Thottal Thodarum

Mar 3, 2021

24 சலனங்களின் எண். விமர்சனம்-5


 எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் விமர்சனம்

# 24 சலனங்களில் எண் #
கேபிள் சங்கர் எழுதிய '24 சலனங்களின் எண்' சினிமாத் துறை குறித்த பல நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் உருவாகின்றன. பல படங்களில் அசோசியேட்டாக அனுபவம் வாய்ந்த ஒருவரும் வளர்ந்து வரும் இயக்குநர் ஒருவரும் ஒரே நாயகனை வைத்துப் படம் தொடங்குகிறார்கள். அந்த இரு படங்களின் தயாரிப்பும் வெளியீடும்தான் நாவல்.
தனது துறை சார்ந்த நாவல் என்பதால் நாவலாசிரியருக்குப் பல சம்பவங்களைத் துல்லியமாக எழுத வாய்த்திருக்கிறது. அவரே நேரில் பார்த்த உணர்ந்த பல விஷயங்களைத்தான் நூலில் எழுதியிருக்கிறார். துறை சார்ந்த சிலரிடம் சமீப காலங்களில் பரிச்சயம் இருப்பதால் என்னாலும் பல இடங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்தது. தமிழ் சினிமா உருவாகும் விதமானது கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பெரிதும் மாறியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த புத்தகங்கள் ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலகட்டத்தின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசுபவையாக இருக்கலாம். ஆனால் தற்காலத் தமிழ்த் திரையுலகைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது.
ஒரு சினிமா உருவாக 24 கலைகள் ஒன்றிணைய வேண்டுமாம். ராமோஜி பிலிம் சிட்டியில் சுற்றியபோது சொல்லிக் காட்டினார்கள். அது கண் முன்னால் நிகழும் ஒரு மேஜிக். மனிதனைக் கடவுளுக்கு அருகில் நிறுத்தும் ஒரு செயல். இதன் காரணமாகவே அந்தத் துறை பலரையும் கவந்து இழுத்துக் கொண்டிருக்கிறது. பலர் வாழ்க்கையே முடியும் தருவாயிலும் ஒற்றை வாய்ப்புகாகக் காத்திருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தவர்கள் இறுதி வரை அதைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மிகச்சிறிய நிகழ்தகவுதான் வெற்றிக்கானது என்றாலும் நம்பிக்கையோடு கூட்டம் கூட்டமாக வாய்ப்புக்கான வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான பல பாத்திரங்கள் இந்த நூலெங்கும் உலவுகிறார்கள்.
கதாபாத்திரங்களைப் பொறுத்தவரை சீனியரான ராமராஜ் மனதில் நிற்கிறார். மற்ற அனைவருமே நல்லவர் தீயவர் என்று பிரித்தரிய முடியாத ஒரு தளத்தில் இங்கும் அங்கும் மாறி மாறி உலவுகிறார்கள். சினிமாத் துறை எப்படிப்பட்ட மனிதரையும் அப்படி மாற்றிவிடும் என்பது உண்மை. ஆனால் அதன் விளைவாக நமக்குப் பிரியமான ஒரு கதாபாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு கதை நெடுகிலும் பயணிக்க இயலவில்லை என்பது மட்டும் எனக்கு ஒரு குறையாகப் பட்டது.
திரைப்படத்தை யாரெல்லாம் தயாரிக்க வருகிறார்கள், சிறிய பெரிய படங்களின் வெவ்வேறு சவால்கள், மார்க்கெட்டிங், வெளியீடு என்று அனைத்துத் தளங்களையும் இந்த நூல் தொட்டுச் செல்கிறது. திரைத்துறையில் இருப்பவர்கள்களுக்கும் இருக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கும் ஒரு சுவாரசியமான கையேடாக இருக்கும். கொஞ்சம் பீதியைக் கிளப்பினாலும் உண்மை நிலை புரியும்.
இது அவருடைய முதல் நாவல் என நினைக்கிறேன். நண்பர் கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள்.
- ஷான் கருப்பசாமி.

Post a Comment

No comments: