Thottal Thodarum

Apr 3, 2019

எது ஆபாசம்?

எது ஆபாசம்?

சில மாதங்கள் முன்பு நண்பர் ஒருவர் தொலைபேசியிருந்தார். எடுத்த மாத்திரத்தில் “இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என்றார். எனக்கு ஏதும் புரியவில்லை. என்ன என்று கேட்டதற்கு “நேற்றுதான் குடும்பத்தோடு வடசெனை படம் பார்த்தேன். மக்குகூதின்னு எல்லாம் வசனம் பேசுறாங்க. வயசு வந்த பொண்ணு பையன், பொண்டாட்டியோட போய் அசிங்கமா போச்சு. இதையெல்லாம் எழுத மாட்டீங்களா?” என்றவரின் குரலில் கோபம் கொப்பளித்தது.

“ஏங்க அதான் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க இல்லை. நீங்களும் சினிமால இருந்திருக்கீங்க. உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த சர்டிபிகேட் கொடுத்த படத்துக்கு குழந்தைகளோட போகக்கூடாதுன்னு தெரியுமில்லை?”

“என் பொண்ணு தனுஷ் பேன்.”

“அதுக்காக அவர் எப்பவும் குடும்பத்தோட பார்குறா மாதிரியான படங்களில் தான் நடிக்கணுமா?”

“ஒரு பெரிய ஆர்டிஸ்ட் படம்னா குடும்பத்தோட தான் சார். பார்பாங்க. லேடீஸ் எல்லாம் நெளியிறாங்க இல்லை”

எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. “லேடீஸுக்கு பிடிக்காதுன்னு நீங்க சொல்லாதீங்க. அவங்க அப்படி சொல்லைன்னா நீங்க அவங்கள தப்பா நினைப்பீங்கன்னு கூட அப்படி சொல்லி பழகியிருக்கலாம். முன்னயெல்லாம் அவங்களுக்கு பிடிச்ச படமா மேட்னி, மார்னிங் ஷோல பெண்களுக்காகனு டிக்கெட் கொடுத்த ஊரு இது. இன்னைக்கு வீட்டுல வர்ற சீரியல்ல நீங்க சொல்ற கெட்ட வார்த்தையை விட மோசமான கண்டெண்ட் வருது. ஏன் நீங்க தண்ணி பிடிக்க ரோட்டுக்கு போறது இல்லை. பிடிக்கிற பெண்கள் கிட்ட கேளுங்க.. படத்துல பேசுன கெட்ட வார்த்தைய விட அதிகமா அவங்களே பேசக்கூட செய்திருக்கலாம். அதோட எல்லா படத்தையும்  குடும்பத்தோட பாக்கணுங்கிறத விடுங்க. காலம் மாறியிருக்குது. அவங்களுக்கு ஏத்த ரசனைக்கு படம் வர ஆரம்பிச்சிருச்சு. மொபைல்ல படம் பாக்குறாங்க. உங்க பொண்ணுக்கு என்ன வயசு? 18 ஆயிருச்சா?”

“ஆயிருச்சுங்க. அவங்களுக்கு படம் பிடிக்கலை”

“அப்படித்தான் சொல்வாங்க. அதே படத்தை அவங்க வயசு ப்ரெண்ட்சோட பாக்கும் போது என்சாய் பண்ணுவாங்க”

“என் பொண்ண நான் அப்படி வளக்கலைங்க”

“இன்னைக்கு இருக்குற இண்டர்நெட் காலத்துலயா?”

“அதுதான் எல்லாரையும் கெடுக்குது. அதுனாலத்தான் யாருக்கும் போன் கிடையாது.வீட்டுல இண்டர்நெட் கிடையாது ஸ்ட்ரிக்ட்”
எனக்கு சிரித்து விட்டேன். நண்பர் அவர் காலத்தில் கொஞ்சம் “அப்படி இப்படி” இருந்தவர்தான்.

“என்ன காமெடியா சொல்லிட்டேன்’

‘இண்டர்நெட் இல்லாத காலத்துலேயே நீங்க எப்படி இருந்தீங்கன்னு தெரியாதா? அப்ப எது உங்களை தவறா வழி நடத்திச்சு?. ஸோ.. உங்களுக்கு பயம். நாம அந்த காலத்துலேயே எல்லாத்தையும் ஒரு ரவுண்ட் வந்திருக்கோம். இப்ப இண்டர்நெட் எல்லாத்தையும் காட்டிருது. கெட்டுப் போயிருவாங்களோனு பயம்.

ஒரு விஷயம் நண்பா. நீ என்ன கட்டுப்பாடு போட்டாலும் அதது அந்தந்த வயசுல நடக்கத்தான் செய்யும். கண்காணிக்கிறது தப்பில்லை. அதுக்காக எதையும் அவங்களுக்கு கொடுக்காம இருக்க ஆர்மபிச்சா. அவங்க திருட்டுத்தனம் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. நீங்க உங்க வீட்டுல உங்க வயசுல பண்ணா மாதிரி.” என்றதும் கோபமாய் போனை வைத்துவிட்டார்.

மார்பு குலுக்கல்களும், பின்புற ஆட்டங்களும், ஆண் பெண் சேர்க்கை செய்கைகளும், அதற்கான ஆபாச குறீயிடுகளையும், பொம்ளேன்னா இப்படித்தான் வாழணும்னு எட்டு பொண்ணை ரேப் பண்ணவன் அட்வைஸ் பண்றதையும், அதீத ரத்தம் தெரிக்கும் வயலன்ஸும் கொண்ட “யு” சர்டிபிகேட் படங்களை குடும்பத்தோடு பார்த்தவர்கள் தான் நாம். கெட்ட வார்த்தை பேசும் படங்களால் கெட்டுப் போய்விடுவோம் என்று நம்புவது ஆச்சர்யமாய் உள்ளது.

“ஏ” படங்கள் வயது வந்தவர்களுக்கானது. வயது என்றால் 18 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு அதுவும் அந்த வயதில் ஆணோ/பெண்ணோ மன முதிர்வு ஏற்பட்டிருக்கும் என்கிற நம்பிக்கையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் வயது. என்பது வயதாகியும் முதிராதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லாவிட்டால் குழந்தை குட்டிகளோடு ‘ஏ’ சான்றிதழ் படத்துக்கு போவார்களா? இப்படி தெரிந்தே போய்  உட்காருவது தான் பெரும் ஆபாசமாய் படுகிறது எனக்கு. 

Post a Comment

1 comment:

Unknown said...

ஏ சர்டிபிகேட் கொடுத்த படத்திற்கு கும்பத்துடன் சில பேர் வருகிறார்கள் அவர்களை தடுக்கவும் முடியாது சில ரசிகர்கள் கேட்பார்கள் சில பேர் கேட்க மாட்டார்கள் நான் திரையரங்கு ஆப்பேரட்டர் இன்னும் சில பேர் படம் பார்த்து விட்டு கொஞ்ச நேரத்தில் திரையரங்கை விட்டு வெளியே சென்று விடுவார்கள். சமீபத்தில் வந்த படம் எங்களை தர்மசங்கடமான நிலை ஆகிறது.