Thottal Thodarum

Jun 3, 2015

The Source -2011 - La Source des femmes

90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர்


ரொம்ப நாளாக பார்க்க வேண்டுமென்று டவுன்லோட் செய்து பார்க்காமல் இருந்த படம். நேற்றிரவு பார்க்க ஆரம்பித்து, தூக்கமே வரவில்லை. அவ்வளவு அழுத்தமான படம். கதையென்று பார்த்தால் மிக சிம்பிளான கதைதான். வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒர் குக்கிராமத்தில் 15 வருடங்களாய் வறட்சி. நெடும்தூரம் நடந்து சென்று அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் வேலை. ஆண்கள் வேலைக்கு போகாமல் ஊர் எல்லையில் டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பவர்கள். ஊருக்கு தண்ணீர் வர வழைப்பதற்காக ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் செக்ஸ் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுகிறார்கள். அதாவது தம்தம் கணவர்களுடன் உறவில் ஈடுபடாமல் ஸ்ட்ரைக் செய்கிறார்கள். நடந்தது என்ன என்பது தான் கதை.


வெட்டியாய் ஊர் கதை பேசிக் கொண்டலையும் கிராமத்து ஆண்கள். ஊரிலேயே எழுதப் படிக்க தெரிந்த பெண்ணான லைலா, அவளது கணவன் சாமி ஸ்கூல் வாத்தியார். நெடும்தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் வழியில் உடன் வரும் கர்பிணிப் பெண்ணின் கரு கலைய, அதிலிருந்து ஏதாவது செய்யணுமே என்று பெண்கள் பேச ஆரம்பிகிறார்கள். ஊருக்கு வரும் டூரிஸ்டுகளிடம் வாங்கும் பணத்தைக் கொண்டாவது ஊருக்குள் தண்ணீர் எடுத்து வரலாமில்லையா? என்று பொம்பளை நீ உன் வேலையப்  பாரு என்கிறார்கள். ஏன் ஆண்களாவது தண்ணீர் எடுத்து வர உதவலாமில்லையா? என்றால் அதற்கு பதிலில்லை. எனவே வீட்டிலுள்ள ஆண்களின் கவனமிழுக்க, செக்ஸ் ஸ்ட்ரைக்கில் ஈடுபட லைலா ஐடியா கொடுக்கிறாள். ஊரில் உள்ள வயதான மூதாட்டியும் ஆதரவு கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் பெண்கள் லைலாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறார்கள். பெண்கள் இப்படி முடிவெடுக்க, ஆண்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் லெவலுக்கு ஆளாளுக்கு கெஞ்சலிலிருந்து, அடிதடி வன்முறை வரை உபயோகித்து செக்ஸ் வைத்துக் கொள்ள, ஊரே மொத்தமாய் கூடி லைலாவை, குற்றம் சாட்டுகிறது. அவளை சாத்தானின் அவதாரம் என்கிறது. இவ்வூரின் மேட்டர் ஸ்ட்ரைக்கால் அவளுடய நாத்தனாரின் திருமணம் தடையாகிறது. மாமியாரின் கோபத்துக்கு ஆளாகிறாள். அவளை ஒதுக்கி வைத்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்லி தன் பிள்ளையை வற்புறுத்துகிறாள்.

சிந்திக்க, வைத்து, படிப்பு சொல்லிக் கொடுத்த கணவனின் அன்பினாலும், ஆதரவினாலும், லைலாவின் போராட்டம் வலுப்பெறுகிறது. ஊர் மொத்தமும் லைலாவின் கணவனை ஒதுக்கி வைக்கிறது. அவனுடய ஆசிரியர் வேலைக்கு உலை வைக்கிறது.  இதன் நடுவில் லைலாவின் சிறு வயது காதலன் அவளை தேடி ஊருக்கு வருகை. தன் காதலைப் பற்றி கணவனிடம் லைலா சொல்வதால் வரும் ப்ரச்சனைகள். ஊர் பெருசுகள் எல்லோரும் சேர்ந்து பக்கத்து ஊர் பெண்களிடம் பேசி அத்தனை ஆண்களுக்கும் மறுமணம் செய்ய ப்ளான் செய்வது. இமாமை மாற்ற ப்ளான். கிழவன் மூலமாய் லெட்டர் கொடுத்து ஓடும் காதல் ஜோடிக் கதை. அதன் பின் உள்ள சோகம் என ரகளையாய் பல பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்க, பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவில் சென்று தங்கள் பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் முன் வைக்க ப்ளான் போடுகிறார்கள் பெண்கள். அப்படி பெண்கள் போய்விட்டால் மானமே போய்விடுமென்று மொத்த ஆண்களும் சேர்ந்து லோக்கல் தீவிரவாத கும்பலிடம் பெண்களைக் கடத்த சொல்லி வைக்க, பெண்கள் திருவிழாவில் வந்தார்களா? தங்கள் கோரிக்கைகளை சொன்னார்களா? அரசு என்ன செய்தது? என்பதுதான் க்ளைமேக்ஸ்.

இதை காமெடி படமாய் விக்கிபீடியாவும் ஐஎம்டிபியும் சொல்கிறது. ஆனால் சொல்லியிருக்கும் விஷயங்கள் படு சீரியஸ். கல்வியினால் பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரம். அது தரும் தைரியம். ஆணாதிக்கத்தை மிக அழகாய் கையாள வைக்கும் உறுதி. லோக்கல் அரசியல். அல்லாவின் பெயரால் எனச் சொல்லி அழுத்தப்படும் பெண்களின் உணர்வுகள். என பல அழுத்தமான விஷயங்களை மிக அழகாய் கையாண்டிருக்கிறது இக்கதை.

லைலாவாக நடித்திருக்கும் லைலா பெக்தியின் நடிப்பும் அழகும் அசரடிக்கிறது. தன்னை மதிக்கும் கணவனிடம் பேசும் போது கண்களில் தெரியும் காதல், உடனிருக்கும் பெண்களிடம் பேசும் போது முகத்தில் தெரியும், குறும்பு, கிண்டல், தீவிரம், இயலாமை என எல்லாவிதமான உணர்வுகளை மிக அழகாய் கொண்டு வந்திருக்கிறார். கணவனிடம் தன் முந்தைய காதலை சொல்லுமிடத்தில் அவரது நடிப்பு அபாரம். உடன் நடிக்கும் பெண்களில் வயதானவரின் நடிப்பு அநாயாசம். மிகச் சாதாரணமாய் பெரிய பெரிய விஷயங்களை, கலாச்சார பிரம்மிப்புகளை தவிடு பொடியாக்கும் பேச்சுக்களை அவிழ்த்துவிடும் நம்மூர் கிழவிகளை கண் முன் நிறுத்துகிறார்.
இமாம் பெண்களை அழைத்து கணவனுக்கு பணிவிடை செய்யாவிடில் அல்லா எவ்வாறெல்லாம் தண்டிப்பார். ஆண் பெண்ணை அடிப்பது குறித்து அல்லா சரியென்றே சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் மூளைச் சலவை செய்ய ஆரம்பிக்க, தீர்க்கமாய் குரானை எடுத்து பிரித்து அதில் சொல்லியிருக்கும் விஷயங்களை படித்துக் காட்டும் லைலாவிற்கு பதில் சொல்ல முடியாமல் இமாம் குலையுமிடம். தன் மனைவியின் காதலனை கொல்வதற்காகப் நிற்கும் போது இருவரும் பேசிக் கொள்ளுமிடம், பெண்கள் அனைவரும் பொது குளிப்பிடத்தில் பேசிக் கொள்ளும் வசனங்கள். தங்கள் சுக துக்கங்களை பாடலாகவே பாடி சொல்லும் காட்சிகள், அற்புதமான விஷுவல்கள், என மனம் பூராவும் நிழலாடிக் கொண்டேயிருக்கிறது.

கேபிள் சங்கர்


Post a Comment

1 comment:

dhandapani said...

Download link please.