Thottal Thodarum

Jun 28, 2012

பணியாரம்


டேய் இனிமே நான் உனக்கு போன் பண்ணி உயிரை எடுக்க மாட்டேன். ஏன்னா நானே என் உயிரை எடுத்துக்க போறேன். ஓகே அமுத்திடறேன்என்ற குழறலான துரையின் குரலைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. இவரோட அழும்பு தாங்கமுடியலையே என்று நினைத்துக் கொண்டு வேலையை தொடர்ந்தேன்.  துரை ஒரு ஞானக்கிறுக்கன். தமிழ் இலக்கியத்தில் மூழ்கி எழுந்தவர். பத்திரிக்கையாளர். எழுத்தாளர், கவிஞர், சினிமா பாடலாசிரியர்  என்று பன்முகம் கொண்டவராய் இருந்தாலும் பெரும்பாலானவர்களால் குடிகாரன் என்று அறியப்பட்டவர். அவர் குடிகாரன் ஆனதற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், அவர் என்றைக்குமே அதற்கான காரணத்தை சொன்னதில்லை. தனுஷைப் போன்ற உடலமைப்பும் ஒரு கையால் தூக்கிவிட முடியுமென எண்ணக்கூடியவராய் இருப்பார். ஆனால் தண்ணியடித்துவிட்டால் அவ்வளவுதான். யானை வெய்டாகிவிடுவார். சாதாரண சமயத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தால் விஷயங்களாய் கொட்டும். அவ்வளவு ஞானஸ்தன். நான் எழுதிய கட்டுரையோ, கதையையோ முகஸ்துதியில்லாமல் காரி துப்பியோ, தலையில் வைத்து கொண்டாடவோ தவறாதவர். கி.வா.ஜாவிலிருந்து நேற்று எழுத வந்தவர் வரை படித்துவிட்டு பேசுபவர். சட்டென ஒரு ட்யூனுக்கு  அற்புதமான சந்தத்தோடு கவிதையாய் பாட்டெழுதுபவர்.  


அவரை கேள்விக் கேட்க அவருக்கென குடும்பமில்லையா? என்று கேட்டால் இருக்கிறது ஆனால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நல்ல கார்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கும் மனைவியும், ஆறுவயது மகனும் உண்டு  ஆனால் இவரோடு இல்லை. காரணம் இவரது குடி. வார நாட்களில் மட்டும் குழந்தையை காட்டிவிட்டு போவார்களாம். அன்றைக்கு மட்டும் அவர்கள் போகும் வரை குடிக்க மாட்டாராம். என் செல்ல புஜ்ஜுக்குட்டிக்காக.. என்பார். இவ்வளவு ஆசை இருக்கிறவரு தினமுமே குடிக்காம இருக்கலாமில்ல? என்று கேட்டால் பதிலிருக்காது. மனைவி  மேல் அபாரக் காதலுண்டு. அடிக்கடி பேசுகையில் பொன்னம்மா.. என் பொன்னம்மா.. என்பார்.

முதல் ரவுண்டு குடிக்கும் போது குடித்தது போலவேயிருக்கமாட்டார். மூணு ரவுண்ட் தாண்டியவுடன் கொஞ்சம் கொச்சையாய் வார்த்தைகள் விழ ஆரம்பிக்கும், அதன் பிறகு போதும் என்றாலும் கேட்காமல் குடிப்பார். கொடுக்கச் சொல்லிக் கெஞ்சுவார். பார்த்தால் நமக்கே பாவமாயிருக்கும். சுருதியில்லாமல் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..”  என்று சத்தமாய் பாடுவார். சத்தமாய் என்றால் அவரின் முழூ உடல் பலமும் தொண்டையில் என்பது போல ச..த்..த..மாய். 

வ்வளவையும் மீறி அவரின் மேல் மரியாதைக் காட்டுவார்கள் எல்லோரும் அது அவரின் திறமைக்காக. ஒரு  முறை பிரபல எழுத்தாளர் ஒருவருக்கு போனைப் போட்டு... ‘உனக்கு மே தின வாழ்த்துக்கள்என்றார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சரி என்று வாழ்த்தை ஏற்றுக் கொண்டு விட்டு “எனக்கு ஏன் சொல்றீங்க?’ என்று கேட்டிருக்கிறார். ‘நீ தானே இருபத்திநாலு மணிநேரத்தில இருபது மணி நேரம் எழுத்துக்காகவே உழைக்கிறவன்என்றிருக்கிறார். வேறு யாராவது அவரின் இப்படி பேசியிருந்தால் உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார்.. ஆனால் துரை என்பதால் சகித்துக் கொண்டு போய்விடுவார்கள்.

சாகப் போகிறேன் என்று போன் செயத்தை பற்றி நான் வேண்டுமானால் சீரியசாய் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் போன் செய்த மற்ற நபர்களுக்க் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து எனக்கு போன்கள். “உடனே போய் பார்த்துடுங்க

“அட அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க.. சும்மா குடிச்சிட்டு பேசுவார்..

“நீங்க தான் அவர் வீட்டுக்கு பக்கத்தில இருக்கீங்க.. தயவு செய்து என்னான்னு பாத்துட்டு வந்திருங்க

“வெளிநாட்டுல இருந்துட்டு அவர் இப்படி பேசுறதை கேட்டா உடம்பெல்லாம் பதைக்குதுங்க.. ப்ளீஸ் கொஞ்சம் எனக்காக் பாத்துட்டு வந்திருங்க.என்று தொடர் கால்கள் வர, வேறு வழியில்லாமல் கிளம்பினேன். இவர்களின் பதைப்பு லேசாய் எனக்கும் ஒட்டிக் கொண்டது. ஒரு வேளை தினம் இப்படி பேசிப் பேசி எதுவும் செய்ய மாட்டான் என்று நினைத்தவன் ஒரு நாள் தொங்கிவிடுவது போல ஏதாவது நடந்துவிடுமோ.. என்ற நினைப்பு தொடங்கிய விநாடியிலிருந்து வியர்க்க ஆரம்பித்துவிட்ட்து. போனை எடுத்து அவரை அழைத்தேன்.

“ஹலோ?என்று பெரிய மூச்சுடன் குழறலாய் பேசினார்.

“துரைண்ணே.. என்ன கலாட்டா பண்றீங்க..? எங்க இருக்கீங்க இப்ப கடையிலயா?

“அட.. மருந்தை குடிச்சிப்புட்டேன்.. பூச்சி மருந்தை சரக்குல கலந்து குடிச்சிப்புட்டேன். நான் போறேன் பை..என்று போனை கட் செய்துவிட, ஒன்றும் புரியவில்லை.. இதற்கு முன்பு இம்மாதிரியான நிகழ்வுகளை சந்தித்த்தில்லை. அதனால் மேலும் பதட்டம் அதிகமாய் இருந்தது. என் நண்பர் ஒருவர் டாக்டர் அவருக்கு போன் செய்தேன்.

“டாக்டர்.. நான் சங்கர் பேசுறேன். என் ப்ரெண்டு ஒருத்தர் மருந்து சாப்டுட்டேன்னு போன் செஞ்சிட்டு கட் பண்ணீட்டாரு.. அவரு வீட்டுக்குத்தான் போயிட்டுருக்கேன். இப்ப என்ன பண்றது?

“ஒண்ணும் டென்ஷன் ஆவாதீங்க..உங்களுக்கு பி.பி இருக்கு. நேரே போங்க.. பினாயில் மருந்து எது குடிச்சிருந்தாலும் வாந்தியெடுக்க ட்ரை பண்ணியிருப்பாங்க.. முகத்தை கிட்ட்த்தில கொண்டு போய் மோந்து பாருங்க.. நிச்சயம் வாடை வரும். ஓகே.. உடனே யோசிக்காம டாக்ஸிலயோ, அல்லது உங்க கார்லயோ தூக்கி போட்டுட்டு இங்க ஜி.எச்சுக்கு கொண்டு வந்திருங்க.. மத்ததை நான் பாத்துக்கறேன்.. டோண்ட் ஒர்ரி உங்களால ஏதும் முடியலைன்னா பக்கத்தில இருக்கிற 24 மணி நேர ஆஸ்பிட்டல் அட்டெண்டர் யாராவது இருப்பாங்க..அவங்களை கூட்டிக்கங்க..என்று போனை வைத்துவிட, எனக்கு கொஞ்சம் தெம்பாய் இருந்த்து. ஆஸ்பிட்டல் ரெடி.. வெகு வேகமாய் காரை விரட்டினேன். டாக்டர் உங்களுக்கும் பி.பி இருக்கு என்று சொன்னது நினைவுக்கு வந்த்து.  வீட்டின் வாசலில் போய் நின்றேன். படபடப்பு குறையவில்லை. மட்ட மதிய வேளையில் ஏசி காரிலிருந்து வியர்த்து, தொப்பலாய் நினைந்த்து போல் வெளியே வருபவனை தெருவில் இருந்த்வர்கள் ஏற இறங்க பார்த்தார்கள். ஒரு பக்கம் முழுவதும் கம்பிக் கிராதியாய் இருக்க, இன்னொரு பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்த்து. கம்பி வழியாய் பார்த்தால் துரை அடித்துப் போட்ட பல்லி போல குப்புற விழுந்து கிடந்தார். முகம் என் பக்கமாய் இல்லாமல் எதிர்பக்கமாய் இருந்த்தால் எதுவும் தெரியவில்லை. உடம்பில் வேட்டி எல்லாம் விலகி கிட்ட்த்தட்ட நிர்வாணமாயிருந்தார். உடலில் மூச்சிருப்பதாய் உடல் அசைவில் தெரியவில்லை. கதவை தட்டிப் பார்த்தேன்.. எழுந்திருக்கவில்லை. போன் அடித்தேன். அப்போதும் ஏதும் நகர்வில்லை. என் பதட்டம் இன்னும் அதிகமாக கதவை ஓங்கித்தட்டினேன். மேல் வீட்டிலிருந்து “அந்தாள் இப்பத்தான் சத்தம் போட்டு ஓய்ஞ்சிருக்கான்.. நீங்க வேற ஏங்க.. கிளம்புங்க.. எதுனா வேணும்னா அவங்கம்மா நாளைக்கு வருவாங்க வந்து பாருங்க என்றார்கள்.

அவர்களிடம் துரை போன் செய்த்தைப் பற்றிச் சொல்லி அவர் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச சகிப்புத்தன்மையையும் கெடுத்துவிட எண்ணமில்லாமல் எதுவும் பேசாமல் நின்றேன். வேறு வழியில்லை என்று க்ரில் கதவு வழியாய் கையை விட்டு உட்பக்க தாழ்ப்பாளை மிகவும் பிரயத்தனப்பட்டு நீக்கினேன். கதவு திறந்தது.

உள்ளே போனதும் அவரின் வேட்டியை சரி செய்துவிட்டு தூக்கினேன் துவண்டார். டாக்டர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து முகத்தின் அருகில் முகர்ந்தேன். புளீச்சென சரக்கு வாடை ஏறியது. வேறு வாடை இருப்பதாய் தெரியவில்லை. தூக்க முடியாமல் தூக்கிய போது கொடுத்த அழுத்த்தில் “ம்என்ற முனகல் அவரிடமிருந்து எழ, சந்தோஷமாகி அவரை அறையில் உள்ள கட்டிலில் படுக்க வைத்தேன். அறையெங்கும் புத்தகங்கள், மனுஷயபுத்திரன், சி.சு.செல்லப்பா, சுஜாதா, பாலகுமாரன், நீட்ஷே, அசடன் என்று வகை தொகையில்லாமல் புத்தகங்கள். தரையில் ஓரு ஓரத்தில் காய்ந்த இட்டிலியில் எறும்பு சேர்ந்திருந்த்து. பாயிற்கு அருகில் ஒரு சரக்கு பாட்டிலும், அதனருகில் ஒரு பாடி ஸ்ப்ரேவும் இருந்த்து. என்னதான் மருந்து குடித்திருந்தாலும் மருந்து பாட்டிலை ஒளித்து வைக்கும் அளவிற்கு அவர்களின் மனநிலை இருக்காது என்று படித்திருக்கிறேன். மல்லாக்க் போட்ட்தில் அவரின் மூச்சு இழைவதை ஒட்டியிருந்த வயிறு காட்டிக் கொடுக்க, சந்தோஷமானேன். பார்ட்டி ஓவராய் குடித்து மட்டையாகியிருக்கிறார். சமையல் ரூமிலிருந்து குட்த்திலிருந்த அரை க்ளாஸ் தண்ணீரை எடுத்து அவரின் முகத்தில் அடித்தேன். ஹைஸ்பீடில் கண் முழித்து “ஹை.. நீ எப்ப வந்தே? என்றார். எழ முயற்சித்து முடியாமல் மீண்டும் கட்டிலிலேயே சரிந்தார்.

“என்னண்ணே.. இப்படி போன் பண்ணி எல்லாரையும் பயமுறுத்துறீங்க? “
“இல்லடா நிஜமாவே நான் மருந்து சாப்ட்டேன். அதோ அந்த மருந்துதான் என்று பாடிஸ்ப்ரேவை காட்ட, நான் அதை எடுத்து அடித்துப் பார்த்தேன். வெறும் காத்துதான் வந்தது. காலி பாட்டில்.

பொன்னம்மா நேத்து வந்தா.. ஒரே சண்டை. பாவம் அவளுக்கு என்னால ரொம்ப கஷ்டம். அதான் குவாட்டர்ல மருந்த புஸ்ஸுபுஸ்சுன்னு அடிச்சிட்டு ஒரே கல்புல முடிச்சிட்டேன். இங்கே இரு.. இன்னும் பத்து நிமிஷத்தில செத்துருவேன்.. பொன்னம்மா கிட்ட சொல்லிரு.என்று குழறினார். எனக்கு கோபமாய் வந்தாலும் ஒரு பக்கம் சிரிப்பும் வந்த்து. 

“அண்ணே.. நீங்க குடிச்சது சரக்குத்தான் வெறும் சரக்கு அது காலி டப்பாஎன்றேன். ஆனால் அதற்குள் சட்டென கட்டிலின் அருகேயிருந்த இன்னொரு அரை பாட்டில் சரக்கை எடுத்து ஒரே மடக்கில் அடித்துவிட்டு அப்படியே கட்டிலில் சரிந்தார். “டேய்.. ரொம்ப பசிக்குது ஏதாவது கடைசியா வாங்கித்தாடா..என்றார். பாவமாயிருந்த்து.

வீட்டை வெளியில் பூட்டி விட்டு மெயின் ரோட்டுக்கு வந்து அங்கிருந்த வசந்த பவனின் காரப் பணியாரம் சூடாய் போட்டுக் கொண்டிருக்க, ஒரு ஆறு வாங்கி பார்சல் செய்து கொண்டு வீட்டிற்கு போய், அவரை எழுப்பி, இரண்டு பணியாரத்தை ஊட்டிவிட்டேன். குழந்தையாய் சாப்பிட்டார். மீதியை எடுத்து ஒரு ப்ளேட்டில் போட்டு அதன் மேல் இன்னொரு ப்ளேட்டை வைத்து மூடிவிட்டு அவரையே பார்த்தேன். ஆல்மோஸ்ட் மட்டையாகியிருந்தார். டாக்டருக்கு போன் செய்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வீட்டின் கதவை முன் போல வெளியே வந்து உட்பக்கமாய் கையைவிட்டு பூட்டிவிட்டு கிளம்பினேன். ஒரு வேளை இப்படியெல்லாம் இவரை யாராவது ஒருவர் கவனிப்பதினால் தான் இப்படியிருக்கிறாரோ என்று அன்றிரவு முழுக்க தோன்றியது. காலையில் எழுந்த்தும் என் போனைப் பார்த்தால் மூன்று மிஸ்ட் கால்கள். எல்லாமே துரையிடமிருந்து. திரும்ப அழைத்தேன். “டேய்.. நேத்து நீ வ்ந்திருந்தையாடா.. வந்தாப் போல ஞாபகம். அப்புறம் இன்னைக்கு உன் கதையை படிச்சேன். சூப்பர்.. இம்ப்ரூவ் ஆயிட்டு வர்றே..  ம்.. அப்புறம் இன்னொரு விஷயம் அயிரம்தான் என் பொன்னம்மா என்னோட சண்டை போட்டாலும் நான் சரக்கடிச்சி மட்டையானாலும் எனக்கு பிடிச்ச பணியாரத்த நேத்து வாங்கி வச்சிட்டு போயிருக்காஎன்று சிரித்தார். அந்த சிரிப்பில் நிறைந்த சந்தோஷமிருந்தது. நான் ஏதும் சொல்லவில்லை.
கேபிள் சங்கர்

Post a Comment

16 comments:

Suthershan said...

நிதர்சனம்??

குரங்குபெடல் said...

"தூ.. இவனெல்லாம் மனுஷனா? "



இது திங்கள் சொன்னது . . .

ஆனாலும் . . .

வியாழன் உங்களுக்கு ஒரு கதை கிடைச்சிடுச்சி

அந்த மனுஷனால . .

Thanks

புதுகை.அப்துல்லா said...

தூ.. இவனெல்லாம் மனுஷனா? "



இது திங்கள் சொன்னது . . .

ஆனாலும் . . .

வியாழன் உங்களுக்கு ஒரு கதை கிடைச்சிடுச்சி

அந்த மனுஷனால

//

@அண்ணன் குரங்குபெடல் -

இல்லை. கேபிள் துப்பிய நபர் வேறு. இவர் வேறு. இவர் உண்மையில் எங்கள் அன்பு நண்பர். பெரும் அறிவாளி. கிட்டத்தட்ட ஞானி. குடி ஒருவனை எப்படி சீரழிக்கும் என்பதற்கு எங்கள் கண் முன் இவரே உதாரணம் :(

rajasundararajan said...

//தனுஷைப் போன்ற உடலமைப்பும்// காலத்தால் அழியப் போற இதுமாதிரி எக்ஸ்ப்ரெஸ்ஸன்ஸ் எல்லாம் காலத்தை வெல்லக் கூடிய கதையில வரக்கூடாது, ஷங்கர்.

மாற்றிவிடுங்கள் அல்லது இந்த என் கருத்தூட்டத்தை உங்கள் நாயகர் உங்கள் கதையைப்பற்றிச் சொல்கிற கருத்தோடு இணைத்துவிடுங்கள்!

rajamelaiyur said...

உண்மை சம்பவம் போல இருக்கு ?

rajamelaiyur said...

படித்து பாருங்கள்

நான் அழகா பொறந்தது என் தப்பா ?

R. Jagannathan said...

இது உண்மை கதையாக இருக்கும் பக்‌ஷத்தில், இந்த நட்பை உடனடியாக்ச் கட் பன்ணி விடுங்கள். என்ன அறிவு இருந்தாலும், குடியிடம் அடிமை ஆகும் பேர்வழிகளுக்கு இரக்கம் தேவையே இல்லை. சாகட்டும். - ஜெ.

ரமேஷ் வைத்யா said...

படிப்பவருக்குப் பதைப்பை ஏற்றிவிடும்படியான எழுத்து நடை. அந்த துரை பாவம் என்று தோன்றவைக்கும் அதே நேரத்தில், அன்பு கொண்ட நண்பர்களை இப்படிப் பதறவைக்க அவருக்கென்ன உரிமை என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. கடைசி வரிகளில் ஒரு குணசித்திரம் முழுமையடைகிறது. இந்தக் கதை உண்மைச் சம்பவத்திலிருந்து எழுதப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் இரண்டு விஷயங்கள். 1. உண்மைச் சம்பவம் அருமையாக புனைவாக மாறியிருக்கிறது. 2. ஜெகன்னாதன் சொல்வது போல இது மாதிரி ஆட்களை கட் செய்யாவிட்டால் கூட பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது எனப் படுகிறது.

CS. Mohan Kumar said...

இதுவரை நான் வாசித்த உங்கள் கதைகளில் எனக்கு பிடித்த கதை இது தான். அருமை.

கதைக்கு ரமேஷ் வைத்யா பின்னூட்டம் கூடுதல் அழகு

CS. Mohan Kumar said...

உங்களிடம் இது மாதிரி நிஜ சம்பவங்கள் நிறையவே இருக்கும். எழுதலாம் கேபிள். செக்ஸ் இல்லாமல் இது மாதிரி நல்ல கதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்

ஸ்ரீ அப்பா said...

நல்ல நடை..நல்ல சொல்வளம்...வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

கேபிள்ஜி ,

ரொம்ப டெம்பிளேட்டான ஒரு கதை, அதுவும் ஒருத்தர் குடிப்பார்னு சொல்லிட்டு அவரு ஞானஸ்தரா, நல்லவரா இருப்பார்னு சொல்றது எல்லாரும் எழுதியாச்சு :-))

ஆனால் ஏதோ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எனும் போது ,கதைனு பார்க்காமல் உங்க அனுபவம்னு ரசிக்கலாம்.

ஹி..ஹி அப்புறம் பாதி பாட்டில் / ஹால்ஃப் சரக்கு எப்படி ஒரே மடக்கில் குடிப்பது என்று சொல்லிக்கொடுங்க(இருக்கிறது ஒரு வாய் தானே சொல்லாதிங்க)

LeaderPoint said...

ரமேஷ் வைத்யா அண்ணன் பின்னூட்டம் ரொம்ப பிடிச்சிருக்கு!!

shortfilmindia.com said...

@mohan kumar
செக்ஸும் வாழ்க்கையில் சகஜமாய் நடக்கும் விஷயம்தானே? :)

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையானஎழுத்து நடையில் அருமையான கதை! சூப்பர்! இன்று என் பதிவில் நியாயம் ஒருபக்க கதை!

Paleo God said...

@அண்ணன் குரங்குபெடல் -

இல்லை. கேபிள் துப்பிய நபர் வேறு. இவர் வேறு. இவர் உண்மையில் எங்கள் அன்பு நண்பர். பெரும் அறிவாளி. கிட்டத்தட்ட ஞானி. குடி ஒருவனை எப்படி சீரழிக்கும் என்பதற்கு எங்கள் கண் முன் இவரே உதாரணம் :(///

ஆமாம்.:((


இப்படிக்கு
ஜாவர் சீதாராமன்.