Thottal Thodarum

Jun 9, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை

எழுபதுகளில் ஆரம்பிக்கிறது கதை. மில் ஓனர் தன் பார்ட்னரிடம் தானும் பணம் போட்டுத்தான் இந்த மில்லை ஆரம்பித்திருப்பதாகவும், தன்னிடம் கேட்காமல் மற்ற டைரக்டர்களே முடிவெடுப்பது சரியல்லை என்று வாதாடுகிறார். அதற்கு பார்ட்னரோ, வெறும் பணம் மட்டுமிருந்தால் போதாது, ஒரு மில்லை நடத்த பல தரப்பட்ட திறமைகள் வேண்டும். அது உங்களிடம் இல்லை. வேண்டுமானால் சொல்லுங்க உங்கள் பணத்தை திரும்பத் தந்துவிடுகிறோம் என்று சொல்ல, கோபத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன் மில்லை வெளிநாட்டில் வாழும் மகன் வந்து நடத்த வேண்டும் என்கிற ஆசையை உயிலாய் வெளிப்படுத்தி தன்னையும், தன் காரையும் சேர்த்து வைத்து எரித்துக் கொண்டு மாய்கிறார். இப்படி மில் முதலாளியில் ஆரம்பித்து, ஒவ்வொரு தொழிலாளிகளின் வாழ்வாதாரம், அந்த ஆதாரம் கொடுக்கும் நல்லது, கெட்டதுகள், ஜாதி வெறி,  கம்யூனிச பாலிடிக்ஸ், என ஒரு மில் சார்ந்த வாழ்க்கையை கதையாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்


எடுத்த எடுப்பிலேயே கதையை ஆரம்பித்துவிட்டதாலும், அடுத்த சில காட்சிகளிலேயே கதையின் நாயகி, நாயகனுக்கிடையே உள்ள காதலை வெளிப்படுத்திவிட்டதாலும், லவ் ட்ராக்குக்காக அசட்டுப்பிசட்டென்ற காட்சிகள் இல்லாமல் இருப்பது இதம். அதே போல ஒரு பாடல் காட்சியின் இடையில் நாயகியின் அக்காவின் காதலையும் சொல்லி, அவள் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதும் படு சுறுசுறுப்பு. ஊர், மானம், ஜாதி தான் முக்கியம் என்று பெருமித் தள்ளும் அம்மா, அவளுடய தம்பி, இவர்களிடையே தங்கள் காதலும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை வைத்துக் கொண்டு அலையும் காதல் ஒரு புறம்.  இன்னொரு புறம் திருமணம் செய்த அக்காவை வீட்டிற்கு அழைத்து பெற்ற தாயே செய்யும் சதி ஒரு புறம் நமக்கு வெளிப்படும் போது லேசாய் முதுகுத்தண்டில் சில்லிடத்தான் செய்கிறது.
கதாநாயகன் ஹேமச்சந்திரனுக்கு பெரிதாய் வேலையேதுமில்லை.  நாயகி நந்தனா ஓகே. ஆங்காங்கே வெளிப்படுத்தும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கள் இம்பரசிவ்.சின்னச் சின்னதாய் நிறைய கேரக்டர்கள் படம் முழுக்க இருக்கிறார்கள். முக்கியமாய் ஸ்டைல் காட்டிக் கொண்டு என்பதுகளின் ஹீரோ ட்ரெஸில் வரும் சண்முகராஜன். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், சீக்கிரம் வந்து லேட்டாய் பஞ்ச்சாவது எப்படி என்று தெரியாமல் இருக்கும் பெண் தொழிலாளி. இந்த மில் சம்பளத்தை மட்டுமே வைத்து தன் குடும்பத்தை, வியாதியில் இருக்கும் அப்பாவை காப்பாற்ற போராடும் பெண். கம்யூனிசஸத்தில் ஈடுபாடுடைய தொழிலாளி அஜயன் பாலா, தொழிலை அதன் லாப விகிதாசாரங்களில் பார்க்காமல் மில்லை நடத்தி நட்டமடையும் மில் ஓனர், என்று பல சின்னச் சின்ன கேரக்டர்கள் படம் முழுக்க, வியாபித்திருக்கிறார்கள். 

வைரமுத்து, ரகுநந்தன் காம்பினேஷனில் ஆலைக்காரியும், தாமரையின் “உன் கண்கள் கண்ணாடியும்’ இதம். ரெட் ஒன் ஒளிப்பதிவு ஆங்காங்கே சில காட்சிகளில் கிரேடிங்கின் காரணமாகவோ, அல்லது எக்ஸ்போஷர் காரணமாகவோ இரவுக் காட்சிகளில் சில இடங்களில் க்ரெயின் அடிக்கிறது. மற்றபடி கதைக்கு தேவையான ஒளிப்பதிவு.

எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர் தனபால் பத்மநாபன். முதல் பட இயக்குனராய் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.  முக்கியமாய் கதை களன், தயாரிப்பு, மார்கெட்டிங் என்று முனைந்து செயல் பட்டிருக்கிறார். டெக்னிக்கலாய் பார்த்தால் ஒரு சுவாரஸயமான பின்னல்கள் உடைய கதைக் களனை, கேரக்டர்களை ஒர் இணைப்புக்குள் கொண்டு வராமல் தனித்தனியே விட்டிருப்பதால் நம்மால் ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. இரு நூறு நாளுக்கு மேல் மில் போராட்டம் நடக்கும் நேரத்தில் மில்லை மட்டுமே நம்பியிருக்கும் ஆட்களின் வாழ்வாதாரம், அவர்களின் ப்ரச்சனைகள் எல்லாம் அழுத்தமாய் காட்டப்படவேயில்லை. ஆரம்பத்தில் ஒரு நேர்க்கோடாய் ஆரம்பிக்கும் திரைக்கதை, ஒரு கட்டத்திற்கு பிறகு ஹேமநாத், நந்தனாவின் காதல் கதையா?. அல்லது அவளது அம்மாவின் ஜாதி வெறியா? மில் ப்ரச்சனையா? மில்லை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் கதையா? என்பது இலக்கில்லாமல் போய்விடுவது தான் மைனஸ்.
பாஸிட்டிவான விஷயங்கள் என்றால் அந்த இடைவேளை ப்ரேக். அதன் பிறகு மில் போராட்டம் வெடிக்க காரணமான விஷயங்கள்.திடீரென அஜயன்பாலா கேரக்டர் மூலம் போர்க் கொடி தூக்கி, அவர் புதிய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி தலைவராவது. அதற்கு வங்காளத்திலிருந்து ஒரு தமிழ் தெரியாத தலைவரை வைத்து துவங்குவது. லோக்கல் கம்யூனிஸ்ட் தலைவரின் ஆட்டிட்டியூட். இந்த போராட்டம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று புரிந்தும் தேவையில்லாமல் பிடிக்கும் வீராப்பூ? ஒரு கம்யூனிஸ்டை நிதர்சன வாழ்க்கை துறத்திக் கொண்டு சென்ற நிலையை அஜயன் பாலா கேரக்டர் மூலம் வெளிப்படுத்திய தைரியம். காலத்தின் கட்டாயமாய் வேறு வழியில்லாமல் போராட்டம் வேலைக்காகாது என்று பல வருடங்களுக்கு அப்புறம் புரிந்து கொண்டு பேசும் தலைவரின் நிதர்சன வசனம் என்று நிறைய இடங்களில் பளிச்.. பளிச்சென நெத்தியடி அடித்திருக்கிறார் இயக்குனர். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் ஒரு வித்யாசமான படத்தை தமிழுக்கு தந்திருக்க முடியும்.
கேபிள் சங்கர்


Post a Comment

9 comments:

KUTTI said...

me the first.

good review ji...

Mano

Cable சங்கர் said...

nandri..mano..

Sathish said...

பொன்மாலை பொழுது - கார்கியின் அசத்தல் வரிகளில் பாடல்கள் !!


http://sathivenkat.blogspot.in/2012/06/facebook-1000-likes.html

DR said...

நேற்று தான் படம் பார்த்தேன், படம் ரொம்ப மெதுவா போகுது. மத்தபடி படம் ஒரு ஆவணப்படம் போலத் தான் செல்கின்றது...

Unknown said...

//அசட்டுப்பிசட்டென்ற காட்சிகள்//

அசட்டு பிசட்டா? எங்க இருந்துதான் வார்த்தைங்கள பிடிக்கறாரோ மனுஷன்..

Unknown said...

போட்டோ சைஸை கொஞ்சம் சிறுசா போடுங்க சாமியோ..

Unknown said...

// இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால்//

அந்த ‘மெனக்கட்டு’க்கு ஒரு சப்ஸ்டிட்யூட் வார்த்தையை மெனக்கெட்டு கண்டுபிடிக்குமாறு உங்கள் வலது கால் சுண்டுவிரலை இழுத்துப்பிடித்து கேட்டுக்கொள்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

படம் நல்லாயில்லையா... அப்ப பாக்கவேண்டாங்கிறீங்க.

ananthu said...

Movie started on fifties ...