Thottal Thodarum

Oct 25, 2017

மின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்

பேஸ்புக் ஹிட்
சென்ற வாரம் மலையாளப்படத்தைப் பற்றி எழுதியவுடன் அது என்ன படம் என்று பல பேர் கேட்டிருந்தார்கள். அது நண்டுகளூடே நாட்டில் ஒர் இடைவேளா. நிவின் பாலி நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்தும் அளித்த படம். இந்தக்கதையை எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாய், அழுகாச்சியாய் இல்லாமல் எடுத்தார்கள் என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. வழக்கமாய் இம்மாதிரியான கதைகளில் பார்ப்பவர்களின் தொண்டையை அடைக்கும் சோகமே வெற்றிக்கான அளவுகோல். ஆனால் இவர்கள் இப்படத்தில் கொண்டாடுகிறார்கள்.கண்களில் திரையிடும் கண்ணீருக்கிடையே சிரிக்கிறார்கள்.

நிவின் பாலி லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது அம்மா சாந்திகிருஷ்ணா.அப்பா லால். வீட்டில் தங்கை, அவளுடய கணவன், வயதான தாத்தா, என ஜாயிண்ட் பேமிலி. ஒர் சுபயோக சுபதினத்தில் சாந்திகிருஷ்ணா தனக்கு மார்பக புற்று நோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அவரே தைரியமாய் டெஸ்டுக்கும் போய் நிற்கிறார். ஆம் ஸ்டேஜ் 2 என்று முடிவான போதும் தளரவில்லை. இதை தெரிவிக்காமல் மகனை உடனடியாய் இந்தியாவுக்கு வரும் படி அழைக்கிறார். இம்மாதிரியான திடீர் அழைப்புகள் எல்லாம் கல்யாணத்துக்காகத்தான் என்று நண்பன் ப்ளைட்டில் சொல்ல, அந்த கனவுடன் தரையிரங்குகிறான் மகன். வந்து பார்த்தால் இந்த செய்தி. வீடே இடிந்து போய் மரண அமைதியாய் இருக்க, இந்த மாதிரி நீங்கள் இருப்பதை பார்ப்பதற்கு நான் செத்தே போய்விடலாம் என்று கூற, எல்லோரும் தங்கள் சோகத்தை மறைத்து, கொண்டு உடன் பட ஆரம்பிக்கிறார்கள். சாந்திகிருஷ்ணாவுக்கு என்ன ஆனது என்பதுதான் கதை.

படம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்கு வழக்கமான மலையாளப்படம் போல பேசியே மாய்ந்தார்கள். சாந்திகிருஷ்ணாவின் கேன்சர் மேட்டருக்கு அப்புறம் கதை சூடு பிடிக்க ஆரம்பித்தது. கீமோ ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முதல் முறை கிளம்பும் போது அதற்காக பயந்து போய் மனைவியுடன் மகனை அனுப்பி வைக்கும் லாலின் எமோஷன். நான் பயப்படவெல்லாம் இல்லை என்று ரியாக்ட் செய்யுமிடம் நவரசக்கூத்து. ஹாஸ்பிட்டலில் அம்மாவின் கீமோ அறைக்குள் முகம் வாடிக் பரிதாபமாய் அமர்ந்திருக்கும் நிவினிடம், அம்மாவும், நர்ஸும் மிகச் சாதாரணமாய் கீமோ பற்றி சொல்லி, நீயல்லவா தைரியமாய் ஆதரவாய் இருக்க வேண்டுமென்று சொல்லுமிடம். தன் அப்பாவின் கீமோவுக்காக வரும் நாயகி. அவளுடனான மிக இயல்பான நட்பு. வீட்டில் தாத்தாவை பார்த்துக் கொள்ள முடியாமல் ஆண் நர்ஸை பிக்ஸ் செய்யும் இண்டர்வியூவின் போது. ஆண் நர்ஸ் போடும் கண்டீஷன்கள். என்னை தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு டின்னருக்கு போகக்கூடாது. என்னையும் கூட்டிட்டு போகணும். தொடர் கீமோவினால் முடி இழந்து, கீமோவினால் ஏற்படும் உடல், மற்றும் மன உபாதைகளால் ஏற்படும் மூட் ஸ்விங் காட்சிகள்  என மிக அழகாய் ஒர் நுணுக்கமான ஃபீல் குட் திரைப்பட அனுபவத்தை கொடுத்துவிட்டார்கள்.

இம்மாதிரியான படங்கள் மிகவும் பாஸிட்டிவான விஷயம். பெரிய நடிகர்கள் நடிக்கும் போது நல்ல படங்களுக்கான வரவேற்பு அதிகமாகும். இன்னும் நல்ல படங்கள் வர வாய்பளிக்கும். இல்லாவிட்டால் மாஸ் காட்டுகிறேன் என்று ரெண்டாவது படத்துலேயே அந்த ஸ்டார். இந்த ஸ்டார் என்று பெயர் போட்டுக் கொள்ளவே பழக வேண்டியிருக்கும்.
ஒரு காலத்தில் பிட்டு படங்கள் என்றால் மலையாளப்படம் என்றிருந்த நிலையை, சிபிஐ டைரிக் குறிப்பு, வந்தனம், ஐயர் தி க்ரேட், நியூ டெல்லி, என மடை மாற்றிவிட, நடுவில் மீண்டும் மொனாட்டனியாய் படங்கள் வந்து கொண்டிருக்க, புதிய அலை இளைஞர்கள் இயக்குனர்களாய் வர, புதுசு புதுசாய்கதை சொல்ல ஆரம்பித்த  வேகம் இன்று வரை தொடர்கிறது. நல்ல படங்களின் வெற்றி இன்னும் பல நல்ல படங்களை வெளிக் கொண்டு வரும் ஊக்கியாக, ரசிகர்கள் நமக்கு கொண்டாட்டமாய் அமைகிறது.

மலையாளப்படங்கள் எல்லாமே அற்புதத்துக்கு மிக அருகில் என்பது போல என்று நினைக்காதீர்கள். எல்லா மொழிப் படங்களிலும் மொக்கைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தமிழில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஒன்று நிஜமாகவே படம் நன்றாக இருப்பது. இல்லாவிட்டால் போலியாய் காவியம், பெண்ணியம், மாஸ்டர் ஸ்ட்ரோக், என பேஸ்புக், டிவிட்டரில் மட்டும் கொண்டாடப்படுவது.

ஒரு காலத்தில் இந்த ஷோஷியல் மீடியாக்கள் மூலம் படங்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்து நிஜமாகவே ஒரிரு நல்ல படங்கள் இதன் மூலம் வரவேற்க்கப்பட, எப்படி மற்ற மீடியாவை கரப்ட் செய்தார்களோ அப்படி இங்கேயும் ஆள் வைத்து, காசு கொடுத்து கரப்ட் செய்ய தயாரிப்பாளர்களே ஆர்மபித்துவிட்டார்கள். படம் வெளிவருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே ஷோ போட்டு சோஷியல் மீடியா ஆட்களை கொண்டு ஆஹா ஓஹோ என பாராட்ட வைப்பது. அதன் மூலம் முதல் நாள் மக்களை கூட்டுவது. ஒரு விதத்தில் முதல் நாள் கூட்டம் கூட வைக்கும் முயற்சி சரி என்றாலும், ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது என்பது போல, ஓவராய் கூவி, படம் பார்க்க வந்தவன் என்னத்துக்கு இப்படி கூவினாங்க? என்று வெளியே போய் நாலு நல்ல வார்த்தை கூட சொல்லாம போய்விடுவான். அப்படி சமீபத்தில் ஸ்பெஷல் ப்ரிவ்யூ போடப்பட்டும் ஆன்லைனில் கொண்டாடப்பட்ட படங்கள் எல்லாமே பேஸ்புக், ட்விட்டரில் மட்டுமே வெற்றி பெற்ற படங்கள். இவற்றின் பல படங்களின் வசூல் லட்சங்களில் மட்டுமே.

ஆள் வைத்து கொண்டாடும் கூட்டம் ஒரு புறமென்றால் இன்னொரு பக்கம் காவிய இயக்குனர்கள், ஹீரோக்களின் ரசிக குஞ்சுமணிகள். இவர்கள் ஆர்ப்பாட்டம் தான் தாங்க முடியாது. இவர்கள் நுணுக்கமாய் தேடிப்பிடித்து கொண்டாடும் காட்சிகளை வேறு இயக்குனரோ, நடிகரோ நடித்திருந்தால் கழுவி கழுவி ஊற்றுவார்கள். ப்ராண்ட் நேமோடு அட்டாச் ஆகி, சம்பந்தப்பட்டவர்களுக்கே புரியாத குறியிடுகளை கண்டு பிடித்து திக்கு முக்காட வைப்பதில் இவர்கள் விற்பன்னர்கள். என்ன முதல் வாரம் என்ன தான் முட்டுக் கொண்டுத்தாலும் மீண்டும் அவர்களால் ஒரு பேஸ்புக் ஹிட்டை மட்டுமே கொடுக்க முடியும். தட்ஸ் ஆல்.Post a Comment

No comments: