Thottal Thodarum

Jun 2, 2015

Premam


இம்மாதிரியான காதல் பட டைட்டில் படங்களை எல்லாம் சட்டென பார்த்துவிட முடியாதபடி பல படங்களை கடந்து வந்திருந்தாலும், அல்போன்ஸ் புத்ரன், நிவீன் பாலி என்பதால் டிக்கெட் புக் செய்தாயிற்று. ரொம்பவே சிம்பிளான கதை. +2 படிக்கும் போது ஆரம்பிக்கும் ஜார்ஜின் காதல் தான் கதை. 


எனக்கு ஐந்தாம் வகுப்பிலிருந்தே காதல் இருந்திருக்கிறது. ஆண்டாளில் ஆரம்பித்து, சிக்ஸ்த் சசிகலா, எட்டாப்பூ பாத்திமா, பத்தாப்பூம் போது ஹெட்மாஸ்டர் பெண் மாலினி, அப்புறம் நிறைய லிஸ்ட் போய்க் கொண்டேயிருக்கிறது. காதல் தோல்வி சோகம் தான் என்றாலும், நினைத்துப் பார்த்தால் சுவாரஸ்ய முட்டாள்தனங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். முட்டாள்தனம் என்பது கூட இப்போது வளர்ந்து யோசிக்கும் போதுதான்.  தியேட்டரில் வந்து குவிந்திருக்கும் இளைஞர்கள் கூட்டமும், அவர்களின் சிரிப்பும் கும்மாளத்தையும் பார்க்கும் போது ரீவைண்ட் ஆகாத மனசு மனசேயில்லை. அப்போது யோசித்ததுதான் இந்த முட்டாள் தனம் கண்டுபிடிப்பு எல்லாம்.

ஜார்ஜுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய ப்ரச்சனையே காதல் தான். மேரியோடு காதல். அந்தப் பெண் தான் எத்தனை அழகு. பஃப் என சுருள் முடி கேரள கேசமும், துறு துறு கண்ணும், செப்பு போன்ற உதடுகளும். ம்ஹும் அட்டகாசம். அழகான பெண்ணைப் பெற்ற அப்பன்களின் அத்துனை இம்சைகளையும், அந்த அப்பனை இம்சிக்க எல்லா மொக்கை வழிகளையும் யோசிக்கும் இளைஞர்களின் முயற்சியையும் பார்க்க, பார்க்க சுவாரஸ்யம் வழிந்தோடுகிறது. 

அடுத்த காதல் கல்லூரி டீச்சரோடு. அதுவும் தமிழ் டீச்சர். சமயங்களில் அதிரடி அழகில்லாத சாப்ட் லுக் பெண்கள் நம் மனதை கலைப்பார்கள். அப்படியான ஒரு அழகி. தடாலடி மாணவனாய் வலம் வரும் போது நிவீனுக்கும், அவருக்கும் இடையே உருவாகும் காதலும், அந்த டான்ஸ் க்ளாஸும் அடிபொலி. க்யூட் கவிதை.  அதன் பின்னே கண் கசக்கும் சோகம் உண்டென்றாலும், மனதை வருடும் விதமாய்த்தானேத் தவிர நெஞ்சை நக்குவதாய் இல்லை. அதன் பின்னும் ஜார்ஜ் காதல் வயப்படுகிறான். யாரிடம் என்பது ஒர் அட்டகாசமான திருப்பம்.
எந்தவிதமான புதுவித முயற்சிகளும் இல்லாத, திருப்பங்கள் இல்லாத ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகள் தான் என்றாலும் அதை கேண்டிட்டாய் படமாக்கிய விதத்திலும், அப்பெண்களை தெரிவு செய்ததிலும், பின்னணியிசையிலும், ஸ்லீக்கான எடிட்டிங்கினாலும், அழகான கவிதையாகியிருக்கிறது. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். 

பல இடங்களில் கதையென்ற ஒர் வஸ்து நகராமல் இருந்தாலும், நிவீன்பாலியும், மற்ற பெண்களின் ப்ரெசென்ஸ் நம்மை ஆகர்ஷித்து அதை மறைக்கிறது. கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படம் பார்த்துவிட்டு டயர்டே ஆகவில்லை. கடைசி ப்ரேம் வரை தியேட்டரில் இன்னும் ஏதாவது காட்ட மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் இளைஞர்களுக்கும், மிடிலேஜ் காரர்களுக்கும் அப்படி  பிடிக்கும். வாழ்க்கையில காதலைத் தவிர வேறேதுமேயில்லை என்று புரிதல் கொண்டவர்களுக்கான படமில்லை இது. க்யூட்டான ஹீரோ, அழகான ஹீரோயின்கள், ஆபாசமில்லா காதல், ஆட்டோகிராப்பின் மலையாள வர்ஷன் என்று சொன்னாலும், முதுகு குலுக்கி அழாமல், மெலோட்ராமா போடாமல், ப்ளாட்டாய் மயிலிறகால் வருடியது போல், குழந்தையின் முத்தம் போன்ற ஒரு படம். 

பி.கு : முதல் மூன்று நாள் கேரளா கலக்‌ஷன் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேலாம். 

Post a Comment

1 comment:

கிருஷ்ணன் வைத்தியநாதன் said...

//குழந்தையின் முத்தம் போன்ற ஒரு படம்
Nach ending vimarsanam. Appo super padamnu sollunga.