Thottal Thodarum

Jun 2, 2018

கொத்து பரோட்டா 2.0-57

கொத்து பரோட்டா 2.0-57
டெலிகாலர்களிடமிருந்து வரும் கால்களை மிக மரியாதையாய் ஹேண்டில் செய்பவன் நான். பர்சனலாய் பல இளம் பெண்கள் இத்துறைக்கு வந்து கால் செய்யப்படும் கஸ்டமர்களின் நடவடிக்கைகளினால் படும் கஷ்டங்களை நேரடியாய் பார்த்து, என் தொட்டால் தொடரும் படத்தின் நாயகி கேரக்டரையும் டெலி காலர் கேரக்டருக்கு வடிவமைத்திருந்தேன். ஒரு காலத்தில் டெலி காலர்கள் நன்கு படித்து, மிக நல்ல சம்பளத்திற்கு வேலை செய்த காலமெல்லாம் போய். இன்று எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்திற்கும், டார்கெட் கமிஷனுக்குமாய் வேலை செய்யும் நிலை. தினம் டார்கெட். மேனேஜரின் ப்ரெஷர். டெலி காலர் குரலைக் கேட்ட மாத்திரத்தில் கோபப்பட்டு கட் செய்யும் கஸ்டமர்கள். என ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் கிளுகிளு வேலைகளையும் செய்யும் கஸ்டமர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல குரல் வளம் என்று பேசிப் பேசி கடலைப் போட்டு, பிக்கப் செய்தவர்கள் பலர். பல சமயம் எனக்கு கால் செய்யும் பெண்கள் பேசி விட்டு, “சார்.. நான் திரும்ப கூப்பிடுறேன் உங்க காலர் டோன் ரொம்ப நல்லாருக்கு. போனை எடுத்திறாதீங்க” என்ற கோரிக்கையோடு நான்கைந்து முறை தொடர்ந்து அடிப்பவர்கள் கூட உண்டு. இப்படி பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க? என்று பாவப்படும் எனக்கு சென்ற வாரம் ஒரு கால். பிரபல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து. பேசலாமா என்றாள். பேசுங்க என்றேன். சொன்னாள். அடுத்த வாரம் திங்கட்கிழமை வாக்கில் உங்களது எக்ஸிக்யூட்டிவை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நேரிடையாய் ஸ்கீமைப் பற்றி பேசிவிட்டு முடிவெடுக்கிறேன் என்றேன்.

