Thottal Thodarum

Dec 9, 2022

சாப்பாட்டுக்கடை - மாதம்பட்டி சமையல்

விக்ரம் பட வெற்றி விழாவிலிருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரிடமும் ஏகோபித்த பாராட்டு பெற்ற விஷயம் ஒன்று எதுவென்றால் மாதம்பட்டி சமையல் தான். மெகந்தி சர்க்கஸ் படத்தின் நாயகன். தயாரிப்பாளர் தான் இந்த கேட்டரிங் கம்பெனியின் ஓனர். அதன் பிறகு திரைப்பட விழாக்களில் மாதம்பட்டியின் கேட்டரிங் வைப்பது நிகழ்ச்சிக்கு காம்பய்ரிங் வைப்பதைப் போல கட்டாயம் ஆகிவிட்டாலும் ஏனோ என்னால் இவர்களது உணவை ருசிப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. நேற்று மாலை நண்பர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் சித்தார்த்தின் ‘the fall" வெப் சீரீஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அங்கே போனால் மாதம்பட்டியின் டின்னர். சரி நாம டின்னருக்கு வருவோம்


ஸ்வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். ப்ரெட் மால்பூவாவும், பரங்கி குல்கந்து அல்வாவும் வைத்திருந்தார்கள். பரங்கி குல்கந்து அல்வா சும்மா தளதளவென நெய்யோடு பார்பதற்கே கவர்சியாய் இருந்தது. அட்டகாசமான சுவை. சாப்பிட்டு முடிக்கும் போது அடி நாக்கில் தெரிந்த குல்கந்தின் வாசம் கலந்த சுவை செம்ம.

ப்ரெட் மால்பூவா கொஞ்சம் ட்ரை ஆகிவிட்டதால் அதன் மெதுத்தன்மை இல்லாமல் போயிருந்தது. ஆனால் வித்யாசமான சுவை.

ஸ்டார்ட்டஸாக சிக்கன் லாலிபாப், கோலா உருண்டை, சிக்கன் பிச்சிப்போட்டது, ஸ்டப்டு முட்டை, பன்னீர் பொரியல், வெஜ் மீன் என வரிசைக்கட்டியிருந்தார்கள்.

சிக்கன் லாலிபாப் நல்ல சிக்கன் பீஸ்களோடு, ஜூஸியாய் ப்ரை செய்யப்பட்டிருந்தது. கோலா உருண்டை மாவும், அரைத்த மட்டனும் சரியான பதத்தில் இருந்தது. செம்ம. சிக்கன் பிச்சிப் போட்டது கொஞ்சம் காரம் குறைந்த மசாலாவில் குட்டிக்குட்டியாய் பிச்சிப்போட்ட சிக்கன் வருத்து கொடுத்திருந்தார்கள் அட்டகாசமாய் இருந்தது. ஸ்டப்டு முட்டை அஹா ஓஹோ என்றில்லாமல் மற்ற அயிட்டங்களை பார்க்கும் போது ஆவரேஜ் தான். பன்னீர் பொரியல். கிட்டத்தட்ட முட்டை புர்ஜி அளவுக்கு நன்கு உதிர்க்கப்பட்ட தூள்களாய், சரியான விகிதத்தில் பச்சை மிளகாய் எல்லாம் போட்டு தந்திருந்தார்கள். பன்னீரின் சுவையும், முட்டையின் சுவையுமாய் கலந்து கட்டி இருந்தாலும் ஒன் மோர் டைம் சாப்பிடலாமே என்று தோன்றியது. அடுத்தடுத்த அயிட்டங்கள் இருப்பதால் அடுத்த ஐயிட்டமான வெஜ் மீனை சாப்பிட ஆரம்பித்தேன். மீன்ல என்னடா வெஜ் என்று கேட்டீர்களானால் சோயா தான். மீன் சைசில் கட் செய்து அதில் மசாலா தடவி மீன் வருவல் போல் தந்திருந்தார்கள். இது ஒரு லெட் டவுன் தான். அத்தனை சிலாக்கியமாய் இல்லை. காரணம் சோயா மீன் போல சாப்டாக இல்லாமல் பிஸ்கெட் போல கடித்து சாப்பிடும் பதத்தில் இருந்ததால். 

மெயின் கோர்ஸாக மட்டன் பிரியாணி, வெஜ் மட்டன் பிரியாணி, தோசை வகைகளில் ஆனியன், பொடி, நெய், ரவா தோசைகள், டிப்பன் சாம்பார், ரசம், சாதம், மட்டன் செமி கிரேவி, வெஜ் மீன் குழம்பு, தக்காளி கடைசல், ப்ரையம்,  என வரிசைக்கட்டியிருந்தார்கள். மட்டன் பிரியாணி இருக்க வெஜ் மட்டன் எதற்கு என முதல் ரவுண்ட் மட்டன் பிரியாணியை அடைந்தேன். சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட மட்டன் பிரியாணி. அதிக காரமில்லாமல், நன்கு வெந்த மட்டன் பீஸ்களோடு அருமையாய் இருந்தது. கூடவே கொடுத்த செமி மட்டன் கிரேவி அட்டகாசம்.  சரி வெஜ் மட்டன் பிரியாணியையும் ஒரு கை சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று ட்ரை செய்த போது  மட்டனின் மணம் மட்டுமே இல்லை.. மற்றபடி சுவையில் மட்டன் பிரியாணிக்கு சரியான போட்டியாகவே இருந்தது. வெஜ் மட்டன் பிரியாணிக்கு மட்டன் செமி க்ரேவி செம்ம காம்பினேஷனாய் சாப்பிட்டேன். அடி பொளி.

கொஞ்சமே கொஞ்சம் சாதம் போட்டு மட்டன் கிரேவியையும், வெஜ்மீன் கிரேவியை சாப்பிட்டேன். மட்டன் ஏற்கனவே சொன்னபடி நன்றாக இருந்தது. வெஜ் மீன் காரக்குழம்பாகவும் இல்லாமல், மீன் குழம்பாகவும் இல்லாமல், அதில் போடப்பட்டிருந்த ஃபேக் மீன் துண்டான சோயா மீன் வறுவல் எப்படி கெட்டியாய் இருந்ததோ அதையே இதற்கும் பயன்படுத்தியிருப்பார்கள் போல கொஞ்சம் குழம்பில் ஊறியிருந்ததே தவிர சேம் பிஸ்கட் சுவை லெட் டவுன் தான்.

தோசைகள் ஆஸ்யூசுவல் குறையொன்றுமில்லை. ஆனால் அந்த தக்காளி கடைசல். அட அட அட.. அட்டகாசம். குறிப்பாய் நெய் தோசைக்கும், ரவா தோசைக்கும் செம்ம. நன்கு கடைந்த தக்காளி, வெங்காயம், பூண்டு என டிவைன் என்று சொன்னால் மிகையில்லை. இதற்காகவே கொஞ்சம் சாதம் போட்டு தயிர் சாப்பாட்டுடன் ரெண்டு ஸ்பூன் தக்காளி கடைசலோடு சாப்பிட்டேன் தேவாமிருதம்.  எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு கொங்கு ஸ்டைல் ரசத்தை விட்டு விட்டாள் அது நியாயமாய் இருக்காதே என்று ஒரு டம்பளர் ரசத்தை வாங்கி குடித்தேன். வழக்கம் போல கொங்கின் பெருங்காயம் தூக்கலான ரசம் தான் குறையொன்றுமில்லை. வெளியே டெசர்டுக்கு மூலீகை ஜீரண கசாயமும், ஐஸ்க்ரீமும் வைத்திருந்தார்கள். நான் மூலிகை கசாயத்தை தெரிந்தெடுத்து ஒரு சின்னடம்பளர் குடித்தேன். தித்திப்பு சுவையுடன் இருந்தது. சாப்பிட்ட எதுக்களிப்பு ஏதுமில்லாமல் இருக்க இது உதவியது என்றே சொல்ல வேண்டும். இந்த சோயா மீனை இனி அவாய்ட் செய்யலாமென்று தோன்றுகிறது. அல்லது இன்னும் பதத்துடனான சோயாவை பயன்படுத்தி சமைக்கலாமென்பது என் எண்ணம். மற்றபடி நல்ல திருப்தியான சாப்பாடு.

கேபிள் சங்கர்


Post a Comment

No comments: