Thottal Thodarum

Oct 10, 2017

மின்னம்பலம் கட்டுரை -விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா?

விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா?
விவேகம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து இணையமெங்கும் ப்ளூ சட்டைக்காரர் எனும் விமர்சகரை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சியிலிருந்து வெளிவந்த ரசிகர்கள் உட்பட விமர்சனம் ரெண்டும் கெட்டானாய் இருக்க, இணைய விமர்சகர்கள் ஆளாளுக்கு வலிக்காமலும், வலித்தா மாதிரி காட்டிக் கொள்ளாமலும், படம்னா இதுதாண்டா படம் என்று அஹா ஓஹோ என பாராட்டியும் விமர்சனங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ப்ளூ சட்டைக்காரர் மட்டும் வழக்கம் போல கழுவி ஊத்தி விட்டார்.  ஒவ்வொரு முறை பெரிய பட்ஜெட், நடிகர் படம் வரும் போதும் இதே பிரச்சனை தான். ஆரம்பத்திலிருந்து இன்று வரை இணையத்தில் வரும் விமர்சனங்களால் எங்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றே சொல்லி வந்தாலும், நிஜத்தில் இதற்கான பாதிப்பு இருக்கிறது என்று  திரையுலகத்தினர் நம்புகின்றார்கள் என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் இத்தனை கூப்பாடு தேவையேயில்லை.

ஒரு காலத்தில் பத்திரிக்கை விமர்சனங்களைத் தவிர வேறு விமர்சன ஊடகமேயில்லாத நிலையில் பாஸ் மார்க் வாங்கினாலே ஒரளவுக்கு தப்பிச்சோம் என்று ஒரு பத்திரிக்கை விமர்சனத்துக்காக காத்திருந்த நிலையெல்லாம் போய்., சினிமா செய்திகளுக்காகவும், நட்பிற்காகவும், பத்திரிக்கை கொண்ட கொளைக்காகவும், அங்கே பணியாற்றியவர் என்பதற்காகவும், நூற்றுக்கு முப்பது மார்க்தான் கொடுத்தாலும் நாலு பக்க விமர்சனம் போடும் நிலையாகிவிட்ட படியால் அச்சு விமர்சனம் மீதான நம்பிக்கை இழந்த நிலையில் தான் வலைப்பூக்களின் வருகை, காமன் மேன்களிடமிருந்து விமர்சனங்கள் வர ஆரம்பித்து, கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். இன்றைக்கு வீடியோ விமர்சனங்களுக்கு எவ்வளவு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறதோ அதே அளவிற்கு இல்லாவிட்டாலும் ஆதரவு இருந்ததென்னவோ நிஜம் தான்.

எந்தவித வருமானமும் இல்லாமல், தன் பேஷனுக்காக மட்டுமே படம் பார்த்து விமர்சனம் எழுதியதால் அதில் நேர்மை இருந்தது. அதை பயன்படுத்த நினைத்து ஒரு சில இயக்குனர்கள் வலைப்பூ எழுகிறவர்களுக்காக தனி காட்சி போட்டுக் காட்டிய நிகழ்வெல்லாம் நடந்து இருக்கிறது. எப்போது அப்படியான காட்சி தனியே போட ஆரம்பித்தார்களோ, அப்போதே விமர்சங்கள் நம்மளையும் கூட்டி போய் தனியா படம் காட்டினாங்களே? என்ற ஆதங்கத்துடன் ஒரு பக்கமும், நமக்காக படம் போட்டுக் காட்டினாங்களே அப்படின்னா நாம இன்னும் கண்ணும் கருத்துமா எழுதணும்னு இன்னும் நுணுக்கமா பார்த்து கழுவி ஊத்தறதுதான் அதிகமாச்சு.  வீடியோ பிரபலமாக, அதற்கு ஷிப்ட் ஆனவர்கள் கொஞ்சம் தான் என்றாலும் விஷுவலில் கிடைக்கும் வீச்சுக்கு இணை வேறு ஏதுமில்லை என்பதால் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் மொபைல் கேமரா மொதற்கொண்டு கிடைக்கிற கேமராவில் எல்லாம் படம்பிடித்து விமர்சனம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இத்தனை பேர் உள்ள கூட்டத்தில் நான்கைந்து பேர் மட்டுமே லட்சங்களில் ஹிட்ஸும், வருமானமும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஒரு பிரபல நடிகரின் படத்தை திட்டினால் அவரது எதிர் பார்ட்டி நடிகரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று வரிந்து கட்டிக் கொண்டு, திட்டியும், பாராட்டியும் மீம்ஸ் போட்டும் மக்கள் ஒரு வாரத்துக்கு கொண்டாட்டமாய் இருக்க, தயாரிப்பாளர்கள், மூன்று நாளைக்கு பிறகு விமர்சனம் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனியார் அவர்கள் செலவில் தியேட்டருக்குப் போய், படம் பார்த்து விமர்சனம் செய்வதை தடுக்க முடியாது என்று தெரிந்தே. படம் நன்றாக இல்லை என்று சொல்லாதே என்றும், பார்த்து சொல்லுங்க என்று போன் போட்டு ரசிகர்கள் பேசுவது ஒருபக்கமென்றால், சம்பந்தப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளரே பேசும் நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். இது மட்டுமில்லாமல் பல பிரபல இயக்குனர்கள் அவர்களை அழைத்து, பட சூட்டிங், நடிப்பதற்கு ஒரிரு காட்சிகளில் வாய்ப்பு, இல்லாவிட்டால் டப்பிங்கிற்கு முன்னால், டப்பிங்கிற்கு பின்னால், என நான்கைந்து வர்ஷன்களை காட்டி இன்ஸ்டண்ட் விமர்சனம கேட்டு கரக்‌ஷன் எல்லாம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் அடுத்த வாரம் நம்ம படம் வருது விளம்பரம் போட்டிருங்கன்னு விளம்பரம் வேற கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களின் விமர்சனத்தால் கொதித்த ரசிகர்கள் மானாவாரியாக போன் அடித்து பேசி, அவரை வாயைக் கிண்டி, வார்த்தையை பிடுங்கி, தங்கள் தலைவரை திட்டிட்டான் என்று ஆடியோவை வீடியோவாக போட, ஆளாளுக்கு ப்ளூ சட்டைக்காரை திட்டி தனி வீடியோ எடுத்து போட இத்தனை நாள் பார்க்காதவன் கூட யார்ராவன் ப்ளூ சட்டைக்காரன் என்று தேடி சாதாரணகம்வே நான்கைந்து லட்சம் ஹிட்ஸ் பார்க்கிறவரை, 20 லட்சம் ஹிட்ஸுக்கு வழி வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.


விமர்சனம் என்பதற்கான எதிக்ஸ் மாறிப் போய் பல காலமாகிவிட்ட நிலையில் இன்னமும் நமக்கு சாதகமான விமர்சனம் மட்டுமே சொல்லப் பட வேண்டுமென்று நினைப்பது சரியான விஷயம் இல்லை என்றே தோன்றுகிறது. சன் டிவி திரை விமர்சனம் என்று கிழித்து தொங்க விட்ட காலத்தில் இதே போன்ற பல எதிர்ப்புகள் கிளம்பியதெல்லாம் உண்டுதான். தற்போது அவர்களும் நடிகர் நடிகை பேட்டிக்காகவும், விளம்பரத்துக்காகவும்,  பத்திரிக்கை லெவலுக்கு வந்துவிட, இணைய வீடியோக்கள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கே விமர்சனம் செய்கிறவர்கள் அனைவருமே நேர்மையாய் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நேர்மையாய் இல்லாவிட்டால் எப்படி பத்திரிக்கை, டிவிக்காரர்கள் தங்களது ஆடியன்ஸை இழந்தார்களோ அதைப் போல இழந்துவிடுவார்கள் என்கிற நிலையின்மை அதிகமாக இருக்க, படம் ஓடுவது ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இவர்களது விமர்சனங்களின் வாழ்வும் ஆதே ஒரு வாரம் என்கிற போது  “சர்வைவா” ஆகத்தான் போய்க் கொண்டிருக்கிறது விமர்சனம் செய்கிறவர்களின் நிலையும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறாவர்கள் நிலையும்..

Post a Comment

2 comments:

குரங்குபெடல் said...

அருமையான அலசல் . . .
ஆன்லைன் பைரஸி , ஆன்லைன் விமர்சனம் ஆகியவற்றை எதிர்கொள்ள


படம் நனறாக எடுப்பதை தவிர வேற வழியே இல்ல

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.