறப்பான உணவைக் கொடுத்தார்கள். மளிகைக்கடைக்காரருக்கு என்ன கோபமோ இந்த ஊர் கடைக்காரர்கள் மேல்? என்று தெரியவில்லை.
நடையே காலியாயிருக்க, உற்சவரை சந்தித்துவிட்டு, சனீஸ்வரரை கண்டு கொண்டு வ்ந்தோம். சிறப்பான தரிசனம். சில வாரங்களுக்கு முன் தான் தீவிபத்து ஏற்பட்டிருந்த ஆலயம் அதன் சுவடு தெரியாமல் இருந்தது. வழக்கம் போல அன்ன தானம் அளிக்க போர்டு வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். விளக்கு ஏற்ற கோயிலினுள் காண்ட்ரேக்ட் ஆளிருக்க, வெளியே விளக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். இருந்ந குட்டியூண்டு கூட்டத்தைக் கூட ஓவர் டேக் செய்து ஒருகிராதி தாண்டி சனீஸ்வரனை அருகே நின்று பார்க்க, வாட்ச்மேனுக்கு இரு நூறு ரூபாய் கட்டிங் கொடுத்த ஆந்திராவாடு குடும்பம். காசு வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் கொடுக்கும் யானை. “போட்டோவெல்லா  எடுக்காதீங்க சார்”. உள்ளே இன்னொரு யானைக்கு காலை ப்ரேக் பாஸ்ட் சாதத்தோடு எத்தையோ கலந்து உருண்டையாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். யானைக்கு சுகர் ஏன் வருகிறது என்று நியாண்டர் பேலியோவில் கேட்ட கேள்வி நியாபகம் வந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அதே யானையோடு ஊர்வலமாய் சாமி வர, நல்ல வேளை சாப்பிட்ட பிறகு யானைக்கு வாங்கி இருப்பதால் சுகர் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.  
போன முறை சாப்பாடு வாங்கி கொடுத்தேன். பொட்டலம் வாங்கினவன் எந்த கடையில வாங்கினீங்கனு கேட்டேன். கடைய சொன்னேன் அது பழசாயிருக்கும் வேற கடையில வாங்கினதா இருந்தா கொடுங்கன்னான். வாங்கிக் கொடுத்தபின் தன் பையிலிருந்த நிறைய பொட்டலங்களோடு பரபரவென கிளம்பிப் போய் அதே கடையில் நின்னத பார்த்ததிலேர்ந்து சாப்பாடு வாங்கி கொடுக்கிறத நிறுத்திட்டேன் என்றார் மணிஜி. லாஜிக்காய் பார்த்தால் பசிக்கு தான் சாப்பிட முடியும். சனிப்ரீதிக்காக எப்படி சாப்பிட முடியும்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

No comments: