“நேத்து வந்தவன் படமெடுக்குறான். ஆனா ஊரை விட்டு, உறவை விட்டு வந்து, சினிமால கால் ஊன்றதுக்குள்ள எத்தனை போராட்டம்? எவ்வளவு அவமானம்? கூடவே பசி, பட்டினி, குடும்பம், குழந்தை குட்டினு எவ்வளவு அவஸ்தை? இதையெல்லாம் தாண்டி சினிமாவுக்கு நாங்க நேர்மையா இருக்கோம்; அது நமக்குச் சோறு போடுங்கிற நம்பிக்கைய மட்டுமே சுமந்துகிட்டு அலைஞ்சிட்டிருக்கிறப்ப, எங்கயோ அமெரிக்காவுலேயும், சாஃப்ட்வேர்லேயும் வேலை செஞ்சு சம்பாதிச்சு, அந்தக் காசுல நேரா நாலஞ்சு குறும்படம் பண்ணிட்டு, டைரக்டர் ஆகிடுறாங்க. ஆகட்டும் வேணாங்கல.அதுக்காகப் பத்து வருஷ வாழ்க்கையை அடமானம் வச்சி, அதுவழியா கிடைச்ச அனுபவத்தை அவமானப்படுத்துற மாதிரி ‘நீயும் ஒரு குறும்படம் எடுத்துட்டு வா; அப்போதான் கதை கேப்பேன்கிறது என்ன நியாயம்?’ மூச்சுவிடாமல் சிங்கிள் டெலிவரியில் கொதித்துவிட்டார் ஒரு இணை இயக்குநர் நண்பர்.
கிட்டத்தட்ட இருபது படங்களுக்கு மேல் அவர் இணை இயக்குநராகவே இருந்திருக்கிறார். வேலையில் மகா கெட்டிக்காரர். ஒருவகையில் அவரது கோபம் நியாயமானதுதான். இவராவது நாகரிகமான வார்த்தைகளில் சொல்கிறார். பலர் “குறும்படம் எடுக்கும் குரங்குகளே” என்று. க.தி.வ.இ பட தம்பி ராமையா கேரக்டர் ரேஞ்சில்தான் பேசுவார்கள். அவர் சொல்வதுபோல் குறும்பட இயக்குநரெல்லாம் அவ்வளவு சுலபமாக ஜெயித்து விடுகிறார்களா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். அதற்கு என்னிடமே ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது.
யூடியூபுக்கு முன் - யூடியூபுக்குப் பின்
கடந்த பத்து ஆண்டுகளாகப் பிரபலமடைந்திருக்கும் குறும்படங்கள் ஆவணப் படங்களின் வளர்ச்சி குறித்துப் பேச வேண்டுமானால் அதை யூடியூபிற்கு முன் பின் என்றுதான் பேச வேண்டும். பத்து வருடங்களுக்கு முன்னால் குறும்படங்களால் சில லட்சங்கள் நஷ்டப்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் குறும்படம் என்றாலே நம்மூரில் டாக்குமென்டரி படம் என்றுதான் குறிப்பிடுவார்கள்.
குறும்படத்திற்கும், ஆவணப்படத்திற்கும் இடையே இருக்கும் மலையளவு வேறுபாடுகூடப் பலருக்குத் தெரியாது. அதையும் மீறித் தமிழில் வெளிவரும் குறும்படங்கள் எய்ட்ஸ், தீண்டாமை, வாந்தி, பேதி, ஜாதி, மதம் போன்று கருத்துகள் சொல்லாத படத்தைக் குறும்படமாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். வெளிநாட்டுக் குறும்படங்கள் மற்றும், ஆவணப்படங்களைப் பார்த்து நான் பெரிதும் ஈர்க்கப்பட்ட காலம்.
ஏன் தமிழில் இம்மாதிரி குறும்படங்கள், இல்லையென ஒரு வருத்தம் இருந்து கொண்டேயிருந்தது. அதற்கான ஒரு இணையதளத்தை நாமே ஆரம்பிக்கலாம் எனக் குறும்படம் மற்றும் ஆவணப்படங் களுக்காகவே ஷார்ட்பிலிம் இண்டியா.காம் என்ற தளத்தை ஆரம்பித்தேன். அன்றைய காலத்தில் கூகுள் வீடியோவில் மட்டுமே வீடியோக்கள் போட முடியும்.அது மட்டுமில்லாது யூடியூபோ... பிராட்பேண்ட் எனும் அகண்ட அலைவரிசையோ கனவில்கூட நினைக்க முடியாத நேரத்தில் 64 kbps ISDN லைன்தான் ராக்கெட் வேகம்.
உலக அளவில் பல குறும்படங்களை அத்தளத்தில் ஸ்டீரிமிங் வீடியோக்களாய் உலாவ செய்திருந்தேன். அன்றைய காலத்தில் அதற்கான செலவு மட்டும் வருடத்திற்குச் சில லட்சங்கள். என்னதான் நமக்குப் பிடித்த விஷயமாய் இருந்தாலும், செலவிடும் நேரத்திற்கும், பணத்திற்குப் பலனில்லாததால் ஐந்து வருடங்கள் என் ஆர்வத்தின் காரணமாக அத்தொழிலை நடத்திப் பெரும் பணத்தை இழந்தேன்.
டிஜிட்டல் யுகத்தின் பிரம்மாக்கள்
டிஜிட்டல் டெக்னாலஜி வளர, வளர, யார் வேண்டுமானாலும் அவர் விரும்பும் விஷயத்தைக் குறும்படமாய் எடுக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகிக்கொண்டேயிருந்தது. நான் என் முதல் குறும்படத்தைக் கைக்கு அடக்கமான ஒரு வி.ஜி.ஏ. கேமராவில், அதிகமான பொருட் செலவில் அதாவது சுமார் 250 ரூபாய் செலவில் எடுத்தேன்.
அதை எடுக்கும்போது என் உதவியாளராய் இருந்தவருக்கு “ன்னா.. மனுஷன்டா.. இவரே ஷூட் பண்றாரு.. இவரே.. கதை வசனம் எழுதுறாரு. இவரே எடிட் பண்றாரு.. இவரே மிக்ஸிங் பண்றாரு… போற போக்கப் பார்த்தா இவரு மட்டுமே பாப்பாரு போல...” என மனதுக்குள் நினைத்திருப்பார். ஆனால் இவையனைத்தும் எனக்குச் சாத்தியமானதன் காரணம், கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தின் வளர்ச்சி, எடிட்டிங், மிக்சிங் போன்றவை டிஜிட்டலாய் மாற வழிவகுத்த சாப்ட்வேர்களும், என் தனிப்பட்ட ஆர்வமும்தான்.
இப்படி உலகெங்கும் பல இளைஞர்களுக்கு டிஜிட்டல் கேமராக்கள் கை வசப்படக்கூடிய வகையில் இருந்தவர்களுக்கு சினிமா எனும் மாய பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாய் உடைய ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். டிஜிட்டல் யுகத்திற்கு முன்னால் ஓர் ஆவண/ குறும்படம் எடுக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 16 எம்.எம்மில்தான் எடுக்க முடியும். ஒரு சினிமாவிற்கு ஆகும் அதே செலவு அப்படத்திற்குச் செல வழித்தாக வேண்டியிருந்தது.
அப்படியே எடுத்தாலும் அதை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிப்பது என்பது குதிரைக் கொம்பு. திரைப்பட விழாக்களுக்குக் கொண்டுசெல்வது லாபி செய்யத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் விஷயம்.
பிறகு இணையமும் அதன் வேகமும் உலகை உள்ளங்கைக்குக் கொண்டுவர யூடியூபும், சாட்டிலைட் சேனல்களும் வளர, டிஜிட்டல் கேமராக்களும் அதிகமாய் வர ஆரம்பித்து விலையும் சல்லிசாக ஆரம்பிக்க, கள்ளிப்பட்டி குமார் எடுத்த குறும்படத்தை கலிபோர்னியா டேவிட் பார்த்துவிட்டு கமெண்ட் போடும் ஆடியன்ஸ் கிடைத்தபிறகு குறும்படத்தை நோக்கிக் குவிய ஆரம்பித்தார்கள். குறும்படம் எடுத்த அனுபவம் சினிமா எனும் ஆதர்சத்தை நோக்கி படித்த, வேலை பார்க்கும் இளைஞர்கள் படையெடுக்க வைத்தது.
உடைந்து சிதறிய பிம்பம்
சினிமான்னா சும்மா இல்லை. அதுல சேரணும்னா ஏழு கடல், ஏழு மலை தாண்டணும். தலையால தண்ணிக் குடிக்கணும் அப்பத்தான் முதல் வாய்ப்பே கிடைக்கும் என்பது போன்ற பில்ட் அப் பிம்பங்களையெல்லாம் டிஜிட்டல் டெக்னாலஜி வெடி வைத்து தகர்த்துவிட்டது.
இதனால் பழைய டெம்பிளேட்டை உடைத்துக்கொண்டு சில புதிய கலைஞர்கள் வெளிவர, பாரம்பரிய வழியில் முறையாகத் தொழில் பயின்று வந்த குருகுல பாணி உதவி இயக்குநர்களுக்கும், டிரெண்டி குறும்பட இயக்குநர்களுக்குமிடையே ஆன சர்வைவல் பிரச்சினைகள் கோடாம்பாக்கத்தைத் தற்போது குடைந்துகொண்டிருக்கிறது.
குறும்படம் எடுத்து இயக்குநரானவர்களைப் பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, குறும்படம் எடுக்க வேலையை விட்டு, வசதியை விட்டு, நண்பனின் நகையை அடமானம் வைத்து கடன்காரனாகி, மீண்டும் பழைய வேலைக்கும் போக முடியாமல், சினிமா ஆசையையும் விட முடியாமல் நட்டாற்றில் நிற்பவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
மாறாக இரண்டு வழிகளில் எந்த வழியில் வந்து ஜெயித்தாலும், இவர்கள் கொடுக்கிற படம் எப்படிப்பட்டது? சினிமா ரசனைக்கும், சினிமா என்னும் உயர்ந்த கலைக்கும் அது சோறுபோடுகிறதா இல்லையோ என்பதுதான் முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது.
மினி ரிவ்யூ
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து இன்று செல்போனில் படமெடுத்து வெளியிடலாம் எனும் நிலை வந்துவிட்டாலும் டிஜிட்டல் டெக்னாலஜி, கேமராக்கள் பற்றிய அடிப்படை புத்தகங்கள் ஆங்கிலத்தில் பள பளப்பான காகிதங்களில் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் தமிழ்வாசகனைப் பார்த்து வெறுப்புடன் சிரித்த காலம் உண்டு. தற்போது தமிழில் அக்குறையை போக்கிவிட்டது ‘ பிக்ஸல்’ என்ற புத்தகம். ஒளிப்பதிவாளரும், எழுத்தாளருமான சி.ஜே.ராஜ்குமார் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் தமிழில் ஆரம்பகால கேமராவில் ஆரம்பித்து, இன்றைய ப்ளாக்மேஜிக் கேமராவரை தெளிவான விவரித்தலோடும், சட்டெனப் புரியும்படியான எழுத்து நடையோடும், படங்களோடும் வெளிவந்திருக்கும் ஒரே புத்தகம் இதுதான். சினிமா கேமரா டெக்னாலஜியை தாய் மொழியில் படித்துத் தெரிந்து,அறிந்து புரிந்துகொள்வதில் இருக்கும் சந்தோஷத்தைவிட வாசகனுக்கு வேறு என்ன வேண்டும்.
கேபிள் சங்கர் -தமிழ் ஹிந்து
கேபிள் சங்கர் -தமிழ் ஹிந்து
Comments
தாங்கள் கூட பாராட்டிய எனது ”மிச்சக்காசு” என்ற குறும்படத்தை 600 ரூபாவுக்கு தான் செய்தேன் :)