Thottal Thodarum

Jun 6, 2012

சாப்பாட்டுக்கடை - புத்தூர் ஜெயராமன் கடை

ஒவ்வொரு முறை தஞ்சை மாவட்டத்தை நோக்கிப் போய் வரும் போதும் மணிஜி இந்தக்கடையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பார். ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டேயிருக்கும். இம்முறை அப்துல்லாவின் அக்காள் மகள் திருமணத்திற்கு போகும் போதே நான் ஓ.ஆர்.பி.ராஜாவிடம் சொல்லிவிட்டேன் மதிய சாப்பாடு அங்கேதான் என்று.


சிதம்பரம் தாண்டி ஏழு கிலோ மீட்டருக்கு அருகில் மயிலாடுதுறை செல்லும் வழியில் மெயின் ரோட்டிலேயே ஒரு சின்ன குடிசைக்கடை இருக்கும் அதான் புத்தூர் ஜெயராமன் கடை. வாசலிலேயே விரகடுப்பில் எரா வெந்து கொண்டிருக்க, வாசல் எங்கும் சுமோக்களும், டோயோட்டோக்களுமாய் வரிசைக் கட்டியிருந்தது. உள்ளே சென்றால் செம கும்பல் டேபிளுக்குப் பக்கத்திலேயே க்யூ கட்டி நின்றார்கள். நாங்கள் சென்ற நேரம் நல்ல மதிய பசி நேரம் வேறு. கூட்டம் அம்மியது. அந்நேரம் பார்த்து ஒரு டேபிள் காலியாக, கடை சிப்பந்தி ஒருவர் வந்து சார்.. நீங்க உக்காந்துக்கங்க. என்று இடம் சொல்லி உட்கார வைத்துவிட்டு போனது ஆச்சர்யமாக இருந்தது. அவர் நிற்கும் எல்லோருக்கும் அம்மாதிரி இடம் காலியானது உட்கார வைத்து இலை போடச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு சிறுவன் படு சுறுசுறுப்பாக டேபிளை க்ளீன் செய்துவிட்டு, கீழே தினசரி பத்திரிக்கையை போட்டு அதில் இலையைப் போட்டுவிட்டு, சடசடவென அடுத்த அயிட்டங்களை வைக்க வந்துவிட்டான். சுடச்சுட சாதம், போதுமா? என்று கேட்காமல் வைத்துக் கொண்டேயிருந்தார்கள். உடன் ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் குழம்பு, இன்னொரு பாத்திரத்தில் சுடச்சுட மீன் குழம்பு, பின்பு ஒரு வட்டாவில் எரால் குழம்பு, அதுவும் சூடாக. சைடு டிஷ்ஷாக மீன், எரா, ஒரு சிக்கன் என்று ஆர்டர் செய்துவிட்டு, சாப்பிட ஆரம்பித்தோம். குடிசை இடம், கும்பல், அனல் கக்கும் ஃபேன் காற்று, சுடச்சுட சாதம், மற்றும் மற்ற அயிட்டங்கள் இவை எல்லாவற்றையும் மீறி சாப்பாடு அருமை.. அருமை.. அருமை. சிக்கன் கிரேவி மட்டும் கொஞ்சம் சுவை குறை என்று சொல்லலாம். ஆனால் மீன் குழம்பும், எரா கிரேவியும் ம்ஹும்.. சும்மா அட்டகாசம். 
அதே போல சைடு டிஷ் மீன், சாதாரண வீட்டு மசாலாவில் தோய்த்தெடுத்த அளவான பதத்தில் சமைக்கப்பட்டு, சூடாக தரப்படுகிறது. பொன் என்கிறார்கள் எராவை. நிஜமாகவே பொன் நிறத்தில் செய்யப்பட்டு, நல்ல தக்காளி, வெங்காய தொக்கோடு தருகிறார்கள். மூன்று கிரேவிகளைத் தாண்டி, டீசண்டான ரசமும், பின்பு சாதம் போட்டு தயிர் தருகிறார்கள். அதுவும் நம்மூரில் தருவது போல தக்குணூண்டு இல்லை. நல்ல உள்ளங்கை அளவிற்கு ஒரு கரண்டியில் சும்மா ஜில்லென தருகிறார்கள். புளிக்காத தயிராய். அதற்கு மீன் குழம்பையும், எரா குழம்பையும் ஊற்றி அடிக்கும் போது நிஜமாகவே டிவைனின் அர்த்தம் புரியும். 
ஆஜானுபாகுவான உருவத்துடன் ஒருவர் எல்லா டேபிளுக்கும் இதை ஊத்திக்கங்க, அதை ஊத்திக்கங்க, சாப்பாடு நல்லா போட்டுட்டு சாப்பிடுங்க, வெங்காயத்தோட தயிர் புளிச்சிருக்கும், இந்தாங்க இந்த தயிர மேல ஊத்திட்டு சாப்பிடுங்க என்று ஏதோ வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல வரவேற்று விருந்தளித்துக் கொண்டிருந்தவர் தான் அந்த கடையின் மொதலாளி புத்தூர் ஜெயராமன். அவரை கூப்பிட்டு அழைத்து பாராட்டி விட்டு வந்தேன். ஏதோ கிராமத்தில சின்ன கடை நடத்திட்டு வந்திட்டிருக்கேன் சார். நீங்க சாப்பிட்டு நல்லா சந்தோஷமா போனீங்கன்னா அது போதும். என்று சொல்லிவிட்டு அடுத்த கஸ்டமரை கவனிக்கப் போய்விட்டார். உடன் வேலை செய்யும் மற்ற ஆடக்ளும் இதே அளவிற்கு விருந்தோம்பலை தொடர்வது அதிசயமான விஷயம்தான். முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். நாங்கள் சாப்பிட்ட, சாப்பாடு, தயிர், மற்ற சைட் டிஷ் அயிட்டங்கள் எல்லாம் சேர்த்து வெறும் 330 ரூபாய் தான் ஆனது. நிச்சயம் அவ்வழியில் நீங்கள் பயணப்பட நேர்ந்தால் டோண்ட் மிஸ் த புட். இட்ஸ் எ காட்ஸ் கிப்ட்.
கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

Alb said...

vaerthu oru paakkam oothittae irukkum. adha kandukkaama namma saaptukitae irupom.. evening 7 manikulla parotta+chicken kidaikkum.. adhuvum nallaa irukkum,

Anonymous said...

Classic Writing.

a said...

தயிர் ஊற்றி சாப்பிடாமல் யாரும் ஜெயராமன் கடையை விட்டு நகர முடியாது... அன்பு
மிரட்டலுலன் அவரே வந்து பரிமாறுவார்....

ஊரில் இருக்கும் போதெல்லாம் அடிக்கடி விஜயம் செய்வதுண்டு ....

மணிஜி said...

சும்மா வார்த்தைகளில் விவரிக்க முடியாத சுவையும் ,விருந்தோம்பலும்.. அனுபவிக்கனும்!!

Vijay Periasamy said...

படிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கே !!!


இணையத் தமிழன்.
http://www.inaya-tamilan.blogspot.com/

வவ்வால் said...

கேபிள்ஜி,

வல்லம்படுகை, புத்தூர் ஏரியாவில் நிறைய இது போல உணவகங்கள் இருக்கு இவர் கடை கொஞ்சம் பேமஸ்.

அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் இதுக்காகவே அங்கே போய் சரக்கடிச்சுட்டு ,சாப்பிட்டு வருவாங்க, படிக்கிற காலத்துலவே ,அண்ணாமலைலபடிச்ச பிரண்டு பைக்கில கூப்பிட்டு போய் இருக்கான் , சாப்பிடுறதுக்காக இவ்ளவு தூரம் போகணுமானு புலம்பிக்கிட்டே போய் வந்தேன்.

அப்போ இதை விட பயங்கர சீப்பா இருந்துச்சு (98-99) என நினைக்கிறேன்) ஆளுக்கு 50 ரூ போல தான் ஆச்சு.

ILA (a) இளா said...

லேபிலில் மாவட்ட வாரியாகவோ, ஊர் வாரியாகவோ போட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும். இப்ப ஊருக்கு வரேன், ஈரோட்டு சாப்பாட்டுக் கடையைப் பத்தி எப்படி தேடுவது என யோசிக்கிறேன். ஒரு லேபில்தானே பாஸூ?

(கேட்டால் கிடைக்கும்)

அருள் said...

உங்களது பதிவு ஏதோ ஒரு இனம் புரியாத மண்வாசனையை ஏற்படுத்துகிறது.

சிதம்பரம் எனது சொந்த ஊர். சிதம்பரத்தில் இருந்தவரை அங்கு சென்று சாப்பிட்டது உண்டு. சென்னை வாசியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. சென்னையால் இழந்தபோனவற்றில் "புத்தூர் ஜெயராமன் கடை" கடையையும் சொல்லலாம்.

அசைவ உணவுக்கு "புத்தூர் ஜெயராமன் கடை", இட்லி, தோசை மட்டுமே கிடைக்கும் சிதம்பரம் "வாத்தியார் கடை", புரோட்டாவுக்கென்றே உள்ள "மூர்த்தி கபே" - என்று சிதம்பரம் பகுதியின் தனிச்சிறப்புகள் பலவுண்டு. இத்தனைக்கும் சிதம்பரம் வாசிகள் சாப்பாட்டு ராமன்கள் என்றும் சொல்ல முடியாது.

இவ்வளவு பெரிய சென்னையில் சிதம்பரம் போல "சிறப்பான" உணவகங்கள் இல்லையே என்று நான் வருந்தியதுண்டு.

இப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - வட இந்திய மற்றும் ஆப்பிரிக்க மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. அதுபோல உணவுக் கலாச்சாரமும் கூட மாறிவருவதாகச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் பகுதியின் சிறப்பான உணவகங்கள் இனி எனக்கு நினைவில் மட்டுமே இருக்கும் போலிருக்கிறது!

saravana karthikeyan said...

இப்பத்தான் தெரியுது... அண்ணன் ஏன் இவ்வளவு "ஒல்லியா" இருக்கீங்கன்னு...

Unknown said...

FLSmidth Inviting Diploma Mechanical Engineers:

For details please visit:
http://virudhupatti.blogspot.in/2012/06/flsmidth-inviting-diploma-mechanical.html

Unknown said...

நான் புத்தூருக்கு அருகில் உள்ள ஊர்காரன் என்றாலும் எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே ஊருக்கு செல்வதால் அங்கு சாப்பிட்ட அனுபவம் இல்லை.. ஆனால் ஒரு வட இந்திய வங்கி மேலாளர் ஆய்வுக்காக விருது நகர் வந்தவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது என் சொந்த ஊரைப்பற்றி கேட்டு விட்டு அந்த கடையை பற்றி மட்டுமே 20 நிமிடம் புகழ்ந்தார்.. நாடு முழுவதும் பயனம் செய்திருக்கும் அவர் உண்ட தென் இந்திய அசைவ உணவுகளில் இந்த உணவகத்தின் உனவுதான் மிகச்சிறந்தது என்று ஆங்கிலத்திலேயே சொன்னார்.. பெருமையாக இருந்தது.. சிதம்பரம் மூர்த்தி கபே பரோட்டாவும் பட்டர் சிக்கனும் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது... வாய்ப்பு கிடைக்கையில் அதனையும் சுவைத்துப் பாருங்கள்>