Thottal Thodarum

Dec 27, 2022

சாப்பாட்டுக்கடை - மவுண்ட்பேட்டன் ஐயர் கேட்டரிங்

 மார்கழி மாசம் வந்துவிட்டாலே எல்லா சபாக்களிலும் கச்சேரி களைகட்ட ஆரம்பித்துவிடும். கூடவே கச்சேரி நடக்கும் இடத்தில் கேட்டரிங் ஆட்களின் கேண்டீனும் ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு கச்சேரி முடிந்ததும் அங்கே இருக்கும் கேட்டீனில் மதிய சாப்பாடு, மாலை டிபன், இரவு உணவு என களை கட்டிவிடும். கச்சேரிக்கு போகிறவர்களை விட கேண்டீனில் நிறைய கூட்டம் என்பதை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இதில் மவுண்ட்பேட்டன், அறுசுவை என பல பேர் பிரபல்யம். ஒவ்வொரு மார்கழி மாத சீசனுக்கும் ஏதாவது புதிய ஐயிட்டத்த இறக்கி கேண்டீன் வியாபாரத்தை களை கட்ட வைத்துவிடுவார்கள் இவர்கள்.  வருடா வருடம் நானும் பல கேண்டீன்களுக்கு படையெடுத்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் எழுத நினைத்ததில்லை. இன்றைய புட் ப்ளாகர்களுக்கு வேற லெவல் விமர்சகர்களைத் தாண்டி வெறும் வெஜிட்டேரியனில் இத்தனை வகைகளா? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவர்களது அயிட்டங்கள வரிசைக்கட்டி இருக்கும். 

மியூசிக் அக்காடமியில் கேண்டீனுக்கு போய்ப் பார்க்கலாம் என்று போன போது அங்கே உள்ளே நுழையும் போதே கேண்டீனுக்கு மட்டுமென்றால் பார்க்கிங் இல்லை என்று போர்டே வைத்திருந்தார்கள். சரி என வண்டியை வெளியே எடுத்து வந்து நாரதகான சபாவிற்குள் நுழைந்தோம். அங்கேயும் பார்க்கிங் புல் தான். இருந்தாலும் கேண்டீன் போக வேண்டும் என்று சொன்னவுடன் நுழைய அனுமதித்தார்க்கள். நாரதகான சபாவின் பின்புறத்தில் கேண்டீன் ஏற்பாடாகியிருந்தது. ஶ்ரீ சாஸ்தலயா கேட்டரிங் சர்வீஸ் கடை போட்டிருந்தார்கள். ஏகப்பட்ட கூட்டம். உட்கார இடமில்லை. கொஞ்சம் நேரம் காத்திருந்துதான் அமர வேண்டியிருந்தது. போண்டா, ரவா தோசை, கூடவே ஆப்பம் கடலைக்கறி என்று ஆர்டர் செய்தோம். ஆப்பம் கிரிஸ்பினெஸ் இல்லாமல் மாவின் கலர் சற்றே கலர் குறைவாகவே இருந்தது. கூட கொடுத்த கடலைக்கறியில் ஏகப்பட்ட கிராம்பு மசாலா. மசாலாவின் மணம் உச்சி மண்டை வரை ஏறியது. அடுத்து வந்த ரவா தோசை கிரிஸ்பாக கேட்டிருந்தோம். அதுவும் தடியான மாவோடு கிரிஸ்பினெஸ் இல்லாமல் செட் தோசைப் போல வந்தது. கூடக் கொடுத்த சட்னி மட்டுமே சிலாக்கியம். போண்டாவைப் பற்றி சிலாக்கியமாய் சொல்ல ஏதுவுமில்லை. மிகவும் ஏமாற்றத்துடன் கிளம்ப்பினோம். குடிப்பதற்கு தண்ணீர் வைக்காமல் தண்ணீர் பாட்டில் வைத்தார்கள். பில் கொடுக்க போன போது தண்ணீருக்கும் காசு போட்டார்கள். நான் கேட்கவேயில்லை. அவர்களாகவே கொடுத்தார்கள் எனவே குடிக்க தண்ணீர் இல்லாமல் எப்படி சர்வ் செய்கிறீர்கள்? என்று கேட்டவுடன் பில்லில் கழித்தார்கள்.  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை. முதல் காண்டீனே இப்படி சொதப்புகிறதே என்று இதைப் பற்றி சித்ரா லஷ்மனணிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, மவுண்ட் பேட்டன் ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் வெறும் கேண்டீன் மட்டும் நடத்துறாரு. ஒரு நடை போய்ட்டு வந்திருங்க. என்றார். 

