Thottal Thodarum

Mar 23, 2014

நடுநிசிக் கதைகள் -7

நடுநிசிக் கதைகள் -7

வடபழனி சிக்னல் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வழக்கம் போல போலீஸ் டிடி செக்கிங். பத்து மணி வாக்கில் முதல் கஸ்டமரை பிடிக்க படையோடு காத்திருந்தார்கள். முதல் களபலியாய் ஒர் டிவிஎஸ் 50க்காரர் வந்து மாட்ட, அவரும் அவரது வண்டியும் பார்க்கவே பாவமாய் இருப்பதாகவும், அவரிடம் ஏதும் தேறாது என்று ப்ரீத் அனலைசர் வைத்திருந்த சார்ஜெண்ட் சொன்னதால் உடனடியாய் விடப்பட்டார். இதற்குள் இரண்டு மூன்று பேர் மாட்ட, சார்ஜெண்டை தாண்டிக் கொண்டு போய் நிறுத்தி, தனியாய் கட்டிங் வாங்கிக் கொண்டு, அனுப்பிக் கொண்டிருந்தனர் சக போலீஸார்கள். கொஞ்ச நேரம் கவனித்துப் பார்த்தால் அவர்களின் டார்கெட் கார் தான் என தெரிந்தது.  அப்போது ஒர் குவாலிஸ் வர, வண்டியை மறித்த போலீஸ்காரர் கதவை திறக்கச் சொன்னார். 


”சார் குடிச்சிருக்கீங்களா?”

அவர் காரில் உட்கார்ந்தபடியே இல்லையென தலையாட்ட, வழக்கம் போல் போலீஸ்காரர் கிட்ட போய்  “எங்கிருந்து வர்றீங்க?” என்றார். அவர் ஏதோ பதில் சொல்ல, அஹா கிளி சிக்கிருச்சு என முகர்ந்து, சார்.. என சார்ஜெண்டை அழைத்தார். சார்ஜெண்டும் பரபரப்பாய் போய் ப்ரீத் அனலைசரை வாயில் வைத்து ஊதச் சொல்ல, அது 0 காட்டியது. 

“சார்.. வாயிலேர்ந்து ஊதணும். உறிஞ்சக்கூடாது.” என்று சொல்ல, மீண்டும் வாயில் வைக்க முயன்ற போது “சார்.. வேற ஸ்ட்ரா கொடுங்க சார்” என்றார். மீண்டும் ஒர் ஸ்ட்ரா பொருத்தப்பட்டு, வாயில் வைத்து அவர் ஊதினாரா இல்லையா? என்று பார்த்தால் புரியாத வண்ணம், நாயனக்காரர் ஒத்து ஊதுவது போல வாயை சப்பையாய் வைத்துக் கொண்டு, வாயின் உட்புறம் காற்றை அடக்கியிருந்தால் உப்பியிருக்கும் படியாய் இல்லாமல் சப்பட்டையாய் வைத்து ஊதினார். மீண்டும் 0. கடுப்பான சார்ஜெண்ட்.. ‘இல்லை இவரு சரிப்பட வர மாட்டாரு.. நீங்க கீழ இறங்குங்க..” என்றதும் காரிலிருந்து எகிறி குதிக்கும் வகையில் குள்ளமாய் இருந்தவர் கீழிறங்கி நின்றபடி,  “சார்.. வண்டியில இம்பார்டெண்ட் திங்க்ஸ் எல்லாம் இருக்கு.. ஸோ.. பீ கேர்புல்” என்றார். 

“அதெல்லாம் சரியாய் பாத்துப்பாங்க. என்னய்யா.. வண்டிய பூட்டிட்டியா? இந்தாங்க சாவி. இப்ப ஊதுங்க” என்று மீண்டும் ஸ்ட்ராவை வைத்து ஊத.. மீண்டும் அதே நாதஸ்வர வித்வான் ரியாக்‌ஷன்.  சார்ஜெண்ட் முகத்தில் செம கோபம். ஆனால் காட்ட முடியவில்லை. “சார்.. உங்களுக்கு ஊதத் தெரியாதா?”

“சார்.. நீங்க என்னை ஹராஸ் பண்றீங்க நான் ஊதுறேன். நீங்க இல்லைங்கிறீங்க?” என்றார். கோபம் உச்சத்தில் சார்ஜெண்டுக்கு ஏறியது.. “யோவ் ஒரு ஸ்ட்ரா கொடுய்யா..” என்று ஒர் புதிய ஸ்ட்ரா வாங்கி மிஷினில் பொருத்தி, அதை தன் வாயில் வைத்து வாயை பெரிதாய் உப்பி மிகைப்படுத்தி எப்படி ஊதுவது என்று காட்டி.. “பார்த்தீங்களா? இப்படித்தான் ஊதணும். பாருங்க.. என் ரீடிங்.. 24 ஸோ.. தண்ணியடிக்கலை.. அதே போல நீங்க ஊதுங்க.. நீங்க தண்ணியடிச்சிருந்தாக்கூட குறைவான அளவுன்னா விட்டுருவோம். எங்க ரீடிங்கு மேல வந்தாத்தான் பைன் போடுவோம் அவ்வளவுதான். இதுல என்ன இருக்கு? கமான் ஊதுங்க..” என்று மீண்டும், ஸ்ட்ரா, மிஷின் சொருகல். பார்ட்டியிடம் அதே நாயன ரியாக்‌ஷன்.  

“சார்.. விடுங்க சார்.. இவரை ஸ்டேஷன்ல உட்கார வையுங்க அப்பத்தான் சரிபட்டு வருவாரு.. என்று ஏட்டு ஒருவர் சொல்ல, அதே நேரத்தில் ஒரே ஆளிடம் நேரம் செலவாகிக் கொண்டிருப்பதை பயன்படுத்தி இன்னொரு கான்ஸ்டபிள் தனியாய் ஜுகல்பந்தி நடத்திக் கொண்டிருந்தார்.  சார்ஜெண்டுக்கு கடுப்பு ஏறிப் போய்.. அடுத்தடுத்து சுமார் இருபது ஸ்ட்ராக்களை மீண்டும் மீண்டும் சொருகி, அவரை ஊது.. ஊது.. என்று கிட்டத்தட்ட, “அப்படியே உன் வாய்ல வச்சி” என்று மனதிற்கு நினைத்துக் கொண்டு வடிவேலுவின் ரியாக்‌ஷனோடு, அவரின்  வாய்க்குள் ஸ்ட்ராவை திணிக்க முயற்சிக்க, அந்த மனிதர் கொஞ்சமும் அசராமல் ”இருங்க சார்.. என்ன அவசரம். ஊதணும் அவ்வளவு தானே ஊதுறேன்” என்று தானே வாயில் வைத்துக் கொண்டு, அதே நாயன ரியாக்‌ஷனை கொடுத்தார்.. இந்த ஆட்டம் சுமார் முக்கால் மணி நேரமாய் நடந்து கொண்டிருந்தது. முடிவு என்ன ஆச்சுன்னு பார்பதற்கு முன்னால் என் நண்பர் அழைக்க செல்ல வேண்டியதாகிவிட்டது. என்ன ஆச்சோவென்று தெரியவில்லை.. பட்.. செம்ம எண்டர்டெயின்மெண்ட்.
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்லாவே பொழுது போச்சுன்னு சொல்லுங்க! இந்த போலீஸ்காரங்க திருந்தவே மாட்டாங்க போல!

Vijayan Sundaram said...

good comedy...unga padathula vechuralaam...

நாடோடிப் பையன் said...

Hilarious.