Thottal Thodarum

Mar 5, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2

கிட்டத்தட்ட 300 படங்கள் சென்ற வருடம் தயாரிக்கப்பட்டு. சென்ஸார் ஆகி, வெறும் 160 சில்லறை படங்கள் மட்டும் வெளியாகியிருக்கிறது. மீதமிருக்கும் நூற்றிச் சொச்சப் படங்களின் நிலை?. இவையனைத்து சென்சார் செய்யப்பட்டவை. இன்னும் அந்த நிலைக்கு வர முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் படங்கள் நிறையவே இருக்கிறது. தயாரிப்பு நிலை இப்படியிருக்க, சென்ற வருடமாகட்டும், இந்த வருடமாகட்டும் படங்களின் வெற்றி நிலை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் வசூல் ரீதியாய் வெற்றி பெற்ற படம் “கோலி சோடா” மட்டுமே.. மற்ற படங்கள் எல்லாம் பேப்பர் விளம்பரங்களில் மட்டும் மார் தட்டும் வசூல் என்று போட்டு பெருமை பீற்றிக் கொண்டிருக்கிற நிலையில் தான் தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு என்ன காரணமாய் இருக்க மூடியும்?. சினிமாவின் தரம் குறைந்து விட்டதா? இல்லை மக்களிடம் சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டதா? இல்லை சினிமா மீதான ஆர்வமே குறைந்துவிட்டதா? தியேட்டர்களின் விலையேற்றம் ஒரு காரணமா? டிமாண்டை விட சப்ளை அதிகமாகிவிட்டதாலா? என ஆளாளுக்கு மண்டையை ஒடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஏன் இப்படியான நிலைக்கும் தமிழ் சினிமா தள்ளப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் தள்ளி நின்று பார்த்து பேசுவோம்.எப்போதாவது ஒரு முறை வெற்றி பெரும் சின்ன படங்கள்.  டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியால் சினிமாவை வாழ்வாய் கொள்ளாமல் ஹாபியாய் வைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட சினிமாவிற்குள் நுழைந்து குறும்படங்களும், பெரும்படங்களாய் எடுக்க ஆரம்பிக்க, பெரும்பாலான சின்ன படங்களின் தயாரிப்பாளர்களிடம் இயக்குனர்கள். “சார் ஒரு ஒன்னாருபாய்ல படம் பண்ணோம்னா.. சாட்டிலைட் ஒரு ரூபா கிட்ட வித்துரலாம். மிச்ச அம்பதுக்கு எப்.எம்.எஸ். ஆடியோ, ரீமேக் அது இதுன்னு நிறைய சான்ஸ் இருக்கு. தியேட்டர் வர்றது எல்லாம் நமக்கு லாபம் தான் என்று சொல்லி கூட்டி வந்துவிடுகிறார்கள். இவைகளை சொல்லும் ஆட்கள் கொஞ்சமாய் சினிமா தெரிந்தவர்கள் தான். பெரும்பாலனவர்களுக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது.  ஆனால் இம்மாதிரியான கணக்கை வைத்துக் கொண்டு படம் தயாரிக்க வருகிறவர் தான் அதிகம். இதில் நிறைய தயாரிப்பாளர்கள் பாதி படம் தயாராகும் போது பணப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு விழிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். மீறி படத்தை முடித்தால் பேப்பர் விளம்பரம் கூட கொடுக்க காசில்லாமல் சென்சார் ஆகி ஊரில் உள்ள சேட்டிலைட் சேனல்களுக்கு எல்லாம் போட்டுக் காட்டிக் கொண்டு ஏதாவது அதிசயம் நிகழாதா? என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பொட்டிக்குள் சாரி.. ஹார்ட் டிஸ்குக்குள்  அடைந்து கிடக்கும் படங்களின் எண்ணிக்கை சென்ற வருடம் மட்டும் 150 படங்களுக்கு மேல்.

பெரும்பாலான படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ப்ரிவியூ ஷோ போட செலவாகும் 15 ஆயிரம் ரூபாய் கூட ஏற்பாடு செய்ய முடியாமல் நிற்கிறார்கள். இந்த நிலையில் ரிலீஸ் என்றால்? சான்சேயில்லை என்று முழி பிதுங்கி முழிப்பவர்கள் தான் அதிகம். சரி வேறு வழியேயில்லை அட்லீஸ்ட் விநியோகஸ்த்ர்கள் விலைக்கு வாங்குவார்கள் என்று நினைத்து அங்கே புரட்டி, இங்கே புரட்டி ஷோ போட்டால்.. யாரும் வாங்குவதேயில்லை. அதுவும் சின்ன படமென்றால் பார்த்துவிட்டு “ஆர்ட்டிஸ்ட் இல்லைப்பா.. ஒப்பனிங் இருக்காது” என்று சொல்லிவிட்டு போகிறவர்கள் தான் இருக்கிறார்கள். கார்பரேட் நிறுவனங்கள் போல பல பெரிய நிறுவனங்கள் மொத்தமாய் படங்களை வாங்க ஆரம்பித்தவுடன், ஏரிய டிஸ்ட்ரிப்யூட்டர்கள் எல்லோரும் சப் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் நிலைக்கு வந்துவிட்டு, கமிஷனுக்கு படங்களுக்கு டேட் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டும் பெரிய நிறுவனங்களிடமிருந்து எம்.ஜி கொடுத்து வாங்கி படம் போடுகிறார்கள்.  அதையும் மீறி பெரிய நிறுவனங்கள் விற்று விட்டதாக கதைவிடும் பெரும்பாலான சின்ன படங்களின் தயாரிப்பாளர்கள். பிற்காலத்தில் படத்தையும் கொடுத்து, எல்லா ரைட்சையும் எழுதிக் கொடுத்து வெறும் கணக்கு பேப்பரை மட்டுமே வாங்கிக் கொண்டுப் போகும் நிலையும் நடந்து கொண்டுதானிருக்கிறது. அதையும் மீறி பெயர் தெரிந்த நிறுவனங்களிடம் படத்தை கொடுத்து வெளியிட சொல்லுவது ஏன்?. என்ன டெர்ம்ஸில் படங்கள் வெளியிடப்படுகின்றன?

(தொடரும்)
கேபிள் சங்கர்


Post a Comment

4 comments:

Unknown said...

தொட்டால் தொடரும் - நல்ல மனதுடையவர்கள் தொட்டால் துலங்கும்... All the BEST and wish you a great grand success. DONT WORRY.

Unknown said...

Don't worry.....thumbs up....

Unknown said...

Don't worry.....cheers ....

kaipriyan said...

நாசமா போகட்டும். சினிமா சீரழித்தது போதும்.