Thottal Thodarum

Mar 29, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-5

அதெப்படி விளம்பரத்துக்கு செலவு செய்யப்படும் பணம் தயாரிப்பாளருடயதாகும்? அதுதான் பிரபல விநியோகக் கம்பெனியின் பெயரில் விநியோகிக்க கொடுத்தாயிற்றே? என்று கேட்பீர்களானால் நீங்கள் பாவம். நிஜத்தில் இப்படங்களை பெரிய விநியோகக்U கம்பெனிகள் விலை கொடுத்து வாங்குவதில்லை. அதற்கு ஒர் ப்ராசஸ் இருக்கிறது.


பேப்பரில் விளம்பரங்களில் வரும் விநியோகக் கம்பெனியின் பெயரில் வரும் விளம்பரத்தைப் பார்த்ததும் புதிய தயாரிப்பாளர்கள் அனைவரும் அஹா.. அடிச்சாண்டா லக்கு சூப்பரா வித்துட்டாங்க.. என்று தான் நினைப்பார்கள். ஆனால் அது உண்மையில்லை. விநியோகக் கம்பெனிகள் இம்மாதிரி சின்னப்படங்களைப் பார்ப்பார்கள். ஓரளவுக்கு சுமாராய் இருக்கிறது என்று தெரிந்தால் தான் அவர்களின் அடுத்த லெவல் பேச்சே இருக்கும். சரி படம் ஓகே என்றவுடன் அப்பட தயாரிப்பாளருடன் ஒர் ஒப்பந்தத்திற்கு வருவார்கள். அதாவது அப்படத்தின் அத்தனை விற்பனை மற்றும் வியாபார உரிமைகளையும் அவர்கள் மூலமாய் கொடுக்க சம்மதிக்கும் ஒர் ஒப்பந்தத்தை போடுவார்கள். பின் தங்கள் நெட்வொர்க்கில் உள்ள சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். அப்படி நடத்தும் போது யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுடன் பேசி முடிப்பார்கள். பின்பு அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பேசி அவர்கள் வழக்கமாய் விற்கும் நிறுவனத்திற்கு விற்று அதன் தொகையையும் சேர்த்துக் கொள்வார்கள். 

உதாரணத்திற்கு சென்ற வருடம்  வெளியான புதுமுகங்கள் நடித்த  காமெடி படத்தின் பட்ஜெட்டே சுமார் ஒரு கோடிக்குள் தான். தயாரிப்பாளர் தனியாய் நிறைய விநியோகக் கம்பெனிகளை முட்டி மோதி பார்த்தார். சாட்டிலைட் உரிமை சுமார் 40 லட்சம் வரை தருகிறேன் என்று வந்த போது, ரிலீஸுக்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் கேட்டார். நூறு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு Qube, PXD,UFO என அவர்களுக்கு கட்ட வேண்டிய முதல் வார வாடகை மட்டுமே சுமாராய் 9500க்கு மேல் டேக்ஸோடு வரும், அது தவிர, அத்தியேட்டர்களுக்கான வினைல் பேனர், மற்றும் ஏரியாவில் ஒட்ட வேண்டிய போஸ்டர், ஒரு சில தியேட்டர்களின் வாடகை, மீடியேட்டர் கமிஷன் என தோராயமாய் ஒர் தியேட்டருக்கு 15 -20 ஆயிரம் ரூபாய் வரை வருமென சொன்னேன். அப்ப வந்த 40துல இருபது போயிருமா? என்றார்.  இது ரீலீசின் போது ஆகும் செலவு. அதற்கு முன்னால் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் செய்யப்படும் விளம்பரங்கள், பேப்பர், வார இதழ்கள், டிவி, மற்றும், தொலைக்காட்சிகளில் செய்யப்படும் விளம்பரங்கள் என அவரவர் சக்திக்கு ஏற்ப குறைந்த பட்சம் பத்து லட்சம் முதல் இரண்டு கோடி வரை கூட ஆகும் என்றேன். கொஞ்சம் ஜெர்க்காகி நின்றார். 

அவ்வளவு எல்லாம் முடியாது நம்ம படமே பட்ஜெட் படம் இருக்குற நாப்பதுல இருபது போய், இருபதையும் செலவு செஞ்சிட்ட என்ன மிஞ்சும்? என்றார். 

“நல்லா விளம்பரம் பண்ணி, படமும் தியேட்டர்ல நல்லா ஓடிச்சின்னா வர்றது எல்லாம் நமக்குத்தானே? என்றேன். 

“ஓடலைன்னா? என்று திருப்பிக் கேட்டார். 

“ஓடும்ங்கிற நம்பிக்கைத்தானே சார்.. சினிமாவுக்கான முதலீடே?”

“ பத்து ரூபாய்க்கு மேல் செலவு செய்ய முடியாது சார்” என்றார்.

“அப்ப ஓப்பனிங் கிடைக்காம போறதுக்கு வாய்ப்பு அதிகம்”

“என்ன சார்.. இப்படி சொல்றீங்க?”

“ஆமா இன்னைக்கு ஒரு வாரத்துக்கு சுமார் நாலு படம் தமிழ்லேயும், இரண்டு, மற்ற மாநில மொழியும், ஹிந்தி, இங்கிலீஷ்னு பேருக்கு ஒர் படமும் வந்திட்டுத்தானிருக்கு. அப்படியிருக்கிற நிலையில நாம விளம்பரம் கூட பண்ண முடியாத நிலையில இருந்தோம்னா.. ஒப்பனிங்க் இல்லாம தியேட்டர்ல ஷோ கேன்சலாகி, படத்தை லாஸ் பண்ணிருவாங்க. அப்புறம் முதலுக்கே மோசமாயிரும்”  

“அப்ப நாம ஏதாவது கம்பெனி வாக்குற வரைக்கும் காத்திட்டிருக்க வேண்டியதுதான்” என்று சாட்டிலைட்டுக்கு வந்த ஆபரையும் உபயோகித்துக் கொள்ளாமல் எங்கிருந்தாவது ஒர் தேவதூத விநியோக கம்பெனி வராதா? என்று எதிர்பார்த்து,  காத்திருந்து பிரபல கம்பெனியிடம் போய் நின்றார்.

“நீங்க பண்ணாத்தான் நமக்கு வாழ்க்கையே” என்றதும் நிறுவனம் மேற் சொன்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அப்படத்தின் சாட்டிலைட் உரிமம், வெளிநாட்டு சாட்டிலைட் உரிமம் என வரும் காசு எவ்வளவு என்று கணக்கிடப்பட்டு, அத்தொகையிலிருந்து படத்தை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையெங்கும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய பெரிய் ஹோர்டிங்குகள் வைக்கப்பட, தன் கையிலிருந்து மேலே ஒரு பைசாக் கூட போடாமல் விளம்பரம் ஆகி, படம் வெளியாவதை நினைத்து  சந்தோஷப்பட ஆரம்பித்தார் தயாரிப்பாளர்.  

“இவங்களாலத்தான் இந்த மாதிரி செலவு பண்ணி ரிலீஸ் பண்ண முடியும். பார்த்தீங்களா?” என்று சற்றே பெருமையாகவும் சொல்ல ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நம்ம படத்த வச்சி அதுல வர்ற காசுல விளம்பரம் செய்வதைக் கண்டு லேசாய் பெருமியவர்.
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: