Thottal Thodarum

Mar 18, 2014

சாப்பாட்டுக்கடை - ராயப்பாஸ்

கோவையில் பிரபலமாய் விளங்கும் ராயப்பாஸ் இங்கே சென்னையில் ஒர் புதிய கிளை துவங்கி உள்ளனர் என்ற விளம்பரம் பார்த்தேன். கோவைக்கு சென்று வருடங்கள் ஆகிவிட்டதால் அங்கே ராயப்பாஸின் சுவை தெரியாத்தால் சென்னை ப்ராஞ்சுக்கு நானும் என் கதாநாயகனும் வண்டியை விட்டோம். சென்னை திநகரில் சோமசுந்தரம் பார்க் ரோட்டில் இருக்கிறது. டால் வாக்கர் எனும் உடற்பயிற்சி கருவி விற்கும் கடையின் மேலே சாப்பாட்டுக்கடை என்பது நகைச்சுவையாய் இருந்தது. 


வெளியே இருந்த செட்டப்பிற்கும் உள்ளே சென்றதற்கும் பெரிய வித்யாசம் இருந்தது. அற்புதமான இண்ட்டீரியருடன் நல்ல ஆம்பியன்ஸ். ஆனால் அந்த ஆம்பியன்சை பார்க்கும் போதே கை தானாக பர்சை தொட்டு பார்த்தது. தீட்டிருவாங்களோ?. புதிய உணவகம் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. போய் உட்கார்ந்த உடனேயே எங்களை கவனிக்க ரெண்டு மூன்று பேர் வந்து மெனு கார்டை கொடுத்துவிட, திறந்து பார்த்த எங்களுக்கு அதிர்ச்சி.. இன்ப அதிர்ச்சி. இண்டீரியருக்கும் அவர்கள் வைத்த விலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. மெனு கார்டு கொடுத்த சந்தோஷத்தில் சூப்பிலிருந்து ஆரம்பிப்போம் என்று கொங்கு சூப்  ஆர்டர் செய்தோம். ரசம் போன்ற அருமையான சிக்கன் சூப். நன்கு வெந்த சிக்கனுடன் நல்ல காரத்துடன் இருந்தது.  அடுத்ததாய் என்ன என்று யோசித்த போது கொங்கு பரோட்டா என்றார்கள். சரி ஆளுக்கு ஒர் கொங்கு பரோட்டா என்றதும் கரண்டு ஆம்லெட் கணக்காய் ஒர் பரோட்டாவை வைத்தார்கள்.  பார்க்கவே புசு புசுவென இருந்தது. தொட்டுக் கொள்ள சின்னதாய் இரண்டு தூக்கு வாளியில் சிக்கன மற்றும் மட்டன் கிரேவிகள். இரண்டுமே நல்ல தரத்துடன் இருந்தது. வழக்கமாய் பெரும்பாலான செட்டிநாடு ஓட்டல்களில் வழங்கும் மசாலா தூக்கலான கிரேவியில்லை. பரோட்டா போன இடம் தெரியவில்லை. அவ்வளவு சாப்ட் அண்ட் கிரிஸ்பி.

சுவை பிடித்துப் போனதால் இனி ஆர்டர் செய்யும் அயிட்டங்கள் எல்லாமே ஒன்றாய் சொல்லி ஷேர் செய்து கொள்வோமென்று முடிவெடுக்கப்பட்டு, ஒரு செட் கரண்டி ஆம்லெட், அரைச்சு விட்ட மட்டன் குழம்பு, ராயப்பா ஸ்பெஷல் தோசை, கல்தோசை ஒரு செட் ஆர்டர் செய்தோம். கரண்டி ஆம்லெட் கிட்டத்தட்ட கலக்கியின் சுவையோடு திவ்யமாய் இருந்தது. ராயப்பா ஸ்பெஷல் தோசையின் சைஸ் சின்னதாய் இருந்தாலும் மூர்த்தி சூப்பர். முட்டையோடு கலந்தடித்த தோசை. சாப்ட் என்றால் சாப்ட் அம்பூட்டு சாப்ட்.. வாயில் வைத்தால் கரைந்து ஓடுகிறது. 
தேங்காய் மசாலவுடன் சிறு சிறு மட்டன் துண்டுகளோடு, காரம், மசாலா எல்லாமே திகட்டாத அளவிற்கு ஒர் சிறப்பான கலவையோடு இருந்தது அரைத்துவிட்ட மட்டன் குழம்பு. கல் தோசைக்கு செம்ம காம்பினேஷன். கல் தோசையில் நல்லெண்ணெய் மணம் தூக்கலாய் இருந்தது.  குறையென்று பார்த்தால் தோசையில் சைஸைத்தான் சொல்ல வேண்டும். ரொம்ப நாள் கழித்து வீட்டுச் சாப்பாடு போல, பஞ்சாயத்து இல்லாமல் சுவையிலும் சரி, சர்வீசிலும் நிரம்ப திருப்தியாய் சாப்பிட்ட உணவகம் ராயப்பாஸ்..

கேபிள் சங்கர்
டிஸ்கி: பில் வெறும் 562 ரூபாய்தான்.

Post a Comment

2 comments:

indrayavanam.blogspot.com said...

நல்ல சுவை.

கோவை ராஜா said...

கரண்டி ஆம்லெட்??