திங்கட்கிழமையும் வந்தது. அதே நிறுவனத்தின் கால். மீண்டும் அதே பேசலாமா? என்ற கேள்வி மட்டுமில்லாமல் திங்கட்கிழமை அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தீர்கள் என்றாள். நான் பொறுமையாய் “உங்களது எக்ஸிக்யூட்டிவை அனுப்புங்கள் “ என்றேன். “இல்ல சார்.. இன்னைக்கே எடுத்தீங்கன்னா உங்களுக்கு பல புதிய ஆஃபர்களை கொடுக்கவிருக்கிறோம்.” என்று கடகடவென பேசிக் கொண்டே போனாள். எனக்கு கடுப்பு ஏறியது. “இதோ பாருங்கம்மா.. நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்லையா? உங்கள் எக்ஸிக்யூட்டிவிடம் பேசிவிட்டுத்தான் முடிவெடுப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. மீண்டும் ஆஃபர், அது இது வென சொல்லிக் கொண்டே போக, சற்றே கோபமாய் “இதபாருங்கம்மா.. நீங்க எனக்கு ப்ரீயாவே பாலிசி கொடுத்தாலும் இன்னைக்கே, இப்பவே பாலிசி எடுக்க மாட்டேன்” என்றேன். “நாங்க எதுக்கு ப்ரீயா கொடுக்குறோம்?” என்றால் குரலில் ஒருமை வந்துவிட்டது. “நான் பேசுறத கொஞ்சம் கேப்பீங்களா மாட்டீங்களா?” என்றே கோபமாய். “கேட்க முடியாதுங்க” “அப்படின்னா வை போனை” என்றேன் கெட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு. இவர்களுக்காக எப்போதும்  இதயத்தின் பெரும் பகுதியில் சாப்ட் கார்னர் வைத்திருந்தவனாகிய நான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா டிக்கெட் விலையை 25 சதவிகிதம் வரை ஏற்றிக் கொள்ளலாம் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது. மல்ட்டி ப்ளெக்ஸுகளின் 120 ரூபாயை 160 வரையிலும், சிங்கிள் ஸ்கீரின் திரையரங்கங்களின் விலையை அதிகபட்சமாய் 65 ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. இதில் ஒர் பெரிய குழப்பம் என்னவென்றால் அரசு அறிவித்த பத்து சதவிகித கேளிக்கை வரி என்பது இந்த அதிகரிக்கப்பட்ட தொகையிலேயே இருக்கிறதா? அல்லது இந்த தொகைக்கு மேல் பத்து சதவிகித வரி, மேலும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி சேர்த்தா என்பதில் தெளிவில்லை. சரி வரியுடன் சேர்த்து 65 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொகையில் 6.50 பைசா கேளிக்கை வரியாகிவிடும். ஏற்கனவே வாங்க வேண்டும் என்று அரசு ஆணையில் மட்டுமே இருந்த 50 ரூபாய்க்கு மேல் எட்டு ரூபாய் சில்லரை மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த 65 ரூபாய்க்கு ஜி.எஸ்.டி 18 சதவிகிதம் வரும் போது ஒரு டிக்கெட்டின் விலை 76.70 பைசா. தமிழ் நாட்டில் சென்னையில் கேசினோ, மற்றும் ஏ.வி.எம் ராஜேஸ்வரியைத் தவிர மற்ற எந்த ஒரு தனி திரையரங்களில் அரசு நிர்ணையித்த விலைக்கு டிக்கெட் விற்பதில்லை என்பது அரசுக்கும், மக்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். சிட்டியை விடுங்கள், தமிழ்நாட்டில் மற்ற ஊர்களில் சிறு படங்களுக்கு 70 முதல் 80 ரூபாயும். பெரிய படங்களுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை கூப்பன் கொடுத்து டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதையும், திருச்சி, சேலம், ஈரோடு போன்ற தியேட்டர்களில் பெரிய படங்களுக்கு 250 ரூபாய் கூட சில சமயம் வாங்குகிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்தது.

நிச்சயம் 30 ரூபாய்க்கும் , 50 ரூபாய்க்கும் இன்றைய விலைவாசியில் தியேட்டர் நடத்த முடியாது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இத்தனை வருடமாய் ஏற்றப்படாமல் இருந்த டிக்கெட்டின் விலையை திரையுலகினர் கேட்டிருந்ததை விட உயர்த்தி கொடுக்காவிட்டால் பரவாயில்லை. இத்தனை நாள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கொடுத்துக் கொண்டிருந்த விலைக்காவது ஏற்றிக் கொடுத்தால் தானே, இனி வரும் காலங்களில் லஞ்ச லாவண்யமில்லாமல் தொழில் செய்ய ஏதுவாக இருக்கும். இன்றைக்கு திருப்பூர் போன்ற நகரத்தில் கூட மல்ட்டிப்ளெக்ஸ் இல்லாமல் தனி திரையரங்குகளில் 80, 100 மாய் டிக்கெட் விற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த தொகையை வைத்து தொழில் நடத்த முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, எப்படி அரசு நிர்ணையித்த விலைக்கு தொழில் நடத்துவார்கள் என்பது யோசிக்க வேண்டியதாகும்.

புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்கிற போராட்டமே பத்து சதவிகித வரிக்கல்ல. இத்தனை வருடங்களாய் இருந்த அடிப்படை விலையை அதிகரிக்க வேண்டி நடந்த போராட்டம் என்று சொல்லியிருந்தேன் அது நிருபணமாகியிருக்கிறது. ஏனென்றால் மல்ட்டிப்ளெக்ஸ் விலையுர்வை மிகவும் எதிர்பார்த்து இருந்தார்கள். போன வாரம் வரி குறித்தும், இரட்டை வரி குறித்தும் பேசிக் கொண்டிருந்தவர்கள், டிக்கெட் விலையேற்றம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட இரட்டை வரி விதிப்பை குறித்து பேசவேயில்லை. முடிந்தால் அடிப்படை விலையில் வரி என்றில்லாமல் விலையின் மேல் வரி போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னால் இன்னும் சந்தோஷம்தான் அடைவார்கள் என்று தோன்றுகிறது.

பத்து பைசா, 25 பைசா, 50 பைசா எல்லாம் வழக்கொழிந்து இருக்கும் நேரத்தில் அரசு 153.60 பைசா 20 பைசா, 30 பைசா என்றெல்லாம் விலை வருமாறு நிர்ணையிப்பது அபத்ததின் உச்சம். ஆன்லைனில் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் மற்றும் வரியோடு அதிகமாய் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நேரடியாய் டிக்கெட் எடுக்க வந்தால் அதிகபட்சமாய் 40 பைசா, 50 பைசா கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏன் சில்லரை கொடுக்கவில்லை என்று கேட்கவும் முடியாது. ஆனால் மறைமுகமாய் நம் பணம் நம்மிடமிருந்து அரசின் அபத்த சட்ட வரிகளால்  நம் பாக்கெட்டில் கைவிட்டு எடுக்கப்படுகிறது. இது அரசுக்கு தெரியாதா? பத்து ரூபாய்க்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் முப்பஹ்டு ரூபாய்க்கு மாறி.. டிவியில் விளம்பரம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். இது அவர்களின் வியாபாரம்  வளர்ந்திருக்கிறதை, போட்டியை காட்டுகிறது. ஆனால் இவர்களின் வளர்ச்சிக்கான பலியாடு காமன் மேன்களாகிய பார்வையாளர்கள்.

பைரஸி, டிக்கெட் அதிக விலை, திரையரங்குகளின் மோசமான பராமரிப்பு, இணையத்தின் வளர்ச்சி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்கள் என சினிமாவுக்கு மாற்றான எண்டர்டெயின்மெண்ட் வளர்ந்து கொண்டேயிருக்க, தியேட்டருக்கு வருகிறவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் திரையுலக கிரியேட்டர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இருக்கிறது. நேர்மையான வரி வசூல், நிர்வாகம். போன்றவற்றை செயல்படுத்த அரசும் மக்களுக்கு ஏற்றார் போல் இயங்க வேண்டும். பார்ப்போம் இன்னும் எவ்வளவு தூரம் மக்களின் டவுசரை அவிழ்க்கபோகிறார்கள் என்று..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
REVENGE PORN
சென்ற வாரம் ஆந்திர மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை அவருடய முறைப்பையன் கற்பழித்து கொன்றுவிட்டான். காரணம் அவள் வேறு ஒர் இளைஞருடன் நெருக்கமாய் இருந்தாள் என்பதும், அவனுடன் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதாலுமாம். பெண்களுக்கான பிரச்சனைகள் நம்மூரில் மட்டுமல்ல அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் கூட அப்படியேத்தான் இருக்கிறது. ஸ்டாக்கிங், அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை, மன உளைச்சல் கொடுக்கக்கூடிய விஷயங்கள் என எல்லாமே அப்படியே. இந்த ஆவணப்படம் முக்கியமாய் பேசுவது மொபைல் போன்களும், இணையமும் அடைந்திருக்கும் அதீத வளர்ச்சியின் காரணமாய் பரவியிருக்கும் போர்ன் வீடியோக்களைப் பற்றியது. தொழில் முறை போர்ன் நடிகர்களை வைத்து எடுக்கப்படும் வீடியோக்களை விட, நிஜ காதலர்களிடையே நடக்கும் கலவிகளும், அதீத நம்பிக்கை, மற்றும் க்யூரியாசிட்டியின் காரணமாய் தெரிந்தே எடுக்கப்படும் வீடியோக்களை, ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த உறவு பிரியும் போது காதலன் அந்த வீடியோக்களை சோஷியல் நெட்வொர்க்கில், நட்பு வட்ட நெட்வொர்க்கில் வெளியிடுவது என்பதுதான் பழிவாங்கலுக்கான வெளியிடப்படும் வீடியோக்கள். இது குறித்த இந்த ஆவணப்படம் இன்றைய சமுதாயத்தினரின் பர்வர்ஷனை வெளிக்காட்டுகிறது. யோசிக்க வைக்கக்கூடிய ஆவணப்படம்.
Post a Comment

1 comment:

சிகரம் பாரதி said...

உங்க கொத்து பரோட்டா செம சுவையாக இருக்கிறது. திரையரங்குகளில் டிக்கெட் விலை நிலவரம் ஒருபுறமிருக்க உணவு வகைகளின் விலையிலும் அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். 50 ரூபாய் சிற்றுண்டியை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த நிலையெல்லாம் என்றுதான் மாறுமோ?

இராஜராஜர் பராக்...!
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
#சிகரம்