மவுண்ட்பேட்டன் மணி அய்யர் கேட்டரிங் பிரசித்தமான கேட்டரிங். கல்யாண மண்டபம் சற்றே காலியாகவே இருந்தது. போன மாத்திரத்தில் செட்டி நாடு அயிட்டங்களைப் பார்த்ததும், பலாப்பழ பணியாரம், தக்காளி பணியாரம் இரண்டையும் ஆர்டர் செய்தோம். பலாப்பழ பணியாரம் செம்ம. கொஞ்சம் எண்ணையில் பொறித்ததால் எண்ணெய் வாடை லேசா அடித்ததை தவிர, அதிக ஆயில் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அதிகம் தித்திப்பும் இல்லை. இல்லாமலும் இல்லை. அடுத்து வந்த தக்காளி பணீயாரம் அட்டகாசமாய் இருந்தது. கூட கொடுத்த தேங்காய் சட்டினிக்கு தக்காளியின் லேசான புளிப்பு, மற்றும் அதனுடன் சேர்க்கப்பட்டிருந்த காரமும் வித்யாசமான சுவையை கொடுத்தது. அடை அவியல் ஒரு செட்டும், palak பூரி வித் கடாய் வெஜிட்டபிள் ஆர்டர் செய்திருந்தோம். அடை பதமான அடை. டிபிக்கல் அய்யர் வீட்டு அடை. அதிக காரமில்லாமல் தொட்டுக் கொள்ள கொடுத்த அவியலில் தாராளமாய் தேங்காயும், காய்கறிகளையும் போடப்பட்டு அடைக்கு தொட்டுக்க அவியலா? இல்லை அவியலை தொட்டுக்க அடையா? என்று சண்டை போட வேண்டியிருந்தது. கடைசியாய் வந்த மேத்தி பூரி. மூன்று கொடுத்தார்கள். கூடவே திக்கான அரைக்கப்பட்ட ம்சாலா கிரேவியில் அநேகமாய் முந்திரி இருப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருந்தது. காரணம் முத்திரியை அரைத்தால் கிடைக்கும் லேசான தித்திப்பும். திக்கான கிரேவியும் அட்டகாசம். மூன்று பூரிக்கு ரெண்டு கப் கிரேவி என்பது அதன் சுவைக்கான அங்கீகாரம் என்றே சொல்லலாம். கட்டங்கடைசியாய் ஒரு பில்டர் காப்பியோடு முடித்தோம். குறை சொல்ல முடியாத காப்பி.

மதிய சாப்பாடு விலை 580 சொச்சம் எனும் போது கெதக் என்று இருந்தது. மெனுவை பார்த்த போது நல்ல கல்யாண வீட்டு சமையல் மெனுதான். என்னதான் மவுண்ட்பேட்டன் என்றாலும் அதிகம் என்றே தோன்றியது. கேட்டரிங்காரர்களால் ஓட்டல்காரர்கள் ஆக முடியாது என்பது என் திண்ணமான எண்ணம். காரணம் அவர்கள் வைக்கும் விலை. எத்தனையோ கேட்டரிங்காரர்கள் ஓட்டல் ஆரம்பித்து மூடியிருக்கிறார்கள் சுவையெல்லாவற்றையும் தாண்டி இவர்களது விலைதான் வாடிக்கையாளர்க்களை அவர்களிடமிருந்து விலகி செல்ல வைக்கிறது. என்ன செய்வது அவர்களுக்கு ஒட்டல் நடத்த கை வராது. பட் இந்த மார்கழி கேண்டீன் பயணத்தில் நல்லதொரு காண்டீனில் சாப்பிட்டது திருப்திதான். மைலாப்பூரில் அறுசுவை போட்டிருக்கிறாராம். ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரவேண்டும்.


Post a Comment

No comments: