Thottal Thodarum

Nov 16, 2017

ஓ.டி.டி எனும் மாயவன் -2


நெட்ப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வீடியோ ஓ.டி.டி. ப்ளாட்பார்மில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வந்ததெல்லாம் போய், ஸ்பானிஷ், பிரேசில், என உலகின் பல மொழிகளில் ஒரிஜினல் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது ஹவுஸ் ஆப் கார்ட்ஸின் ஹீரோ கெவின் ஸ்பேசி. சமீபத்தில் வில்ஸ்மித்தை வைத்து என்பது மில்லியனுக்கு நெட்ப்ளிக்ஸில் மட்டுமே ஓடும் திரைப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ராட்பிட் நடித்து ஒரு படத்தை வெளியிட்டார்கள். நிறைய சிறு முதலீட்டு படங்களையும் தயாரிக்கிறார்கள். இரண்டு வருடம் முன்பு பூஷன் உலக சினிமா திருவிழாவில் தெரிவான ரேடியோபெட்டி, மற்றும் ரெவீலீஷன் எனும் இரண்டு இண்டிப்பெண்டண்ட் திரைப்படங்கள் நெட்ப்ளிக்ஸில் மட்டுமே வெளியாகி மக்களின் பாராட்டையும், அப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையும் கொடுத்துள்ளது.

என்னது லாபத்தை கொடுத்ததா? என்றால் நிச்சயம் ஆம் என்றே சொல்ல வேண்டும். என்ன அவர்களுடய பணம் என்பது இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் டேட் மாறாமல் கொடுப்பார்கள். இது நெட்ப்ளிக்ஸின் முறை. அடக்கமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இண்டிப்பெண்டட் படங்களை பார்த்து அவர்கள் தெரிவு செய்து வாங்குகிறார்கள். இவர்களின் போட்டியாளரான அமேசானின் ப்ரைம் வீடியோவும் தங்கள் பங்குக்கு ட்ராப்டு, லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, ஹிந்தி மீடியம் போன்ற சிறந்த சிறு முதலீட்டு படங்களை தியேட்டரில் ஓடுகின்ற போதே வாங்கி வெளியிடுகிறார்கள். பைரஸியைத் தேடி அலையாமல் நல்ல ப்ரிண்ட், சப்டைட்டிலோடு  எங்கோ ஒரு மல்ட்டிப்ளெக்ஸில் நடு ராத்திரி ஷோவை தேடி ஓடாமல் வீட்டிலிருந்த படியே நல்ல படங்களை பார்க்க முடிகிறது. டிவி ரைட்ஸ் என்றில்லாமல் சினிமாவிற்கு இன்னொரு வருமான வழியாய் இன்றைய டிஜிட்டல் ப்ளாட்பார்ம் உருவாகியிருக்கிறது. இந்திய அளவிற்கான உரிமை, வெளிநாட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, என இரண்டு விதமாய் சம்பாதிக்க முடியும். அல்லது இரண்டையும் ஒரே நிறுவனத்திடம் கொடுத்து கொஞ்சம் பெரிய பணமாய் பார்க்கவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

முக்கியமாய் ஒரு விஷயம் இந்த டிஜிட்டல் கண்டெண்டுகளுக்கு சென்சார் கிடையாது. கேம் ஆப் த்ரோன்ஸை ஆன்லைனில் பார்த்தவர்களுக்கும் டிவியில் பார்த்தவர்களுக்கு அட என்ன ஜம்ப் ஆவுது? என்று யோசிப்பார்கள். அந்த சீரியல் அமெரிக்க ஹெ.பி.ஓவில் ஒளிபரப்பாவது என்றாலும் அவர்களது சென்சார் ரேட்டிங் படி சாதாரணம் தான். ஆனால் நமக்கு அஹா..ஓஹோ. அப்படியிருக்க, வெப்புக்காக எடுக்கப்படும் சீரீஸ்கள் எதுவே சென்சாருக்கு அஞ்சி எடுக்க வேண்டிய கட்டாயமில்லாதது. அதனால் எல்லா படங்களிலும், சீரீஸ்களிலும் ஆபாசம் வழிந்தோடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால்  பெரிய நோ.. தான். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு கட்டுப்பாட்டோடுதான் படம் எடுக்கிறவர்களும் எடுக்கிறார்கள்.

இந்த ஓ.டி.டி. ப்ளாட்பாமில் இணையத்தில் மட்டுமே கிடைக்ககூடிய வெப் சீரீஸ்கள் ஹிந்தியில், தமிழில், தெலுங்கில், ஆங்கிலத்தில், ஸ்பானிஷில், ப்ரேசிலிய மொழி, ப்ரெஞ்ச், என உலகின் பல மொழிகளில் எடுக்கப்படுகிறது. சினிமாவை விட மிக அதிகமான பொருட்செலவில் தரமான கண்டெண்டுகள் டிவியை விட ரெண்டு படி மேலே  கொடுக்கிறார்கள். House of cards, strange things,  போன்ற அமெரிக்க வெப் சீரீஸ்கள் ஒரு பக்கமென்றால், அமேசான் இன்சைட் எட்ஜ் போன்ற மெகா மகா பட்ஜெட் வெப்சீரீஸ்களை ஒரு பக்கம் அவிழ்த்துவிட, டிவியில் சீரியல் பார்க்காத ஆண்கள் எல்லோரும் வெப் சீரிஸில் முழ்கிக்கிடக்கிறார்கள்.

யூட்யூப் தான் முதல் ஓ.டி.டி ப்ளாட்பார்ம் என்று சொல்ல வேண்டும். அனைத்துவிதமான கண்டெண்டுகளையும் இணையத்தில் இன்றளவில் இலவசமாய் பார்க்க முடிகிற ப்ளாட்பார்ம். இதன் மூலம் வருமானம் பெற்று லட்சக்கணக்கில் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் யூட்யூப் என்பதைப் பற்றி சாதாரணமாய் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஆள் வைத்து வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து  இணையத்துக்காக படங்களை வாங்கும் நிலை வந்துவிட்டது. அதே போல காப்பிரைட் பஞ்சாயத்து கந்தாயமும் இங்கே தான் அதிகம். ஏனென்றால் இது ஓப்பன் ப்ளாட்பார்ம். யார் வேண்டுமானாலும் கண்டெண்டுகளை அப்லோட் செய்து பணம் சம்பாரிக்க முடியும் என்பதால். ஆனால் இன்றைக்கு காப்பிரைட் ப்ரச்சனைகளுக்கு என்றே டீம் வைத்து தேடித் தேடி கண்டெண்ட் ஐடி வைத்து தடை செய்வதில் இவர்களுக்கு இணை வேறு யாரும் இல்லை.  அதே போல பல தைரியமான கண்டெண்டுகளை யூ ட்யூபில் வெளியிட்டு அதற்கு கிடைத்த வரவேற்பினால் தான் பெரிய கம்பெனிகள் தனி ஓ.டி.டி. ப்ளாட்பார்ம் ஆரம்பிக்க தைரியம் வந்து ஆட்டத்தில் இறங்குவதோ, அல்லது வேறு நிறுவனங்களுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து அளிப்பதற்கோ ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று யாஷ்ராஜ், டி.சீரிஸ், ஈராஸ், பர்ஹான் அக்தர், விரைவில் ஷாருக், அமீர் எல்லாம் வரப் போகிறார்கள் என்கின்றனர்.


ஆனால் தெலுங்கு தான் அதிகமான வெப் சீரிஸ்களை தயாரித்து யூட்யூபில் வெளியிட்டவர்கள். சின்னச் சின்ன பட்ஜெட்டில் பல இண்டரஸ்டிங்கான வெப் சீரீஸ்கள் வெளியாகி லாபம் பார்க்க, இன்றைக்கு யெப் டிவி தெலுங்குக்காகவே நிறைய வெப் கண்டெண்டுகளை அளிக்கும் நிறுவனமாய் உருவாகியிருக்க, புதியதான் வியூ எனும் ஓ.டி.டி ப்ளாட்பார்மில் விக்ரம் பட் ஒரு வெப் சீரீஸ் இயக்க, இன்னொரு பக்கம் ராணா டகுபதியின் நடிப்பில் ஒர் சீரிஸ் ஓடிக் கொண்டிருக்கிறது.  தமிழில் ஏற்கனவே நான்கைந்து கண்ட்ரோல் ஆல்ட் டெலிட், தற்போது லிவின் போன்ற வெப் சீரிஸ்கள் வந்து பெரிதான கவனம் பெற்றிருக்க, ஹாட்ஸ்டாரில் இயக்குனர் பாலாஜி மோகனின் “ஆஸ் ஐயம் சபரிங் ப்ரம் காதல்” எனும் வெப் சீரிஸின் வெற்றி தமிழ் நாட்டில் உள்ள பல பேரின் கவனம் திரும்ப காரணமாயிற்று. வெப் சீரீஸ்களின் வெற்றி எப்படி? வருமானம் எப்படி போன்றவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Post a Comment

No comments: